மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

இசைத்த ரவியும் எழுதிய ரவியும்

இசைத்த ரவியும் எழுதிய ரவியும்

வனமெல்லாம் செண்பகப்பூ 14 - ஆத்மார்த்தி

பாடல்களைப் பொறுத்தவரை இயக்குநர்களின் பங்கு வெளியே தெரியாத உள் அகல் போலத்தான் பெரும்பாலும் இருக்கும். இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் இம்மூவரில் யார் பெரிய பிம்பமோ அப்போது அவரது ஆதிக்கம் தூக்கலாய்த் தெரிவது இயல்பு. ஒருவேளை மூவருமே பேருருக்கள் என்றால் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்திலும் உருக்கொண்டு நிறைவடையும் வரை அதிகதிக தரச்சோதனைகளைத் தாண்டிய பிற்பாடே இறுதி செய்யப்படும். இயக்குநர் வசம் பாடல் ஒப்படைக்கப்பட்ட பிறகு அது இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என்று வேறொரு கூட்டணிக்கு முன்னிருக்கும் சவாலின் இரண்டாம் அத்தியாயம் தொடங்கும். இது சினிமாவின் உருவாக்க முறையில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிற நடைமுறைதான்.

இயக்குநரே பாடல் எழுதுவது பிற்காலத்தில் செல்வாக்குப் பெற்றது. அகத்தியன், ஆர்.வி உதயகுமார் உள்ளிட்ட பலரும் தங்கள் படங்களின் எல்லாப் பாடல்களையும் தாங்களே எழுதினார்கள். டி.ராஜேந்தர் எல்லா வரிசையிலும் மாறி மாறி நிற்கும் ஒருவராகவே அறியப்பட்டவர். அவர் இயக்கி அவரே இசைத்து அவரே எழுதிய பாடல்கள் பெரிதும் ரசித்து வரவேற்கப்பட்டது அறிந்த கதை. உதவி இயக்குநராகப் பணியாற்றும் படத்தில் பாடல் எழுதுவது எப்போதாவது வாய்க்கும் அரிதான நிகழ்வுதான். இன்றைய காலத்தில்கூட அது அடிக்கடி பலித்து விடக்கூடும். எண்பதுகளின் ஆரம்பத்தில் அப்படித்தான் அசோசியேட் இயக்குநராகப் பணிபுரிந்த படத்தில் ஒரு பாடலை எழுதி அதுவும் இளையராஜா இசையில் சூப்பர் ஹிட் ஆக உருமாறியும் தொடர்ந்து பாடல்களை நோக்கித் தன் படகைச் செலுத்தாமல் போன ஒருவர்தான் எஸ்.என்.ரவி. இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனின் உதவியாளராக இவர் பங்கேற்ற ராணித்தேனி படத்தில் ரவி எழுதிய, ‘என்ன சொல்லி நானெழுத என் மன்னவனின் மனம் குளிர’ என்ற பாடல் எப்போது கேட்டாலும் தேன்.

பாடலின் ஆரம்பத்தில் தொடர் சொடக்கோசை தொடங்கிப் பாதிப் பல்லவி வரை முதனொலியாக நிலைத்து அடங்குகிறது. இதே மாதிரியான ஒலிக்கோவையை இசைஞானி தனது ஆரம்பப் படங்களில் ஒன்றான உறவாடும் நெஞ்சம் படத்தில் ஒருநாள் உன்னோடு ஒருநாள் பாடலில் பயன்படுத்தி இருப்பார். அதையே இந்தப் பாடலில் வேறு வகையான தோன்றலைத் தந்து ஒலிக்கச் செய்தது இன்னும் ரசம் கூட்டுகிறது. ராஜா இசையில் அதிகம் பாடல்களைப் பாடிய பாடகியர் வரிசையில் சித்ரா, ஜானகி, வாணி ஜெயராம், சுஜாதா, ஸ்வர்ணலதா எனப் பல பேருக்கு அப்பால்தான் சுசீலாவின் பெயரை எழுத முடியும். என்ன ஒரு விசேஷம் என்றால் இளையராஜா எப்போதெல்லாம் சுசீலாவை அழைத்துப் பாடச் செய்தாரோ அவை எல்லாமே கிட்டத்தட்ட சூப்பர் ஹிட் பாடல்களாகவே அமைந்தன என்பதுதான்.

இந்தப் பாடல் முழுவதும் சுசீலாவின் பேராற்றல் துல்லியமாகப் புரியவருகிறது. எல்லோராலும் கொண்டுவர முடியாத சின்னச்சின்ன உணர்தல்களைத் தன் பாடல்களில் ஆங்காங்கே விரவிச் செல்வது சுசீலா பெற்றுவந்த நல்வரம். இன்னும் சொல்வதானால் அப்படியான நிரவல்களைக்கூட இரண்டு வகையாகச் சுட்டமுடியும். தன் யூக பிரயாசையினின்றும் சுசீலா செய்து காட்டும் வித்தகம் அவற்றில் ஒருவகை. அதைக்கூட அவரது திறன்வழி பெயர்ந்துவருவதாக ஒரு குப்பிக்குள் அடைத்து விட முடியும். இன்னொன்று சுசீலா தன்னை அறியாமல் சன்னத விள்ளலாகவே போகிறபோக்கில் பாடிச் செல்வது. இதை அவர் எல்லா இசை மேதைகளின் பாடல்களிலும் செய்திருக்கிறார் என்றாலும் இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றில் சிகரத்தின் உச்சியில் மலர்ந்த ஒப்பிலா பனிப்பூ எனவே அவற்றை நிகழ்த்தினார்.

மனம் அடைந்திருக்கிற சஞ்சலத்தை முடிவெடுக்க இயலாத குழப்பத்தைப் பரிவு தேடும் சிறு அன்பைக் குறைந்த தூரம் சென்று மீளும் தேவையற்ற நடையொற்றுகிற பாதங்களின் அலைதலை கண்ணில் தேங்கி நிற்கிற பிடிவாதத்தை மறுதலிக்க வேண்டி மனத்தைத் தூக்கம் கோரி இறைஞ்சுகிற உட்குரலை மன்னிப்பின் பாதிப் பிரேரணையில் அடுத்த சிறு அன்பை எடுத்து வழங்குகிற பெரிய மனத்தை சலனித்தல் ஏதுமற்ற ஆழ்நதிக் குளிர்தலை என சுசீலா இந்தப் பாடலில் நிகழ்த்திக் காட்டுகிற நுட்பங்கள் அலாதியானவை.

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும் வெட்கம் விடுமோ

ஹோய்... (என்ன சொல்லி)

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன் என்ற ஒரு வரி ரவியின் கவிமேதமைக்கு சான்று. போகிற போக்கில் வந்து விழுந்தாற்போலத் தோன்றினாலும் இப்படியான வரிகள் ஆகச் சிறந்தவை, அபூர்வமானவை. வாதை என்ற சொல் கவிதைகளுக்கானது. அதைக் கொண்டுவந்து பாடல் ஒன்றில் இடம் தருவது ஜாலவித்தை. அதுவரை தனிமையின் பிரார்த்தித்தலைப் பாடலாக்குவதற்காகப் பயன்படுத்தப் பட்ட எந்தச் சொல்லையும் தான் சார்ந்திராமல் புதிய ஊற்றெனவே தன் பாடலை எழுதினார் ரவி.

அறியாதவள் நான் தெரியாதவள்

உன் அனுபவம் ஏதும் புரியாதவள்

எத்தனையோ தோணுது மனசினிலே

அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்

என்ன சொல்ல... எப்படி எழுத... ம்ம்ம்ஹூஹூம்...

மஹாராஜ ராஜஸ்ரீ...

காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன்

பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்

கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்

கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே

கண்ணான கண்ணா... கண்ணா... கண்ணா... (என்ன சொல்லி)

மிக எளிமையான சொல்லாடல்களால் இத்தனை பலமாக ஒரு பேரன்பை எடுத்துரைக்க முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சாட்சி. கண்ணனின் என்று வந்திருந்தால் சாதாரணமான மற்றொன்றாகக் கலந்து கரைந்திருக்க வேண்டியது கண்ணாவின் என்று சொல்லப்பட்ட விதத்தாலேயே இன்னும் எத்தனை கேட்டாலும் முதன்முறை போலவே கிறங்கடிக்கிறது

இதயம் துடிக்குது என் செவிக்கே கேட்குதம்மா... கேட்குதம்மா

வளையல் நடுங்குது வாய் வார்த்தை குளறுதம்மா... குளறுதம்மா...

என்ன செய்ய.. என்ன செய்ய... ம்ம்ம்ஹூஹூம்...

காத்தாடி போலானேன்

என் கண்ணுக்குள்ளே நோயானேன்

பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்

கல்யாண காலம் வந்தபின்பு மாறும்

நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ

கண்ணான கண்ணா... கண்ணா.. கண்ணா... (என்ன சொல்லி)

லேசாக நின்று மீண்டு மறுபடி ஓங்குகிற பாடல்களை ராஜா ரசித்து ருசித்து அமைத்தார் எனிற் பொருந்தும்.

இன்னொரு ரவி ஏற்கனவே இதே தொடரின் 8ஆம் அத்தியாயத்தில் சௌ பார் பனா லேங்கே என்ற உஸ்தாதோன் கி உஸ்தாத் படப் பாடலைப் பேசும்போது அதன் இசையமைப்பாளர் பாம்பே ரவி குறித்தும் பேசியிருக்கிறோம். அவரது இசைவார்ப்பில் உருவான தமிழில் 1982ஆம் ஆண்டு ஸ்பரிசம் என்ற திரைப்படம் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் வெளியானது.

ஊடல் சிறு மின்னல் குளிர் நிலவே வாடலாமா என்ற பாடல் இங்கே கவனம் பெறுகிறது. வழமையிலிருந்து விலகி ஒலிக்கும் அதன் இடையிசைக் கோவைகளுக்காகவும் பாடல் நகர்ந்து செல்லும் விதத்துக்காகவும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலுக்காகவும் புத்தம் புதிய இசை மெட்டுக்காகவும் கவனம் கோருகிறது. இதே படத்தில் தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ்.பி.சைலஜா பாடிய ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து என்று ஆரம்பிக்கிற வேகத்தாள இசைப்பாடல் ஒன்றும் ரவியின் இசைத்திறனை எடுத்துரைக்கும். இந்தியிலேயே தன் பிரதான கவனத்தைக்கொண்டியங்கிய பாம்பே ரவி புதுமையான பிரதி செய்யாத தனித்துவ இசைக்கு உரித்தானவர் எனும் கூற்றை அதிக கனத்தோடு எடுத்துரைத்து நிறுவுகிறது ஸ்பரிஸம் படத்தின் பாடல்களும்.

வாழ்க இசை

கண்ணுக்குள் காதல் வேர்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon