மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

காவிரி நீரை வணங்கி வரவேற்ற டெல்டா!

காவிரி நீரை வணங்கி வரவேற்ற டெல்டா!

மேட்டூரில் திறந்துவிடப்பட்ட தண்ணீரானது காவிரியின் கிளை ஆறான கொள்ளிடம் வழியாக கடைமடை பகுதிகளைச் சென்றடைந்தது.

தமிழகம் முழுவதும் 40.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரினை ஆதாரமாகக் கொண்டு தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை என டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் 13 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 13ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அங்கிருந்து அடுத்த சில நாட்களில் முக்கொம்பு மேலணையை கடந்து கல்லணைக்கு தண்ணீர் வந்துசேர்ந்தது.

சம்பா சாகுபடிக்காக 6 அமைச்சர்கள் மலர்த்தூவ கடந்த 17ஆம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அங்கிருந்து கொள்ளிடத்திற்கு பாய்ந்தோடிவந்த காவிரி நீர், கிளை ஆறுகள் மூலம் காவிரியின் கடைமடைக்கு பயணித்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியாக கடைமடையில் அமைந்துள்ளது தா.பழூர் ஒன்றியம். தண்ணீரை எதிர்பார்த்து கடைமடைப் பகுதிகளிலுள்ள கிராமங்களில், ஆறுகளில் உள்ள முட்களை சுத்தம் செய்து அதனை தீயிலிட்டு கொளுத்தி ஏற்கனவே தயார்ப்படுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் கல்லணையில் நீர் திறந்துவிடப்பட்ட தண்ணீரானது அரியலூர் மாவட்டம் குருவாடிக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து தா.பழூர் ஒன்றியத்தில் நடவுப் பணிகளுக்காக பொன்னாற்றில் நீர் திறந்துவிடப்பட்டது.

பொன்னாறு வழியாக காவிரி கடைமடை பகுதிகளான காரைக்குறிச்சி, இடங்கண்ணி உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வந்துசேர்ந்தது. நொதித்து நுரை பொங்க வரும் காவிரித் தாயை இடங்கண்ணி கிராமத்தில் விவசாயிகளும், பெண்களும் ஒன்று திரண்டு சூடம் ஏற்றி வழிபட்டும், வணங்கியும் வரவேற்றனர். அதுபோலவே வழிநெடுகில் இருக்கும் ஊர்களிலும் வரவேற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயி கார்த்தி, “ஒவ்வொரு வருடமும் ஆடி 18 அன்றே எங்கள் கிராமங்களில் தண்ணீர் வந்துசேர்ந்துவிடும். புதுமணத் தம்பதிகள் தாலி மாற்றும் நிகழ்வும் பொன்னாற்றிலேயே நடத்திவிடுவோம். ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே தாமதமாகவே தண்ணீர் வருகிறது. தற்போது இந்த நீரைக் கொண்டு நாங்கள் நடவுப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பிப்போம். ஆனால் காவிரியிலிருந்து தொடர்ந்து நீர் வந்தால் மட்டுமே வைக்கும் பயிரை எங்களால் காப்பாற்ற முடியும்” என்று தெரிவிக்கிறார்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon