மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

தீவிரவாதிகள் ஊடுருவல்: டிஜிபி முக்கிய அறிவிப்பு!

தீவிரவாதிகள் ஊடுருவல்: டிஜிபி முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீர் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு தமிழகத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலைத் தொடர்ந்து தமிழகக் காவல்துறைக்கு உளவுத் துறை எச்சரிக்கை குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், ’இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஆறு தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். இதில் ஒரு தீவிரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்தவர், மற்ற 5 பேர் இலங்கை தமிழ் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் தங்களது அடையாளத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கத் திலகம் இட்டிருப்பார்கள். இந்த 6 தீவிரவாதிகள் தற்போது கோயம்புத்தூரில் முகாமிட்டுள்ளனர். இதில் பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதியின் பெயர் இலியாஸ் அன்வர் என்பது தெரியவந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் லக்‌ஷர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இதில் சிலர் இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு உடையவர்கள என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு, மேற்கு மண்டல போலீஸ் ஐஜி கே. பெரியய்யா மேட்டுப்பாளையம் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் மேற்கொண்டு வரும் சோதனைகளைப் பார்வையிட்டு வருகிறார். இவரைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கோவைக்கு விரைந்துள்ளார். கோவை மாநகரில் மட்டும் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு மீட்பு பிரிவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோயில்கள், தேவாலயம், மசூதிகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உரியப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்படவேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே கோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் புகைப்படம் வெளியானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், கோவையில் ஊடுருவிய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் ஏதும் போலீசாரால் வெளியிடப்படவில்லை. உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon