மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

சென்னைக்கு வயது மில்லியன் ஆண்டுகள்!

சென்னைக்கு வயது மில்லியன் ஆண்டுகள்!

சென்னை தின சிறப்புக்கட்டுரை!

சென்னைவாசிகளே, நீங்கள் தொல்லியல் எச்சங்களின் மேல் நடந்து கொண்டிருக்கிறீர்கள்!

இதை நான் உரக்கச் சொன்னால் நீங்கள் என்னை சந்தேகமாகப் பார்க்கலாம். ஆனால் உண்மை அது தான். சென்னை போன்ற தொல்லியல் எச்சங்கள் நிறைந்த நகரை நீங்கள் பார்ப்பது மிகக் கடினம். சென்னை என்பது இப்போதைய குறுகிய நகரம் அல்ல. வடக்கே கொற்றலையாறு தொடங்கி, தெற்கே பாலாறு வரை விரிந்திருந்த, கடலை ஒட்டிய பாக்கங்களும், பட்டினங்களும், சேரிகளும் நிறைந்த நெய்தல் நிலப்பகுதி. இந்த பிரம்மாண்ட நிலப்பரப்பில் என்னென்ன தொல் பொருள்கள் கிடைத்தன, அவை இப்போது எங்கே இருக்கின்றன என்றும் பார்க்கலாம்.

பல்லாவரம், குடியம்- மெட்ராஸ் கைக்கோடரி தொழிற்சாலை!

(பல்லாவரம் கற்கோடரி )

இந்தப் பெரும் நிலப்பரப்பில் கிடைக்கப்பெற்ற முதல் தொன்மைப் பொருள் கற்கோடரி ஒன்று. 1863ஆம் ஆண்டு ராபர்ட் புரூஸ் ஃபுட் என்ற ஆங்கிலேயர் இன்றைய பல்லாவரம் பரேடு மைதானப் பகுதியில் ஆதி மனிதன் கையால் செதுக்கிய கற்கோடரி ஒன்றைக் கண்டெடுத்தார். சுமார் 1.7 மில்லியன் ஆண்டுகள் தொன்மையான அந்தக் கோடரி தான் இந்திய துணைக்கண்டத்தில் கண்டெடுக்கப்பட்ட முதல் கற்கோடரி. தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்திலும், லண்டன் அருங்காட்சியகத்திலும் இவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன!

புரூஸ் ஃபுட்டின் கண்டுபிடிப்பு இந்தியத் தொல்லியல் துறையை விழித்தெழுப்பியது. அதன் பின் ஆற்றங்கரையில் சீராகப் பயணித்து, கையால் தீட்டப்பட்ட கல் ஆயுதங்களைத் தேடிய ஃபுட் வந்து நின்ற இடம் குடியம். அதற்கு அவர் இட்ட பெயர் "மெட்ராஸ் ஹாண்ட் ஆக்ஸ் ஃபாக்டரி"- மதராஸ் கைக்கோடரி தொழிற்சாலை! அங்கும், அதை ஒட்டிய அத்திரம்பாக்கம் பகுதியிலும் ஏக்கர் கணக்கில் பரவிக் கிடக்கின்றன இந்தக்கோடரிகள். தொல்பழங்கால மக்களின் வாழ்விடமான அத்திரம்பாக்கத்தில் 3.5 மில்லியன் ஆண்டுகள் தொன்மையான குவார்ட்சைட் பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்கருவிகள் சமீபத்தைய ஆய்வுகளில் கிடைத்துள்ளன.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்லாவரத்தில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய மாதிரி அகழாய்வின் மூலம் பழைமையான ஈமப் பேழை ஒன்று கிடைக்கப்பெற்றது. இந்த அகழாய்வில் பங்கெடுத்த தொல்லியல் ஆய்வாளர் காயத்ரி ஈமப்பேழை குறித்து தெரிவிக்கும் கருத்துக்களை கீழேயுள்ள இந்த இணைப்பில் காணலாம்.

கிண்டி பானை ஓடுகள்!

குடியமா…ஆது நகரில் இருந்து தொலைவாயிற்றே…இங்கே பக்கத்தில் எதுவும் இல்லையா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், சபாஷ், முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் சென்னையின் சரியான குடிமகன்/குடிமகள். இன்றைய கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் பகுதியில் மண் பானை ஓடுகளும், தாழிகள் சிலவும் மண்ணுக்கடியில் தோண்டுகையில் கிடைத்தன என்றும், அவற்றை ஆதிச்சநல்லூரை வெளிக்கொணர்ந்த அலெக்சாண்டர் ரீயிடம் கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனரான கர்னல் கிங் தெரிவித்ததாகவும் செய்திகள் சொல்கின்றன. அங்கு அகழப்பட்டவை இப்போது எங்கு இருக்கின்றன என்பது தெரியவில்லை, அவற்றைக் குறித்த மேலதிக தகவல் எங்கும் இல்லை!

சேத்துப்பட்டு தொன்மை ஊறு குழிகள்!

சேத்துப்பட்டு என்ற நகரின் இதயப் பகுதியின் தொல்லியல் எச்சங்கள் குறித்து சரியாக எழுதி ஆவணப்படுத்தி இருக்கிறார் ஒரு ஐரோப்பியர். இன்று சேத்துப்பட்டு எகோ பார்க் அமைந்துள்ள இடம் முதல், பூந்தமல்லி சாலையைக் கடந்து லாங்டன் சாலை அமைந்துள்ள நேர்கோட்டில், 1920களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டார் லூயி ஏமி காமியேட் என்ற அதிகாரி.

சேத்துப்பட்டு கிராமத்தின் கைவிடப்பட்ட செங்கல் சூளைகளை அவர் ஆராய்ந்த போது, அவற்றில் உறை கிணறுகள் போன்ற அமைப்புகள் இருந்ததை கண்டறிந்தார். கிட்டத்தட்ட 10 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருந்த இந்த கிணறு போன்ற அமைப்புகளில் வைக்கப்பட்டிருந்த "உறைகள்" வழக்கமாக வைப்பவற்றை விட உயரமானவை, களிமண்ணும், உமியும் கலந்து கட்டப்பட்டிருந்தன. கழிவு நீரை மண்ணுக்குள் அகற்றும் தொன்மையான ஊறு குழிகள் அவை!

தரை மட்டத்தில் இருந்து சில 7 முதல் 8 அடி ஆழத்தில் 12 ஊறு குழிகளைக் கண்டுபிடித்து அவற்றிலிருந்து சில பொருள்களை அகழாய்ந்தார். ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற மணிகள் போன்ற சில மணிகள், மண் பானை ஓடுகள் மற்றும் சுடுமண் சிற்பங்கள் சில கிடைத்தன. அவை எங்கு தற்போது இருக்கின்றன என்பது தெரியவில்லை. ஆனால் சுடுமண் சிற்பங்களில் ஒன்று 'அமர்ந்த நிலையில் உள்ள சிவன்' என்று அவரால் கேட்டலாக் செய்யப்பட்டு, இங்கிலாந்தில் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் 'சேத்துப்பட்டு சிவன்' என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

(சேத்துப்பட்டு சுடுமண் சிவன்)

சிற்ப அமைப்பு, ஊறு குழிகள் அமைப்பைக் கொண்டு பல்லவர் கால சிற்பம், அங்கு கிடைத்தவை பல்லவர் காலமான பொ.யு. 6-9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்பது அவரது கணிப்பு. பெரும் செங்கற்சுவர்கள் சில அங்கு இருந்ததையும் உறுதி செய்கிறார் ஆய்வாளர் கமியேட். ஊறு குழிகளின் படங்களை வரைந்து விளக்குபவர் அவற்றைப் பல்லவர் ஊறு குழிகள் என்றே எழுதுகிறார். ஆனால், ஆதிச்சநல்லூர் பொருள்களின் வயது பொ.யு.மு.905- பொ.யு.698 என்று தற்போது கணக்கிட்டிருப்பதால், இவையும் அந்த காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்! ஆக, சேத்துப்பட்டு கிராமம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு சிறு குடியிருப்பாகவேனும் இருந்திருக்க வேண்டும்.

கீழ்ப்பாக்கம் இரும்புக்கால எச்சங்கள்!

(கீழ்ப்பாக்கம் ஈமப்பேழை)

சேத்துப்பட்டு இத்தனை தொன்மையானது என்றால்…கீழ்ப்பாக்கம் மட்டும் என்ன தொக்கா? அதுவும் அதே தொன்மையுடையது! இதை நிறுவியவர் ஒரு பிரெஞ்சுக்காரர். 1934ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாள் இன்றைய ஹால்ஸ் சாலை பகுதியில் உள்ள "ஃபான்டெனாய்" என்ற பங்களா வீட்டின் தோட்டத்தில் வந்து இறங்கினார்கள் மதராஸ் அருங்காட்சியக அதிகாரிகளான எஃப்.ஹெச்.கிரேவ்லி, டி.ஜி.ஆராவமுதன் மற்றும் எம்.டி.மாதவன். அவர்களை அங்கு அழைத்தது வீட்டின் உரிமையாளரான பிரெஞ்சுக்காரர் எட்கர் புரதோம். அன்றைய மௌன்ட் ரோடில் 'மியூசி மியூசிக்கல்ஸ்' என்ற இசைக்கருவிகள் கடையை நடத்திய புரதோம், பெரும் கப்பல்கள் கொண்டு இறக்குமதி ஏற்றுமதி செய்து கொண்டிருந்த பிரபல வணிகர்.

(கீழ்ப்பாக்கம் எட்கர் புரதோம் )

புரதோம் தன் வீட்டின் தோட்டத்தில் கிணறு ஒன்றை தோண்டப் போக, மண்ணுக்கடியில் இருந்து முளைத்தது சுவர் ஒன்று. இன்று கீழடியில் வெளிவந்த பெரும் செங்கல்கள் கொண்ட சுவர் போல பெரும் சுடு செங்கல்கள் கொண்ட அந்தச் சுவற்றின் செங்கற்களை, தன் கிணற்றுக்குப் பயன்படுத்திக்கொண்டார் புரதோம். ஆனால் மீண்டும் ஏதோ ஒரு பணிக்கு வாணம் தோண்ட, மீண்டும் மண்ணுக்கு அடியில் மண் பாண்டங்கள், பானை ஓடுகள் போன்ற தொன்மைப் பொருள்கள் கிடைக்க, அவற்றை பத்திரப்படுத்தியவர், அருங்காட்சியகத்துக்குத் தகவல் தந்தார். 40 அடிக்கு 20 அடி பரப்பில் குழிகளை வெட்டி, புரதோமின் தோட்டத்தில் அகழாய்வு செய்யத் தொடங்கினார்கள் அருங்காட்சியக அதிகாரிகள்.

(கீழ்ப்பாக்கம் முதுமக்கள் தாழிகள்)

மண் பாண்டங்கள், மயில் போன்ற பறவை உருவத்தில் பானை மூடி ஒன்று, மணிகள் போன்றவை முதலில் கிடைத்தன. அடுத்து நான்கரை அடி உயரமும், இரண்டு அடி அகலமும் கொண்ட முதுமக்கள் தாழிகள் இரண்டு கிடைத்தன. அகழாய்வுப் பணி நடைபெற்ற நாள்கள் முழுக்க அங்கேயே குடையுடன் அமர்ந்திருந்து மேற்பார்வை செய்தார் புரதோம் என்ற அந்த உன்னத மனிதன். பின்னாளில் வாத நோயால் கைகால்கள் செயலற்றுப் போன பின்னும், நகரில் இரண்டாம் உலகப் போருக்கு நேர்ந்து கட்டப்பட்ட மேரி இம்மாகுலேட் ஆலயத்துக்கு தன் நிலத்தையும் தந்து, பண உதவியும் செய்தார் இந்த உயர்ந்த மனிதன்!

அகழாய்வில் மாமரம் ஒன்றின் வேர்களுக்குள் சிக்கியிருந்த ஆறடி நீளமும், ஆறு கால்களும் கொண்ட ஈமப்பேழை ஒன்றும், இரும்பு மண்வெட்டி, கம்பிகள் போன்றவையும் கிடைத்தன. இவற்றைக் கொண்டு இந்தப் பொருள்களின் காலம் இரும்புக்காலமான பொ.யு.மு. 500 முதல் பொ.யு. 300 வரை இருக்கலாம் என்று கணித்தனர் ஆய்வாளர்கள். இந்த முதுமக்கள் தாழிகள் இரண்டும் தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தின் சேகரத்தில் உள்ளன. 2500 ஆண்டுகள் தொன்மையான இந்தப் பொருள்கள், அவற்றின் சரியான காலகட்டத்தை ஆராய தெர்மோலூமினசன்ஸ் டேட்டிங் எனப்படும் காலக் கணிப்பு முறைக்கு உட்படுத்தப்பட்ட தகவல் இல்லை என்பது பெரும் சோகம். இங்கு அகழப்பட்ட முதுமக்கள் தாழிகள் தவிர பிற பொருள்கள் இருக்குமிடமும் அறிய முடியவில்லை!

மாம்பலம்- அகஸ்டஸ் சீஸரின் வெள்ளி தினாரா!

(மாம்பலம் அகஸ்டஸ் சீஸரின் தினாரா மாதிரி )

1929ஆம் ஆண்டு லாங் டேங்க் என்ற ஏரி தூர்க்கப்பட்டு மாம்பலம் கிராமம் உருவாகிக் கொண்டிருந்த காலம். அப்போது அங்கு மண்ணுக்கடியில் கடைக்கால் நிறுவ தோண்டுகையில் மண் பானை ஒன்றில் 771 வெள்ளிக்காசுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 770 காசுகள் "கர்சாபணம்" என்று சொல்லப்படும் முத்திரைக் காசுகள். 1 வெள்ளிக்காசு மட்டும் பொ.யு.மு.27 முதல் பொ.யு.14ஆம் ஆண்டு வரை ரோமையில் ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசரின் உருவம் பொறிக்கப்பட்ட தினாரா என்ற வெள்ளிக்காசு! இந்தக் காசுகள் கிடைத்ததாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது அவை எங்கு இருக்கின்றன என்பது தெரியவில்லை!

சாந்தோம் ரவுலட்டட் வேர் பானை ஓடுகள்!

1893ஆம் ஆண்டு சாந்தோம் தேவாலயம் இடித்து புதிய தேவாலயம் கட்ட பணிகள் தொடங்கியது. அப்போது அங்கிருந்து பழைய கல்லால் ஆன தேவாலயத்தின் தூண்களும், சில பானை ஓடுகளும், எலும்புகளும் கிடைத்தன. அதன் அருகில் உள்ள ஆயர் இல்லம் கட்டப்படும் போது சோழர் காலக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவை இன்றும் ஆலயத்தின் பின்புறமுள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

(சாந்தோம் ரவுலட்டட் வேர் பானை ஓடு (அரிக்கமேடு மாதிரி)

1960களில் ஆலய புனரமைப்புப் பணிக்கு மீண்டும் தோண்டுகையில் மண் பானை ஓடுகள் சில கிடைத்தன. சுழல் பல்வட்டக்கருவி கொண்டு புள்ளிகள், வரிகள் செதுக்கப்பட்ட 'ரவுலட்டட் வேர்' எனப்படும் கரிய நிற பானை ஓடுகள் சிலவும், சீன பானை ஓடுகளும் அப்போது கிடைத்தன. இவை புதுவையை அடுத்த அரிக்கமேடு பகுதியில் கிடைத்த 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடுகளை ஒத்தவை என்பதால் அதே காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. இவற்றின் மீதும் மேற்படி ஆய்வுகள் நடைபெறவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக இவற்றை ஆலய நிர்வாகம் பாதுகாத்து வைத்துள்ளது.

சாளுவன்குப்பம் சேயோன் கோயில்!

2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை வெளிக்கொணர்ந்த அதிசயம் சாளுவன்குப்பம் சேயோன் கோயில்! மாமல்லபுரத்தை ஒட்டிய புலிக்குகைப் பகுதியில் சுனாமி நீர் நீங்கிய போது வெளிப்பட்ட சிதிலங்களை ஆய்வாளர்கள் சிலர் தோண்டி எடுக்க, வெளிவந்தது இந்த அற்புதம். பொ.யு.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ.யு.3ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் செங்கல் கொண்டும், அதன் மேல் பொ.யு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் கற்றளி ஒன்றும் கட்டப்பட்டது புலப்பட்டது. தமிழகத்தில் அகழாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் கட்டுமானத்திலேயே தொன்மை வாய்ந்ததாக இதைக் கருதுகிறார்கள் சில ஆய்வாளர்கள்.

வடக்கு நோக்கி அமைந்த இந்தத் திருக்கோயில் குறிஞ்சி நிலத் தலைவனான சேயோனுக்கு அமைந்ததாலும்; பிற சிற்ப சாத்திரங்கள் அமையும் முன்பே வடக்கு நோக்கி அமைந்திருப்பதாலும்; பிற கடவுளர் வழிபாட்டுக்கு முந்தைய சங்க காலக் கோயிலாக, சிற்ப சாத்திரங்கள் தோன்றுவதற்கு முந்தைய தொன்மைக் கோயிலாகலாம் இது என்று கருதுகிறார்கள் ஆய்வாளர்கள்.

(சாளுவன்குப்பம் சேயோன் கோயில் )

ஆக வடக்கே குடியம் முதல் தெற்கே மாமல்லபுரத்து சாளுவன்குப்பம் வரை எக்கச்சக்க தொல்லியல் எச்சங்களின் மேல் நாம் தினசரி நடந்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கிறோம். 380, 652 என்று நகரின் ஆயுள் தேதி, ஆண்டு வரையறைக்குள் சிறைப்பிடிக்க விழைகிறோம். சென்னை இவற்றுக்குள் அடங்கும் வெற்றிடம் அல்ல; அது மிகப் பிரம்மாண்டப் பெருவெளி! நதிக்கரைகளை நாகரிகத்தின் தொட்டில் என்று சொல்கிறோம். கூவமும் அடையாறும், கொற்றலையாறும், பாலாறும் ஈன்றெடுத்த நாகரிகம் சென்னை நாகரிகம்! இனிய சென்னை நாள் வாழ்த்துகள்!

(கி.மு - கி.பி என்பது இங்கு பொது யுகத்துக்கு முன் - பொது யுகம் என்பதைக் குறிக்கும் விதமாக பொ.யு.மு - பொ.யு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது)

கட்டுரையாளர் குறிப்பு

கட்டுரையாளர் நிவேதிதா லூயிஸ், சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். எதுவும் யாருக்கும் சொந்தம் இல்லை என்று நம்புபவர். அனைவரும் சரிநிகர் சமமே என்ற கோட்பாட்டைக் கொண்டவர். நாத்திகம் பேசினாலும், வழிபாட்டு தலங்கள், பொது இடங்கள் எல்லாவற்றின் வரலாறு மீதும் அளப்பரிய ஆர்வம் உண்டு. எங்கோ, என்றோ இவர் எழுத்து ஒருவரை அமைதியாய் அமர்ந்து சிந்திக்கவைக்கும் என்றால், பண்படுத்தும் என்றால், சோர்வுறும் வேளையில் ஒரு துளி தேனாகும் என்றால், அதுவே தன் பெருவெற்றி என்கிறார். தற்போது அவள் விகடன் இதழில் 14 நாள்கள், முதல் பெண்கள் என்ற இரண்டு பத்திகள் எழுதி வருகிறார். வரலாற்றில் பெண்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியும், எழுதியும் வருகிறார்.


மேலும் படிக்க


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


ப.சிதம்பரம்: ‘வச்சி செய்த’ வரலாறு!


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


யாரைத்தான் நம்புவதோ முதல்வர் நெஞ்சம்: பொறுப்பு முதல்வர் இல்லை!


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon