மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

சிறப்புக் கட்டுரை: புவியின் நுரையீரல் எரிந்துகொண்டிருக்கிறது!

சிறப்புக் கட்டுரை: புவியின் நுரையீரல் எரிந்துகொண்டிருக்கிறது!

நரேஷ்

மாலை 4 மணி. சாவ் பாலோ ’São Paulo’ எனும் நகரத்தை இருள் சூழ்ந்தது. நகரம் ஸ்தம்பித்தது. சூரியன் முழுவதுமாக மறைந்திருந்தது. காரணம் கருமேகங்கள் அல்ல, கரும்புகை. அதுவும் 3,200 கிலோமீட்டருக்கும் அப்பால் எரிந்துகொண்டிருக்கும் ஒரு காட்டுப் பகுதியிலிருந்து கிளம்பிவந்த புகை!

இத்தனை 1,000 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து ஒரு நகரையே மறைக்கும் அளவுக்குப் புகை கிளம்பியிருக்கிறதென்றால், அந்தப் புகைக்கு எவ்வளவு எரிபொருள் தேவைப்பட்டிருக்கும் என்பதை கற்பனை செய்தால் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

அந்த எரிபொருள் தந்து எரிந்துகொண்டிருப்பது ‘அமேசான்’ காடுகள். உலகின் நுரையீரலாகக் கருதப்படும் அக்காடுகளின் கால்பங்கு நிலம் எரிந்து சாம்பலாகிவிட்டது. மீதம் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் இரண்டு கால்பந்து மைதானம் அளவிலான காடுகளும், மரங்களும் உயிர்களும் கடந்த இரண்டு வாரங்களாக எரிந்துகொண்டிருக்கின்றன. இது 15 மதுரையும், ஐந்து சென்னையும் எரிந்ததற்கு சமம். இந்தச் செய்தி தெரியவே 16 நாட்கள் ஆகியிருக்கிறது. வேற்று கிரகத்தை வேடிக்கை பார்க்க செயற்கைக்கோள்களை ஏவும் அதிமேதாவித்தனமான விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டிருந்தும் நம் கிரகத்தில் நடந்து கொண்டிருக்கும் பேரழிவைக் கண்டுபிடிக்கக்கூட முடியவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், அதை அணைக்கும் அறிவும் தொழில்நுட்பமும் இல்லை. காட்டுத்தீயைக்கூட அணைக்கமுடியாத தொழில்நுட்ப உலகில்தான் நாம் வளர்ச்சியை நோக்கி வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கிறோம்.

பிரேசிலின் பகுதியாக சொந்தம் கொண்டாடப்படும் அமேசான் எனும் நிலம், உலக உயிரினங்கள் அனைத்துக்குமான வாழ்வாதாரம். புவியில் சுழலும் உயிர்காற்றில் 20 சதவிகிதத்தை உற்பத்தி செய்துதரும் உயிர் உற்பத்தித் தொழிற்சாலை. 2.6 மில்லியன் சதுர மைல் பரப்பளவில், இன்னும் மனிதர்களின் காலடி தடம் படாத இடங்களுடன், மனிதர்கள் கண்டறியாத உயிரனக்கூட்டங்களுடன், புவியின் மிகப்பெரிய நதியுடன் வளமாக இருந்த மழைக்காடு தற்போது தகித்துக்கொண்டிருக்கிறது. செயற்கைக்கோள்கள் வெளியிட்ட தீக்கிரையான பகுதிகளின் புகைப்படங்கள் ஸ்தம்பிக்க வைக்கின்றன. உலக வரைபடத்தில் ஒரு நாட்டின் பெரும்பகுதி பற்றி எரிவதைப் போன்ற அப்புகைப்படங்கள் பார்க்கும்போதே பதறவைக்கின்றன. அமேசான் படுகையில், ஜூலையில் இருந்து செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை வறட்சிக்கான காலம். இக்காலத்தில் காட்டுத் தீ பரவுவது வழக்கமானதுதான். ஆனால், இதுபோன்ற பெரிய பரப்பளவில் மிகக்குறுகிய காலத்தில் மிக அதிக இடங்களில் அடிக்கடி தீப்பற்றிப் பரவுவது வழக்கமான நிகழ்வல்ல.

ஆகஸ்ட் 15இல் இருந்து மட்டும் இதுவரை, அமேசான் படுகையில் மட்டும் 9,500 முறை காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இந்த வருடத்தில் பிரேசிலில் மட்டும் 74,000 முறை காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இது கடந்த வருடத்தைவிட இரண்டு மடங்கு அதிகம். இந்த ஆண்டு மட்டும் காடு அழியும் விகிதம் 83 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி முகைமை (Brazil's National Institute for Space Research reported) தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டதற்காக, அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமையின் தலைவரைப் பணி நீக்கம் செய்தார். மேலும் அந்தப் புகைப்படங்கள் யாவும் பொய் என்றார். இந்த அரசியல் வியாபாரப் பொய்களின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது, தற்போதைய தகவல்கள்.

அரசியலால் அழிகிறது அமேசான்

பிரேசிலின் அதிபர் பொல்சனாரூ பதவியேற்ற காலத்திலிருந்தே அமேசான் காடுகளின் வளத்தைச் சீரழிக்கும் வியாபார கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

‘அமேசான் காடுகளைப் பாதுகாப்பது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் அல்ல. அப்பகுதியை வணிக ரீதியாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளத்தைப் பெருக்குவதே என் நோக்கம்’ என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். அமேசான் காடுகளை அழிக்கும் வளர்ச்சி திட்டங்களுக்குச் சட்டவிதிகளைச் சாதகமாக்கினார். சட்டவிரோதமாக வெட்டப்படும் மரங்களைப் பறிமுதல் செய்வதையும் அவரது நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. சான்றாக, 2018ஆம் ஆண்டில் முந்தைய நிர்வாகத்தின் கீழ் 883,000 கன அடி அளவுக்குச் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வருடமோ, போல்சனாரூவின் நிர்வாகம் 1,410 கன அடி அளவுக்கான மரங்களை மட்டுமே பறிமுதல் செய்துள்ளது. நிச்சயமாகச் சட்டவிரோத கடத்தல் குறையவில்லை. மாறாக, அரசாங்கக் கண்காணிப்பு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் காட்டுத் தீ குறித்துக் கேள்வியெழுப்பப்படும்போதெல்லாம், ‘விவசாயிகள் பயிர் செய்வதற்காகப் பற்றவைக்கும் நெருப்புப் பொறிகளால் ஏற்படும் விபத்து இது’ என்று மழுப்பிக்கொண்டிருந்தார் போல்சனாரூ. இந்தப் பேரழிவு பெரிய அளவில் தெரியவந்த பிறகு, ‘தொண்டு நிறுவனங்கள் என் அரசாங்கத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தவே காடுகளுக்குத் தீ வைக்கின்றனர்’ என்று கொளுத்திப்போட்டிருக்கிறார். உலகின் மிகப்பெரிய வளத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபரின் இவ்வாறான பேச்சுக்கள், அதிகார வழியில் செயல்படும் அரசுகளினால் ஏற்படப்போகும் ஆபத்தை எடுத்துரைக்கிறது. பொருளாதாரத்துக்காக இயற்கையை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம் என்ற தீவிர வலதுசாரி கொள்கைகளைக் கொண்ட அதிபர்கள் அதிகமாகி வருவதை சமீப காலங்களில் வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. வளம் மற்றும் மக்கள் நலத்துக்கான அரசியல்வாதிகளாக இல்லாமல், வியாபாரிகளாக இருந்து அரசியல்வாதிகளாக மாறி வியாபாரம் செய்பவர்களை அதிகார பீடத்தில் ஏற்றி வைத்துவிட்டு இயற்கைப் பாதுகாப்பு குறித்தெல்லாம் பேசுவதில் எந்த பயனும் இல்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான கொள்கை நெருக்கத்தை பிரேசிலின் அதிபர் நொடிக்கொருமுறை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர்களுக்கு ‘பொருள்’தான் ஆதாரம். ‘வாழ்வு’ ஆதாரம் அல்ல. இவர்களின் கொள்கைகளும் செயல்பாடுகளும் அவரவர் சார்ந்த நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிப்பவையாக மட்டும் இருக்கும்பட்சத்தில் நமக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், இவை ஒட்டுமொத்த புவி சூழலையும் இங்கே வாழும் உயிரினக்கூட்டங்களையும் சூழல் அகதிகளாக மாற்றும் செயல். இங்கே தொழில்நுட்பத்தாலும் அறிவியலாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை.

தனது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி முகமை வெளியிட்ட தகவல்களே பொய் என்று ஓர் அதிபர் தனது அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள சூளுரைக்கிறார் எனில், இங்கே அதிசிறந்த தொழில்நுட்பம் இருந்து என்ன பயன்? அறிவியல் எந்த அதிகாரத்தின் கையில் இருக்கிறது என்பதைச் சீர்செய்ய முடியாமல் வெறும் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?

இதோ இப்படி அழிவை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியும். ஆனால், நம் அழிவை வேடிக்கை பார்க்கத்தான் யாரும் இருக்க மாட்டார்கள்!


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon