மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

மக்களின் சுதந்திரத்தை அழிக்க ராஜீவ் அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை!

மக்களின் சுதந்திரத்தை அழிக்க ராஜீவ் அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை!

ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசையும் மோடியையும் பெயர் குறிப்பிடாமலேயே மறைமுகமாக விமர்சித்துள்ளார் சோனியா காந்தி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்ததினம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்தநாளை ராஜீவ் 75 என்ற பெயரில் மிகப்பெரிய இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல அவரது சாதனைகள், சமூக தொழில்நுட்ப அறிவு, தொலைநோக்குப் பார்வை எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் மக்களிடம் கொண்டுசெல்ல ஒரு வாரக் கொண்டாட்டமாக முன்னெடுத்து வருகின்றது.

இதனிடையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீனை மறுத்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ஆம் தேதி இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டின் சுவர் மீது ஏறி கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று மதியம் ஆஜர்படுத்தினர். விசாரணையின் முடிவில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 22) மாலை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்தநாளையொட்டி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய அரசையும் மோடியையும் பெயர் குறிப்பிடாமலேயே இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது:

1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பெற்று ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். ஆனாலும் அவர் ஒருபோதும் அச்சமான சூழ்நிலையை உருவாக்கவோ, மக்களின் சுதந்திரத்தை அழிக்கவோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை.

1986ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி ஒரு கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து நாட்டின் கல்விக்கு ஒரு புதிய திசையை வழங்கினார். ராஜீவ் காந்தி நிறுவிய ஜவஹர் நவோதயா வித்யாலயா நமது நாட்டின் பெருமை; அதன் மூலம் ஏராளமான கிராமப்புறக் குழந்தைகள் கல்வி கற்கிறார்கள்.

ராஜீவ் ஒருபோதும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. அவர் ஒருபோதும் மக்கள் கருத்தை அடக்கவில்லை. ராஜீவ் செய்த வேலை வெறும் முழக்கங்களாலும் பெருமையாலும் செய்ய முடியாத ஒன்று. மாறாக, அதற்குக் கடின உழைப்பும் வலுவான பார்வையும் தேவை.

அவர் ஒரு வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பினார். குடிமக்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ ஓர் இந்தியாவையும்; அதன் இளைஞர்களின் ஆற்றலில் முன்னேறும் இந்தியாவையும் ஒரே சமயத்தில் உருவாக்கினார்.

ராஜீவ் காந்தி இந்தியாவை அடிப்படையில் பலப்படுத்தினார். 18 வயதில் இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைப்பதும், பஞ்சாயத்துகள் வலுவாக இருக்க வேண்டும் என்பதும் அவரது உறுதிப்பாடாகும்.

விவசாயத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேசத்துக்கு பலம் அளித்தார். அவர் கனவு கண்ட இந்தியா பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் ஒன்றாக வைத்திருந்த ஒரு இந்தியா எனக் கூறியுள்ளார் சோனியா காந்தி.

மேலும், இந்தியாவில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ப. சிதம்பரத்தின் கைது குறித்து சோனியா காந்தி தனது கருத்துகளைக் கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சோனியா காந்தி அவரது கைது குறித்து எதையும் குறிப்பிடவில்லை.

அதே சமயத்தில் ராஜீவ் காந்தியைப் புகழ்வது போல மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பெயர் குறிப்பிடாமலேயே விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon