மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

கவனம் புதிது – 2 ஸ்ரீராம் சர்மா

கவனம் புதிது – 2 ஸ்ரீராம் சர்மா

கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக வந்திறங்கிய ஐரோப்பிய பல்துறை அறிஞர்களுக்கு இந்திய மக்களிடம் காணப்பட்ட படிநிலைப் பாகுபாட்டின் வீச்சம் அதிகமாகப்பட்டது.

ஐரோப்பிய தேசங்களில் பெண்கள் இரண்டாந்தர குடிமக்களாக நிறுத்தப்பட்டிருந்த அவலநிலையை மாற்றி, பெண்ணடிமையை முடிவுக்குக் கொண்டுவந்து எல்லோரும் சமம் என்னும் நிலைக்கு ஒருவழியாக ஐரோப்பிய சமூகம் வந்துவிட்டிருந்த காலம் அது. நவீன உலகத்தின் ருசியைக் கண்டு வந்தவர்களுக்கு அன்றைய இந்திய மண்ணில் ஆங்காங்கே நிலவிய ஆதிகாலத்து அடிமைச் சமூக முறையைக் காணக் கசந்தது.

ஐரோப்பிய அறிஞர்களாகப்பட்ட அவர்களும் பரிபூணர்களாக மாறிவிட்டிருந்தார்களா என்றால் இல்லை. அடிமைச் சமூக முறையினை சற்றே நாகரிகம் பூசி நிறுவனப்படுத்தியிருந்தார்கள். அவ்வளவே.

மக்களைப் பிரித்து மகசூல்

சரி, கம்பெனி விஷயத்துக்கு வருவோம். பாரத மண்ணில் தங்களது வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்பதுதான் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஒரே குறி.

அவர்களது வியாபாரப் போக்குவரத்துக்கு வேலையாட்களாக லட்சக்கணக்கான இந்தியர்கள் தேவைப்பட்டனர். இந்திய மேட்டிமை சமூகமோ எங்கிருந்தோ வந்த உனக்கேன் வேலை செய்ய வேண்டும் என்று திமிர்த்துக் கொண்டிருந்தது.

மயிலே மயிலே இறகு போடென்றால் உதவாது. மக்களைப் பிரித்தடித்தால்தான் மகசூல் என்னும் முடிவுக்கு வந்த பிரித்தானியர்கள் தங்கள் சிண்டிகேட்டோடு கலந்தார்கள்.

மரபார்ந்த வியாபாரிகளாகிய பிரித்தானியர்கள் நீண்ட கால திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள். நீண்ட கால வியாபாரத்துக்குத் தேவை பொறுமை சுமந்த மைக்ரோ லெவல் திட்டமிடல். அது அவர்களுக்கு இயல்பிலேயே இருந்தது.

ஐரோப்பிய வியாபார அறிஞர்கள் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி மெல்ல மெல்ல தங்கள் வியாபார அனுகூலத்தை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.

முதற் காரியமாக நவாபுகளைக் தங்கள் கஸ்டடிக்குக் கொண்டுவர முடிவெடுத்தார்கள். ஐரோப்பியாவில் தயாரான நுணுக்கமான வெகுமதிகளோடு மாதந்தோறும் கொண்டாட்ட தேதி ஒன்றை குறித்துக் கொண்டு நவாபுகளைச் சந்திக்கத் தொடங்கினார்கள்.

தங்களது சீமாட்டிகளோடு கூடிய ஆடம்பரமான கேளிக்கை விருந்துகளுக்கு நவாபுகளை அழைத்து அமர்க்களப்படுத்திக் காட்டினார்கள்.

நவாப்களின் நாக்கில் தேன்

“நவாப் சார்...சுல்தான்களுக்குக் கீழ் நீ பரம்பரையாக அடிமை செய்து கண்டதுதான் என்ன ? இங்கே பார். உனக்கும் உண்டு உல்லாச வாழ்வு...” என்று ஓயாமல் மூளைச் சலவை செய்தார்கள்.

உலகமெங்கும் வியாபாரம் செய்பவர்கள் என்பதால் தங்களிடையே இருந்த நவீனப் பரிசுப் பொருட்களை எல்லாம் அள்ளிக் கொடுத்து நவாபுகளின் கண் பார்த்துக் கவர்ந்தார்கள்.

கொடூரமாகத் தண்டிக்கும் குணமுடைய சுல்தான்களுக்குக் கீழே அச்ச வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த நவாபுகளுக்கு கம்பெனியினரின் இந்த கவனிப்பு நாக்கில் தேன் தடவிவிட்டாற்போல இருந்தது.

அந்த நேரம் பார்த்து சுல்தான்களின் மாட்சி தேய்ந்து ஓய்ந்துகொண்டிருக்க அது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. கம்பெனியினருக்கு தாசானுதாசர்களாகி கிழக்கிந்தியக் கம்பெனியைச் செல்லமாகச் சுருக்கி ஜான் கம்பெனி என்று அழைக்கும் அளவுக்குக் கிறங்கிப் போனார்கள்.

சுல்தான்களின் வாயிலாக இந்தியர்களின் மேல் தங்களுக்கு இருந்த உரிமையைக் கைமாற்றிக் கொடுக்கத் துணிந்துவிட்ட நவாபுகளைக் கண்டு ஆங்காங்கே ஆண்டுகொண்டிருந்த இந்தியக் குறு நில மன்னர்கள் அதிர்ந்தார்கள்.

சுல்தான்களின் கை என்று ஓயும்? ஓயுமானால் நவாபுகளிடமிருந்து விடுவித்துக் கொண்டு பழையபடி தங்கள் மக்களோடு நிம்மதியாக வாழத் தொடங்கலாம் எனப் பரம்பரையாகக் காத்திருந்த இந்தியக் குறுநில மன்னர்கள் மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா என மலைத்துப் போனார்கள்.

கம்பெனியினர் காரியமே கண்ணாக முன்னேறி சீமாட்டிகளோடு கப்பல் பயணம், ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் சொகுசு, வெள்ளை வெளேரென்ற ஐரோப்பிய விலைமாதர்கள் எனக் காட்டிக் காட்டி நவாபுகளை மயக்கி தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

நவாபுகளின் மேல் அளவுக்கதிகமான பெருமைகளை ஏற்றிக் கூறி ஆளாளுக்கு ஏழு எட்டு ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்கித் தலையில் கட்டினர். அதில் முன் சீட்டுக்குப் பதிலாக வெள்ளி சிம்மாசனத்தை ஃபிட் செய்து கொண்டு நவாபுகள் நகர்வலம் வந்து திளைத்த தமாஷ் கதைகளெல்லாம் உண்டு.

சுருக்கமாகச் சொல்லப் போனால் அளவுக்கதிகமாகக் கடன் கொடுத்து நவாபுகளை மயக்க நிலையிலேயே தங்கள் பிடியிலேயே வைத்திருந்தனர்.

அடிமைகளிடம் எடுபட்ட தேவ வசனங்கள்

17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய வியாபார அறிஞர்களின் ஓயாத எடுத்துரைப்பினால் விக்டோரியாவின் கண் பார்வையும் கிடைத்தேவிட கம்பெனியாருக்கு இப்போது வீரியம் கூடியிருந்தது.

கம்பெனியின் அபரிமிதமான பணத்தையும், விக்டோரியாவின் பதவி பலத்தையும் கொண்டு ஐரோப்பிய வியாபார அறிஞர்கள் இந்திய சமூகக்கட்டமைப்புக்குள் புகுந்து தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டத் தொடங்கினார்கள்.

“ஏன்...நீங்கள் மட்டும்தான் ஊர் துணிகளை அலச வேண்டுமா? நீங்கள் மட்டும்தான் ஊர் தலைகளைச் சிரைக்க வேண்டுமா? கொல்லப் பட்டறையின் கொடுஞ் சூட்டில் நீங்கள் மட்டும்தான் வியர்த்து வேக வேண்டுமா? உங்கள் கடின உழைப்பை எங்களுக்குக் கொடுத்துப் பாருங்கள். எங்கள் கம்பெனியில் வேலையாளாக வந்து சேர்ந்து விடுங்கள். எங்களுக்கு இணையாக ‘மிஸ்டர்...’ அடைமொழி போட்டு உங்களை மரியாதையாக நடத்துகிறோம்.

உங்கள் பிள்ளைகளுக்கு ஆக வேண்டியதைச் செய்து எங்கள் கம்பெனி சார்பாக உலகமெங்கும் கொண்டு செல்கிறோம். அடுத்த நிலைக்கு உயர்த்துகிறோம்...” என்று ஓயாமல் தூண்டில் போட்டார்கள்.

அடிமைச் சமூகக் கொடுமையில் சிக்கித் தவித்திருந்த அன்றைய கடைநிலை மக்களுக்கு அது தேவ வசனமாகப்பட்டது. ஆனால், இனி வரப்போகும் வெள்ளை அதிகாரிகள் தொடுக்கப் போகும் லோக்கல் போர்களிலும் இரண்டாம் உலகப் போரிலும் தங்கள் தலைமுறைகள் இரையாக்கப்படப் போகின்றன என்னும் கசப்பான சோஸியத்தை அப்போது அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

வெள்ளந்தியான மக்களோ, நாமும் மரியாதையாக வாழ வழி சொல்கிறார்களே எனக் கம்பெனியின் வசம் சாரி சாரியாக செல்லத் தொடங்கினார்கள். அவர்களுக்கென கம்பெனி வியாபாரிகள் தனி நிதி ஒதுக்கினார்கள்.

வந்து சேர்ந்த இந்திய வேலையாட்களை மதம் மாற்றி கவர்ச்சிகரமாகப் புதுப் பேரிட்டு தனி ‘சர்ச்’ கட்டிக் கொடுத்துத் தங்களுக்கு இணையாக புது உடைகளைக் கொடுத்து மகிழ்வித்தார்கள்.

மீண்டும் குறித்துக் கொள்ள வேண்டும். அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியினரின் நோக்கம் ஒன்றே. அது, தங்கு தடையற்ற அவர்களது வியாபாரம் மட்டுமே. அதற்குத் தேவையான அபரிமிதமான வேலையாட்கள் மட்டுமே.

அவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட சர்ச்சிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இல்லை என்றாலும், தாங்கள் அனுபவித்த பழைய கொடுமைக்கு இது எவ்வளவோ மேல் என்றெண்ணிக் கொண்டு கம்பெனியாருக்கு அபிமானப்பட்டவர்களாக உழைக்கத் தொடங்கினார்கள் இந்தியக் கூலிமார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, அன்றைய குறுநில மன்னர்களின், பாளையக்காரர்களின் அனுகூலம் கிடைக்காமல் ஏங்கிக்கொண்டிருந்த பலதட்டு மக்களும் மெல்ல மெல்லப் பொது சமூகத்தில் இருந்துப் பிரிந்துப் பிரித்தானியர்களின் வலையில் சிக்கினார்கள்.

எதிர்பார்த்தபடி லோக்கல் நெளிவு சுளிவுகளை அறிந்த உழைப்பாளிகள் அபரிமிதமாக சேர்ந்துவிட கிழக்கிந்தியக் கம்பெனியின் வியாபாரம் ஜிவ்வென சூடு பிடிக்கலாயிற்று.

சூத்திரமும் ஆத்திரமும்

கணக்குக்குச் சூத்திரம் எப்படி முக்கியமோ அப்படி ஆட்சிக்குச் சூத்திரமானவர்கள் தொண்டர்கள். அந்தத் தொண்டர்களை அடுத்தவர்கள் அபகரித்துக் கொண்டால் ஆட்சியாளர்களுக்கு ஆத்திரம் வரத்தானே செய்யும்.

பிரித்தானியர்களின் சூழ்ச்சியால் தங்களது அரசாட்சியின் சமூகக் கட்டமைப்பு சரிந்து கெடுவதைப் பொறுக்க முடியாத அன்றைய ஆட்சியாளர்களான சத்திரியர்கள் வெகுண்டு எழுந்தார்கள்.

வழக்கமான கூலிக்கு மேல் கூலி கொடுத்து தங்களது வேலையாட்களை கிழக்கிந்தியக் கம்பெனியினர் ஈர்த்துக்கொள்கிறார்களே என அன்றைய மரபார்ந்த வைசிய வியாபாரிகள் அதிகம் கொதித்தார்கள்.

தங்கள் மக்களை ஏமாற்றி மதம் மாற்றி இழுத்துப் போகிறார்களே என்று அன்றைய வைதீக பிராமணர்களும் பதைபதைத்தார்கள்.

அத்தனை பேரும் ஒன்று கூடி கம்பெனியை எதிர்த்தார்கள்.

பாளையங்கள் தோறும் கலகங்கள் வெடித்தன.

(தொடரும்...)

கவனம் புதிது - 1


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon