மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: பூண்டு குழம்பு – செட்டிநாடு ஸ்டைல்

கிச்சன் கீர்த்தனா: பூண்டு குழம்பு – செட்டிநாடு ஸ்டைல்

மழைக்காலங்களில் சிலர் சைனஸ், தலைபாரம், ஒற்றைத் தலைவலி எனச் சில காரணங்களைச் சொல்லி தலைக்குக் குளிக்காமல் தவிர்ப்பதுண்டு. இப்படிச் செய்வதால் தலையில் நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தலைக்குக் குளித்ததும் தலைமுடியை நன்றாக உலர்த்தி சாம்பிராணி புகைகாட்டுவது அல்லது வெந்நீரில் தலைக்குக் குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சளித்தொல்லை இருந்தால் பூண்டுக் குழம்பு, மிளகுக் குழம்பு, சுண்டவற்றல் குழம்பு சாப்பிடலாம். இது தொண்டைக்கு இதமாக இருக்கும். அதோடு மூக்கடைப்பில் தொடங்கி சளி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும்.

என்ன தேவை?

பூண்டு - 10-12 பற்கள்

சின்ன வெங்காயம் - 5-6

தக்காளி - பாதி அளவு (பொடியாக நறுக்கவும்)

கடுகு - அரை டீஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை - சிறிது

புளி - ஒரு எலுமிச்சை அளவு

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

நாட்டுச்சர்க்கரை - அரை டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு:

சீரகம் - அரை டீஸ்பூன்

மிளகு - அரை டீஸ்பூன்

மல்லி (தனியா) - அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

சின்ன வெங்காயம் - 3

பூண்டு - 3-4 பற்கள்

காய்ந்த மிளகாய் - ஒன்று

தக்காளி – பாதி அளவு

எப்படிச் செய்வது?

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்குக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கி இறக்கி, குளிரவைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, பேஸ்ட் செய்து தனியாகவைத்துக் கொள்ளவும். பின்னர் புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில்வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் தாளிக்க வேண்டும். பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வாக்கி, பின் நறுக்கிவைத்துள்ள தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றைச் சேர்த்துக் கிளறி, அரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, 3 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்பு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி, பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து 10-15 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பூண்டு குழம்பு தயார்.

நேற்றைய ஸ்பெஷல்: இஞ்சி - துளசி டீ


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!


துரைமுருகன் -ரவீந்திரநாத் சந்திப்பு!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


வெள்ளி, 23 ஆக 2019

chevronLeft iconமுந்தையது