ஒரே வளாகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கவனிக்கும் அதிகாரம் அதே பள்ளி வளாகத்தில் செயல்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுவரை தமிழக அரசின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை நிர்வகிக்க பள்ளிக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனியே தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுப் பணிபுரிந்து வந்தனர். அதுபோலவே தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குத் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தனித்தனி தலைமை ஆசிரியர்கள் இருந்துவந்தனர்.
இந்த நிலையில் அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், “ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே பள்ளி வளாகத்தில் செயல்படும் அரசு உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதே பதவியில் இருப்பார்கள். அவர்களின் வருகைப் பதிவு, விடுப்பு எடுப்பது, கற்பிக்கும் திறன் உள்ளிட்டவற்றை அதே வளாகத்தில் உள்ள உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிப்பார். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏதேனும் குறைகளைக் கண்டுபிடித்தால் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் புகாராகத் தெரியப்படுத்த வேண்டும் எனவும், அந்த புகாரின் மீது இறுதி நடவடிக்கை அல்லது தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து அந்த புகார் குறித்து கண்காணிக்கும் அதிகாரம் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளது எனவும் அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கட்டமைப்பு, கல்வி மேம்பாடு ஆகியவற்றை கண்காணிப்பது உள்ளிட்ட 14 அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!
சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?
‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?
கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?