ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று (ஆகஸ்டு 21) இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், புதுடெல்லியில் லோதி சாலையிலுள்ள சிபிஐ தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இரவை அங்கேயே கழித்த அவர் இன்று பிற்பகல் 3 மணிக்கு பலத்த பாதுகாப்போடு டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் இருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சரியாக மாலை 3.10 மணிக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றத்துக்குள் நுழைந்தது ப.சிதம்பரம் வந்த கார். அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டனர். சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, தயான் கிருஷ்ணன் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்துவிட்டனர். தனி நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்களுக்கு சிறிது நேரத்துக்கு முன்பு தகவல் கொடுக்கப்பட்டது. அதனால் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று கூட்டம் நிறைந்தது.
கோர்ட் சின்னதா இருக்கே?
3.20 மணிக்கு சிதம்பரம் நீதிமன்றத்துக்குள் அழைத்துவரப்பட்டார். வேட்டி சட்டையில் புன்னகையோடு வந்த அவர் தன்னை விசாரித்த பலரையும் கையெடுத்து கும்பிட்டபடியே கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார். அப்போது அவர் சிபிஐ அதிகாரிகளிடம், ‘புதிய நீதிமன்றக் கட்டிடம் என்றதும் விசாலமான கோர்ட் ஹால்கள் இருக்கும் என்று நினைத்தேன். மிகக் குறுகியதாக இருக்கிறதே?” என்று கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள், ‘இங்கு எல்லா ஹால்களுக்கும் இப்படித்தான் சார் இருக்கின்றன’ என்று பதில் கூறினார்கள்.
சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் கையைப் பிடித்துக்கொண்டு கோர்ட் ஹாலுக்குள் அழைத்துச் செல்ல, அங்கே சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் அவரைப் பார்த்தனர். அவர்களையும் நீதிமன்ற ஊழியர்களையும் பார்த்து புன்னகைத்தார் ப.சிதம்பரம்.
5 நாள் காவல் கேட்ட சிபிஐ
சில நிமிடங்கள் காத்திருந்த நிலையில் 3.35 மணிக்கு நீதிபதி அஜய் குமார் குஹார் நீதிமன்றத்துக்குள் வந்தார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் வழக்கு விசாரணைத் தொடங்கியது. சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். எடுத்த எடுப்பிலேயே அவர் நீதிபதியிடம், “இந்த வழக்கைப் பொறுத்தவரை நடைபெற்ற சதியில் மற்றவர்களோடு சிதம்பரமும் பங்கு வகித்துள்ளார். சிதம்பரத்துக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேதான் நேற்று கைது நடந்திருக்கிறது. சிதம்பரம் இதுவரையிலே இந்த வழக்கில் சிபிஐக்கு ஒத்துழைக்கவிலை. இந்த விவகாரத்தில் நடந்திருக்கும் பெரிய அளவிலான சதியை கண்டுபிடிக்க, சிதம்பரத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். எனவே சிபிஐ தரப்பில் அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோருகிறோம்” என்றார்.
மேலும், “இந்த வழக்கில் சிதம்பரத்தின் பங்கு என்பது மிகத் தீவிரமானது. இதற்கு முன் அவரை இது தொடர்பாக சிபிஐ விசாரித்தபோதெல்லாம் பல கேள்விகளுக்கு மௌனமாகவே இருந்து நழுவப் பார்த்தார். இந்த நிலையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரித்தாலொழிய இந்த வழக்கில் அவரது மிக அதிகமான பங்கினை வெளியே கொண்டு வர முடியாது. அதனால் சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” என்று வாதிட்டார் சிபிஐ தரப்பு வழக்கறிஞரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.
விசாரணையே முடிந்துவிட்டபின் எதற்கு காவல்?
இதையடுத்து சிதம்பரத்துக்காக வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபல்,
“இந்த வழக்கை சிபிஐ விசாரித்து முடித்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களான கார்த்தி சிதம்பரம் போன்றவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூலம் முறையான ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். அவற்றில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை.
இந்த வழக்கில் முதல் நபராக கைது செய்யப்பட்ட ஆடிட்டர் பாஸ்கர் ராமன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். பீட்டரும், இந்திராணி முகர்ஜியும் கூட ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். இந்த விவகாரம் நடந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்த அரசுச் செயலாளர்கள் யாரும் கைது செய்யப்படவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிதம்பரம் நேற்று இரவு முதல் சிபிஐயின் வசம்தான் இருக்கிறார். ஆனால் இன்று காலை 11 மணியில் இருந்தே அவரிடம் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அப்போது சிதம்பரத்திடம் 12 கேள்விகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஆறு கேள்விகள் கடந்த 2018 ஜூன் மாதம் அவரிடம் ஏற்கனவே கேட்கப்பட்டவைதான். இந்த நிலையில் கஸ்டடியில் எடுத்து எதை விசாரிக்கப் போகிறார்கள்? எனவே சிதம்பரத்தை உடனடியாக ஜாமீனில் வெளியிட வேண்டும். ஜாமீன் என்பது சட்டம் அளித்திருக்கும் உரிமை. இப்போது இந்த நீதிமன்றத்தின் உள்ள பிரச்சினை என்பது சிதம்பரம் என்ற தனிநபருக்கு சட்டம் அளித்திருக்கும் சுதந்திரத்தைப் பற்றியதுதான்” என்று வாதிட்டார் கபில் சிபல்.
அப்ரூவரின் அடிப்படையில் வழக்கு
அப்போது அபிஷேக் சிங்வியும் சிதம்பரத்துக்காக சில வாதங்களை எடுத்து வைத்தார். “இந்த ஒட்டுமொத்த வழக்குமே அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அப்ரூவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோருவதே தவறானது. அதற்கான அடிப்படை வலிமையே இந்த வழக்கில் இல்லை” என்றவர் சிதம்பரம் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற சிபிஐயின் வாதத்துக்கும் பதில் அளித்தார்.
விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதன் அர்த்தம்
“விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் என்ன? என்னை விசாரிப்பதற்காக விசாரணை அமைப்பு அழைத்தும் நான் போகவில்லை என்றால், அதுதான் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று பொருள். ஆனால் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு அழைத்தபோது சென்றிருக்கிறார். அவர்கள் விரும்பும் பதிலை அளிக்கவில்லை என்பதாலேயே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று ஆகிவிடாது. சிதம்பரத்தை ஒருமுறை விசாரணைக்கு சிபிஐ அழைத்தது. அவர் சென்றார். இதில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் இந்த வழக்கில் சிபிஐயின் ஆதாரங்களை சேதப்படுத்தியதாகவும் சிதம்பரம் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவரை உடனடியாக பிணையில் விடுவிக்க வேண்டும்” என்று வாதிட்டார் அபிஷேக் சிங்வி.
நான் பேச விரும்புகிறேன் - சிதம்பரம்
அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “விசாரணைக்கு எப்படி ஒத்துழைக்காமல் இருக்க வேண்டும் என்பதில் ப.சிதம்பரம் கைதேர்ந்தவர்.அவரது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்ப்பதில் கில்லாடி” என்று கூறினார்.
அப்போது சிதம்பரம் தனது கையை தூக்கி, ‘நான் நீதிமன்றத்தில் சிறிது பேச விரும்புகிறேன்” என்று கூறினார். அதற்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சிங்வி எழுந்து, ‘வழக்கில் குற்றம் சாட்டப்பவர் பேச விரும்பினால் அவரை நீதிமன்றத்தில் பேச அனுமதிக்கலாம்’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டி சிதம்பரம் பேச சட்டப்படி எந்த விதத் தடையும் இல்லை என்றார். இதையடுத்து சிதம்பரம் பேச அனுமதி அளித்தார் நீதிபதி.
அப்போது பேசிய சிதம்பரம், “நான் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். சிபிஐ என்னிடம் நடத்திய விசாரணையின் விவரங்களை படித்துப் பாருங்கள். அவற்றில் நான் பதில் அளிக்காத கேள்விகளே இல்லை. அவர்கள், ‘உங்களுக்கு வெளிநாட்டில் வங்கிக் கணக்கு இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். நான் இல்லை என்று சொன்னேன். என் மகனுக்கு இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் ஆம் என்று சொல்லியிருக்கிறேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லியிருக்கிறேன்” என்று கூறினார். இதை நீதிபதி பதிவிட்டுக் கொண்டார்.
ஐந்து மணிக்கு இந்த வாதங்கள் எல்லாம் முடிய, வழக்கின் தீர்ப்பை அரைமணி நேரத்தில் வழங்குவதாக கூறினார் நீதிபதி. ஆனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஜாமீன் வழங்க மறுத்ததுடன் ப.சிதம்பரத்தை 4 நாள், வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!