மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

சுடுகாட்டிற்கு வழி மறுக்கப்பட்ட சம்பவம்: சில உண்மைகள் !

சுடுகாட்டிற்கு வழி மறுக்கப்பட்ட சம்பவம்: சில உண்மைகள் !வெற்றிநடை போடும் தமிழகம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இறந்தவரின் சடலம் பாலத்தில் இருந்து கயிற்றைக்கட்டி இறக்கப்பட்ட சம்பவம் குறித்த சில உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் அவர் அகால மரணமடைந்தார். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த அவரது உடலை எரிப்பதற்காக எடுத்துச் சென்றபோது, பிற சாதியினர் அனுமதி மறுத்ததாகவும் அதனால் வேறு வழியின்றி 20 அடி பாலத்தின் மேல் இருந்து அவரது உடலை கயிற்றில் கட்டி கீழே இறக்கியதாகவும் வீடியோ காட்சிகளுடன் பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தது.

ஒருவர் மரணமடைந்த பின்னர் அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பதும், கயிற்றைக் கட்டி உடல் கீழே இறக்கும்படி செய்யப்படுவதும் மனிதம் மறந்த கொடுஞ்செயல்களாகவே இருந்தாலும், இதற்கு சாதி ரீதியிலான வேறுபாடு தான் காரணம் என்று ஊடகங்கள் கூறி வரும்நிலையில் அது பெரும் கலவரத்திற்கு காரணமாக மாறிவிட வாய்ப்புள்ளது. இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல தீண்டாமைக் கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் நடந்து வந்தாலும் நாராயணபுரத்தில் நடந்த இந்த சம்பவம் சாதி வேற்றுமையைக் காரணம் காட்டி நடந்தேறியது அல்ல என்கிறார், வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முக சுந்தரம்.

நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த மக்கள் இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கு ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள ஒரு இடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் அவ்விடம் இயற்கை மரணமடைந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஏதேனும் தற்கொலை அல்லது விபத்து போன்ற செயற்கை மரணங்கள் நிகழும் போது அத்தகைய மக்களின் உடல்கள் அப்பகுதியை அடுத்த பாலாற்றங்கரையோரம் எடுத்துச் செல்லப் பட்டு எரிக்கப்படுவது வழக்கம்.

அந்த ஆற்றங்கரையை அடைவதற்கு நாராயணபுரம் கிராம மக்கள் இரு வழிகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் ஒரு வழி சக்கரவர்த்தி என்பவருக்குச் சொந்தமான நிலத்திலும் மற்றொரு வழி யுவராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்திலும் உள்ளது. இவர்களும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். பல காலமாக எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் சடலங்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கிய இவர்கள், குப்பன் மரணமடைந்த தினத்தன்று அவரது சடலத்தை தங்கள் நிலத்தின் வழியே எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

”இதன் காரணமாகவே குப்பனின் உடல் பாலத்தின் மேல் இருந்து கயிற்றைக் கட்டி கீழே இறக்கப்பட்டு பாலாற்றங்கரையில் எரியூட்டப்பட்டது. இந்த பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்காக அரசாங்கத்தால் மயானம் அமைத்துத் தரப் பட்டிருந்தாலும் அந்த இடத்தில் சடலங்களைப் புதைப்பதற்கான வசதி மட்டுமே இருந்து வந்துள்ளது. சடலத்தை எரிப்பதற்குரிய மேடை வசதிகள் அங்கு அமைத்துத் தரப்படவில்லை. எனவே தான் சடலங்களை எரியூட்ட பாலாற்றங்கரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது” என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்ற செய்தியையும் அவர் மறுத்துள்ளார். ஆற்றங்கரைக்கு செல்வதற்கான வழி இருக்கும் நிலமானது சக்கரவர்த்தி மற்றும் யுவராஜின் சொந்த நிலம் என்றும் அந்த நில உரிமைக்கான பட்டா அவர்களிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தின் உத்தரவின் பேரில், வட்டாசியர் முருகன், துணை கண்காணிப்பாளர் முரளி மற்றும் வருவாய்த்துறையினர், நாராயணபுரம் சென்று மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். உடனடி நடவடிக்கையாக இடுகாட்டுக்காக, வேறொரு இடத்தில் 50 சென்ட் நிலம் ஒதுக்கி இருப்பதாக வேலூர் ஆட்சியர் அறிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் துணைத் தலைமை வழக்கறிஞரால் முன் வைக்கப் பட்ட, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஆகஸ்ட்-26 ஆம் தேதிக்குள் இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முக சுந்தரம் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon