மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

சிதம்பரம் மீது புது வழக்கு?

சிதம்பரம் மீது புது வழக்கு?வெற்றிநடை போடும் தமிழகம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வேறொரு வழக்கில் கைது செய்ய சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதையடுத்து, சிதம்பரம் வீட்டின் சுவரேறிக் குதித்து அவரை அதிரடியாக கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள். அங்கிருந்து லோதி சாலையிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு நேற்றிரவு முதல் இன்று காலை வரை இரண்டு கட்டங்களாக சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்றது. இன்று (ஆகஸ்ட் 22) பிற்பகல் ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தவிர சிதம்பரம் எதிர்கொண்டு வரும் ஏர்செல்-மேக்சிஸ், ஏர் இந்தியா விமான முறைகேடு உள்ளிட்ட வழக்குகளிலும் அவரை கைது செய்வதற்காக முயற்சிகளில் சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு

மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸின் ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது இந்த முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவரும் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவரையும் கைது செய்ய நாளை (ஆகஸ்ட் 23) வரை தடை விதித்துள்ளது. நாளையுடன் தடை முடிவுக்கு வரும் பட்சத்தில், நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்தால் இந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்படலாம்.

ஏர் இந்தியா விமான முறைகேடு வழக்கு

கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து 48 விமானங்களும், போயிங் நிறுவனத்திடமிருந்து 68 விமானங்களும் ரூ.70 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை மேற்கொண்டது. சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, இந்த வழக்குகளில் நடந்த பண மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்திவந்தது. விமானம் வாங்க சிதம்பரம் தலைமையிலான மத்திய அமைச்சரவை குழுதான் ஒப்புதல் அளித்ததாக அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சிதம்பரம் நாளை (ஆகஸ்ட் 23) அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி வாக்கு மூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 19ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வரும் 26ஆம் தேதிக்குப் பிறகு சிதம்பரத்திற்கு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், இந்த இரு வழக்குகளிலும் அவரை கைது செய்ய திட்டமிட்டு அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon