மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

நீதிபதியின் மதக் கருத்து: தலையிட்ட தலைமை நீதிபதி!

நீதிபதியின் மதக் கருத்து: தலையிட்ட தலைமை நீதிபதி!வெற்றிநடை போடும் தமிழகம்

’பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்குத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு அரசு உரியச் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ என்ற கருத்தை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 22) திரும்பப் பெற்றது.

பாலியல் புகாரில், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி தனக்கு வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கல்லூரியின் பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதி வைத்தியநாதன், ”கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் நன்னெறியைப் போதிக்கிறதா என்றால் மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களைப் பாதுகாக்கவும் உரியச் சட்டத் திருத்தத்தை அரசு கொண்டு வரவேண்டும். கிறிஸ்டியன் மிஷினரிஸ் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது எனப் பெற்றோர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கும் வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம், கட்டாய மதமாற்றம் மற்றும் பெண்குழந்தைகளின் எதிர்காலம் ஆகிய கருத்துகள் உயர் நீதிமன்ற உத்தரவிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பான கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையிலான 64 பெண் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி தஹில் ரமானியிடம் நேற்று முறையிட்டனர். அதில் பெண்கள் மற்றும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்கை இனி நீதிபதி வைத்தியநாதன் முன்பு பட்டியலிடக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர். மேலும், ”2014ல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் விரல்களை வெட்ட வேண்டும், 2015 கோயில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்தது என வழக்கிற்கு தொடர்பில்லாத கருத்துகளைத் தெரிவிப்பது நீதிபதி வைத்தியநாதனுக்குப் புதிது அல்ல. நீதிபதி தன்னுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது உறுதியாகிறது. கிறிஸ்துவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்து என்பது கிறிஸ்துவர்கள் மீதான அவருடைய தனிப்பட்ட வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. நீதிபதிகள் தங்களுடைய சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்தும் தளமாக நீதிமன்றங்களைப் பயன்படுத்தக் கூடாது. நீதிபதி வைத்தியநாதன் மட்டுமல்ல நீதிபதி கிருபாகரனும் வழக்கிற்குச் சம்பந்தமில்லாத கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். பெண்கள் வெளியே சென்று சம்பாதிக்கத் தொடங்கிய பின்னர் கள்ளத் தொடர்பு அதிகரித்திருக்கிறது என்று கூறியது; குழந்தைகளை வன்கொடுமை செய்பவர்களின் ஆணுறுப்பைத் துண்டிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்ததை அடுத்து, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த கருத்தை நீக்கியது” என்று வழக்கறிஞர்கள் தங்கள் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 22), ’பெண்களின் பாதுகாப்புக்குப் பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், அது ஆண்களுக்குத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அதற்கு வரதட்சணை தடுப்புச் சட்டமே சான்று. ஆண்களைப் பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்’ என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்த கருத்தை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon