மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

சென்னை தினம்: சென்னைக்கு உண்மையான வயது என்ன?

சென்னை தினம்: சென்னைக்கு உண்மையான வயது என்ன?

சென்னை நகரத்தின் நிறுவன நாளாக ஆகஸ்டு 22 , 1639 என கருதப்படுகிறது. அதனடிப்படையில் சென்னை இன்று 380வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றது.

வெங்டப்பா நாயக்கரிடம் இருந்து தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறு நிலத்தை கிழக்கிந்தியக் கம்பெனி வாங்கி, சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த வரலாற்று நாள் ஆகஸ்ட் 22ஆம் தேதியாகும். பிரான்ஸிஸ் டே என்பவர் இதனை முன்னெடுத்தார். அதன் பிறகே கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அருகருகே இருந்த கிராமப் பகுதிகள் இணைக்கப் பட்டன. பழைய, புதிய சிறு நகரங்கள் இணைந்து சென்னை மாநகரமாக உருவாகியது.

சென்னைபட்டினம், மதராஸப்பட்டினம், மெட்ராஸ் என பல பெயர்களால் அழைக்கப்பட்ட இந்நகரம் ஜூலை 17ஆம் தேதி 1996ஆம் ஆண்டு முதல், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் போது சென்னை என பெயர் மாற்றப்பட்டது.

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம். 2004ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இத்தினம், ஒரு நாள் கொண்டாட்டமாக ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு வாரம் வரை புகைப்படக் கண்காட்சிகள், வரலாற்று நடைப் பயணங்கள், உரை நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், அஞ்சல் தலை எனப் பற்பல நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால் ஒருங்கிணைத்து நடத்தப் படுகின்றன.

சென்னை தினம்: இரு வேறு விவாதங்கள்!

சென்னைக்கு வயது 380? இந்த கருத்தே முரண்பாடாக சில வரலாற்றாசிரியர்களால் கூறப்படுகிறது. ஆகஸ்டு 22 , 1639 என ஒரு மனிதருக்கு வயதைக் கணக்கிடுவது போல ஒரு நகரத்தின் வயதை எப்படி கணக்கிடலாம் என்பதே அவர்கள் வைக்கும் வாதமாக இருக்கின்றது.

''ஒரு நகரத்தின் சிறப்பைக் கொண்டாடுவது பல நாடுகளில் உள்ளது. கிழக்கிந்திய கம்பெனியின் நுழைவுக்குப் பிறகு இந்த நகரம் வணிகத்திற்காக சீரமைக்கப்பட்டது. ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமமும் இணைக்கப்பட்டு, தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது,'' என பிபிசிக்கு அளித்த பேட்டியில் விவரித்தார் மெட்ராஸ் டே குழுவைச் சேர்ந்த வின்சென்ட்.

அதே சமயம், சென்னை மிக பழமையான நகரம். ஆங்கிலேயர்களுக்கு முன்பே இந்நகரம் பரபரப்பான நகரமாக உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது, கிழக்கிந்திய கம்பெனியின் வருகையிலிருந்து சென்னை தினத்தை கொண்டாடுவது அதன் வரலாற்றை சுருக்குவதற்கு சமம் என்ற பார்வையும் எழுந்து வருகின்றது.

இந்நிலையில், வரலாற்று ஆய்வாளர் நிவேதா லூயிஸ் அவர்களிடம் நமது மின்னம்பலம் சார்பில் இந்த விவாத்தை முன்வைத்து அவரது பார்வையையும், சென்னையின் வரலாறு குறித்தும் கேட்டோம். அவரது பேட்டியின் சுருக்கமான வடிவம்:

சென்னைக்கு 380 என வயதை வைத்து தினமாக கொண்டாடுவதை வரலாற்று ஆய்வாளராக எவ்வாறு பார்க்கிறீர்கள்? ஒரு சாரார் சரி என்றும், மறு சாரார் தவறு என்றும் இந்த கொண்டாட்டம் பல்வேறு விவாதங்களையும் உள்ளடக்கி உள்ளதே?

அப்படியாவது இந்த நகரத்தை கொண்டாடட்டுமே என்று தான் நான் கூறுவேன். இந்த தினம் வழியாக நாம் வாழும் நகரத்தை பற்றி அறிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது, நகரத்தின் வரலாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பாக்கங்களும், பட்டிணங்களுமாக இருந்த இடங்கள் பிரான்சிஸ் டே என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை என்ற பெரு நகரமாக கட்டமைக்கப்பட்டது. அந்த தினமே(ஆகஸ்ட் 22) சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது.

நாம் வாழும் நகரத்தை கொண்டாட, வெளிப்படுத்த, உலகிற்கு அறிவிக்க ஒரு தினம் தேவைப்படுகிறது. அவ்வளவுதான். இந்த நகரத்திற்கு வயது இவ்வளவுதானா போன்ற வாதங்கள் இருப்பினும் சென்னை ஒரு நவீன நகரமாக மாறத்துவங்கியது இந்த தினத்திலிருந்து தான் என்பதை மறுக்க முடியாது.

அப்படி என்றால் சென்னையின் வயது/வரலாறு என்ன?

சென்னையின் வரலாறு என்பது மிக நீண்ட வரலாறாகும். ராபர்ட் புரூஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் 1863ம் ஆண்டு பல்லாவரம் பகுதியில் கைகளால் செய்ப்பட்ட கல் கோடாரியைக் கண்டுபிடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து கொற்றலை ஆற்றுப் படுகையில் உள்ள குகைகளில் முதுமக்கள் தாழி, பானைகள், வெட்டுக் கருவிகள் என பல கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார். அவர் சென்னையில் கிடைத்துள்ள வரலாற்றுக் கருவிகள் அடிப்படையில் ‘மெட்ராஸ் தொழிற்சாலை’என்றே கூறுகிறார். ராபர்ட் புரூஸ் கண்டுபிடித்த கல் கோடாரியின் வயது 1.7மில்லியன் ஆண்டுகள். அப்படி என்றால் சென்னையின் வயதும்/வரலாறும் அதற்கு முன்பும் இருந்துள்ளது என்றுதானே அர்த்தம்?

சாந்தி பாபு என்பவர் சமீபத்தில் அப்பகுதியில் நிகழ்த்திய ஆய்வில் அதே போன்ற கல் கோடாரியைக் கண்டுபிடித்து ஆய்வு செய்யும் போது அதன் வயது 3.5 மில்லியன் ஆண்டுகள் என தெரியவந்துள்ளது. ஆக, சென்னையின் வரலாறு என்பது இன்னும் முழுமையாக கண்டறியப்படவே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

ஒவ்வொரு நாகரீகமும் நதிக்கரைகளில் தான் செழித்திருக்கிறது. அதனடிப்படையில் கூவம், அடையாறு என இரண்டு நதிகள் தான் சென்னையை செழிப்படையச் செய்துள்ளது. தற்போதுதான் நமக்கு நீர் நிலை மேலாண்மை பற்றிய பார்வைகளே ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்குள் 70சதவிகித ஏரிகளை இழந்திருக்கிறோம். கூவம், அடையாற்றை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் ஒரு தினத்தை வைத்துக் கொண்டாடுவது நுகர்வுக் கலாச்சாரத்தின் திணிப்பில்லையா?

நுகர்வு என்பது எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு நகரத்தின் வரலாற்றை பின்னோக்கிப் பார்த்து கற்றறிவதன் மூலம் தான், வருங்காலத்தில் நாம் சரியான பாதைகளில் முன்னோக்கிச் செல்ல முடியும். அதற்கான ஆரம்ப அடிப்படையாக ஏன் ஒரு தினத்தை வைத்துக் கொண்டாடிப் பார்க்கக் கூடாது? கடைசிக்கு, இப்போதாவது நாம் வாழும் நகரத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வோமே..அதனடிப்படையில், நுகர்வு என்பது சிறிய விலை தான்.

முகேஷ் சுப்ரமணியம்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


ப.சிதம்பரத்தின் நேற்றைய இரவு!


சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?


சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon