நவயுகா கட்டுமான நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் போலவரம் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான மாநில அரசின் உத்தரவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 22) தடை விதித்துள்ளது.
முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான போலவரத் திட்டத்தை தற்போதைய ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ரத்து செய்து புது டெண்டர் கோரத் திட்டமிட்டது. கோதாவரி ஆற்றில் அணை கட்டுவதற்கு முன்னாள் தெலுங்கு தேச எம்.பி. ராயபதி சம்பாசிவ ராவுக்கு சொந்தமான ட்ரான்ஸ்ட்ரோய் இந்தியா நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்பதாலும், கட்டுமான பணிகள் மெதுவாக நடைபெறுவதாக கூறியும் வேறு நிறுவனத்துக்கு டெண்டரை மாற்ற மத்திய அரசிடம் அனுமதி கோரினார் சந்திரபாபு நாயுடு.
கடந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி இந்த திட்டத்தை நவுயுகா கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புக்கொண்டார். தற்போது ரூ.3400 கோடி மதிப்பில் இந்த திட்டம் நவயுகா நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டார். மேலும் அதிகளவு ஊழல் நடந்திருப்பதாக நவயுகா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்து புது டெண்டருக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டிருந்தார். அந்த நிறுவனத்துக்கு டெண்டர் ரத்து செய்யப்படுவதாக எந்த நோட்டீசும் கொடுக்கப்படாமல் டெண்டர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்து நவயுகா நிறுவனம் சார்பில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாக திட்டத்தை முடிக்கும் நிலையில் இருப்பதாகவும், ஆந்திர மின் உற்பத்தி கழகத்தால் தான் தாமதம் ஏற்படுவதாகவும் வாதிடப்பட்டது.
ஆந்திர அரசு தரப்பில், பொதுக் கருவூலத்திலிருந்து நிறுவனத்திற்கு முன்கூட்டியே வழங்கப்பட்ட தொகை இந்தத்திட்டத்துக்கு பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நவுயுகா நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய டெண்டருக்கு அழைப்பு விடுத்த மாநில அரசின் உத்தரவுக்குத் தடை விதித்து ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது, இது ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, “முந்தைய அரசு கொண்டு வந்த வளர்ச்சிப் பணித் திட்டங்களை ரத்து செய்வதை தற்போதைய அரசு கவுரவமாக நினைக்கிறது. இந்த திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டியது. ஆனால் இல்லை என்று நீதிமன்றம் இன்று நிரூபித்துள்ளது. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் போலவரம் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!