ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது, நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
சிதம்பரம் டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தபோது சிபிஐ அதிகாரிகள் பேட்டி முடியும் வரை காத்திருந்தனர். அதன் பின் சிதம்பரத்தின் காரை பின் தொடர்ந்து அவரது வீட்டிற்குச் சென்றனர்.
சிதம்பரத்தோடு வழக்கறிஞர்களும் அவரது வீட்டுக்குள் நுழைந்த பின் வீட்டின் வாசல் கதவு அடைக்கப்பட்டது. பின்னாலேயே சென்ற சிபிஐ அதிகாரிகள் வாசலிலேயே சிறிது நேரம் நின்றனர். பின் போனில் சில விவாதங்கள் நடந்தபின் ஐந்து முதல் ஆறு அதிகாரிகள், ப. சிதம்பரம் வீட்டின் சுவரேறி உள்ளே குதித்தனர். அவர்கள் கேட்டை திறந்துவிட மற்ற அதிகாரிகளும் உள்ளே நுழைந்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டிற்குள் இவ்வாறு அத்துமீறி சிபிஐ அதிகாரிகள் நுழைவதா என நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் கேட்கத்தொடங்கியுள்ளன. பாஜக அரசு சிபிஐயை தனது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்காக பயன்படுத்திவருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். வீட்டின் சுவரேறி குதித்து நுழையும் செயலில் ஈடுபடுவது அநாகரீகம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பாஜகவினர் இதற்கு பதிலளிக்கும் விதமாக, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் வீடுகள், நிறுவனங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற சிபிஐ ரெய்டுகளை நினைவுபடுத்துகின்றனர்.
“ஏர்செல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரது வீடுகள், நிறுவனங்களில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி சிபிஐ ரெய்டு நடத்தியது. அப்போது சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் உள்ள தயாநிதி மாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அத்துமீறி சுவரேறி குதித்து உள்ளே நுழைந்தனர். அந்த சமயம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இப்போது கைதாகியுள்ள ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். தங்களது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டுக்குள்ளேயே சிபிஐ அதிகாரிகளை அவ்வாறு நுழையச் செய்தனர் காங்கிரஸ் கட்சியினர். எனவே அவர்கள் இந்த விவகாரத்தில் கருத்து சொல்வது நியாயமில்லை” என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
தயாநிதி மாறன் வீட்டில் நடந்தது என்ன?
2011 அக்டோபர் 10ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு நடத்துவதற்காக ராஜாஅண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள தயாநிதி மாறன் வீட்டிற்கு காலை 7.00 மணிக்கு வந்தனர். கதவை திறக்குமாறு கேட்டபோது வாசலில் நின்ற காவலாளி மறுத்து விட்டார். வீட்டில் உள்ளே இருக்கும் நபர்களிடம் இந்தத் தகவலை அவர் சொன்னார். ஆனால் எவ்வித பதிலும் இல்லை. அரை மணி நேரமாக காத்திருந்த அதிகாரிகள், ‘கதவை திறந்துவிடுங்கள், இல்லையென்றால் உங்களை கைது செய்வோம்’ என்று காவலாளியை மிரட்டிய பின்னர் கதவு திறந்து விடப்பட்டது. 7.35 மணிக்கு சி.பி.ஐ அதிகாரிகள் வாசல் வழியாகவே உள்ளே நுழைந்தனர். வீடு முழுவதும் சோதனையிடப்பட்டது. அப்போது வீட்டின் மாடியில் அவர்கள் சோதனை செய்தபோது எடுத்தப் படமே தற்போது பரவிவருகிறது. அன்றைய தினம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான பல இடங்களில் பல ஊர்களில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!