ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று பிற்பகலில் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு நிதியுதவியைப் பெற, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் இருந்து முறைகேடான வழியில் அனுமதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் ப.சிதம்பரத்தை டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அதிரடியாக கைது செய்து சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். சிபிஐ கட்டிடத்தில் உள்ள கெஸ்ட் அவுஸில் "லாக்-அப் சூட் 3" இல் சிதம்பரம் வைக்கப்பட்டுள்ளார். இரவில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரை உணவு எடுத்துக்கொள்ள வில்லை என்று கூறப்படும் நிலையில் அவரிடம் இன்று அதிகாலை முதலே சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். முதற்கட்டமாக, இவ்வழக்கில் இருக்கும் இந்திராணி முகர்ஜியைச் சந்தித்தது குறித்த விவரங்களை சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்திடம் கேட்டிருக்கின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று பிற்பகலில் அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி 2 மணிக்கு ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுக்கவுள்ளது.
இந்தநிலையில் சிதம்பரத்தின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தரப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே டெல்லி சென்றுள்ள கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், என் வாழ்நாளில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியைச் சந்தித்தது இல்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் நிறுவனத்துடன் நான் தொடர்பு வைத்திருந்ததில்லை. என்னை விசாரணைக்கு சிபிஐ அழைத்துச் சென்றபோதுதான் இந்திராணி முகர்ஜியைப் பார்த்தேன். எனது தந்தைக்கு மட்டுமல்ல இது காங்கிரசுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை. அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலைக் கட்டுப்படுத்தும் முயற்சி இது. இவ்விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம். காஷ்மீர் தலைவர்களுக்கு ஆதரவாக திமுக நடத்தும் போராட்டத்துக்காக ஜந்தர் மந்தர் செல்லவுள்ளேன்” என்று தெரிவித்தார்.
சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் பெற உச்ச நீதிமன்றத்தில் போராடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஏஎன்ஐ ஊடகத்துக்கு இன்று அளித்த பேட்டியில், ”நீதித்துறையில் பணியாற்றும் என்னை போன்றவர்களுக்கு பெரிதும் கவலை ஏற்பட்டிருக்கிறது. சாதாரண மக்களின் கவலையும் இதுதான். நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தான் நாங்கள் விரும்பினோம்.ஆனால் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவிட்டதாக கூறினார். ஒரு குடிமகனாக வழக்கு விசாரிக்கப்படக் கூடாதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இன்று காலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்பு உடையவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. 2001ல் குற்றம்சாட்டப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ள நிலையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். தனது மகளைக் கொலை செய்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சிதம்பரத்தைக் கைது செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!
சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?