முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொண்டார். “இந்த ஜனநாயக விரோதச்செயலை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று (22.8.2019) கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும்படி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன். இன்று (22.8.2019) காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஊர்வலமாக சென்று சென்னை அண்ணாசாலையில் நடைபெறும்” என்று அறிவித்திருந்தார்.
இதனால் இன்று காலை முதலே தமிழகத்தின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை சத்யமூர்த்தி பவனுக்கு அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். குமரி அனந்தன், கிருஷ்ண சாமி, கோபண்னா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஏற்கெனவே ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சத்யமூர்த்தி பவன் அருகில் குவிக்கப்பட்டனர். காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புவேலியைக் கடந்து சாலை மறியலில் ஈடுபட காங்கிரஸார் முயன்றதால் அவர்களைத் தூக்கி கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தின் போது மோடி ஒழிக என்ற கோஷத்தை முன்வைத்தனர்.
இதே போல் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். வாலஜாபாத் ரயில் நிலையம், மதுரை திருமங்கலம் தொலைபேசி அலுவலகம் ஆகியவற்றின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடியின் உருவ படம் எரிக்கப்பட்டது.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
சிதம்பரத்தின் கைது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!
சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?