தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. தண்ணீர் கனிமவளத்தில் சேர்க்கப்பட்டதால் அரசு தவிர தனியாருக்கு உரிமை தர முடியாது என்று அரசு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதன் அடிப்படையில் சட்டவிரோதமாகத் தண்ணீர் எடுக்கும் லாரிகள்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துவந்தனர்.
இந்த நிலையில் புறநகர்ப்பகுதிகளில், நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கக் கோரியும், நீரை கனிமவளங்கள் பட்டியலிலிருந்து நீக்கக் கோரியும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 4,500 தண்ணீர் லாரிகள் வரை இயங்கவில்லை.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது. வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் லாரி உரிமையாளர்களுடன் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முதற்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி, “தண்ணீர் எடுக்க முறையான அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். பேச்சுவார்த்தையின்போது மூன்று மாவட்டங்களில் தண்ணீர் எடுப்பதற்கான லைசென்ஸை லாரிகளுக்குக் கொடுத்துள்ளனர். மீதமுள்ளவற்றை இன்னும் ஓரிரு நாட்களில் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். மூன்று நாட்களுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து தண்ணீர் எடுக்க அனுமதியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் எங்களுடைய வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!
சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?
‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?
கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?