மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஆக 2019

சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி

சிதம்பரத்துக்காகக் காத்திருக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்: இங்கேயும் ஓ.பி.சைனி

முன்னாள் மத்திய உள் துறை, நிதியமைச்சரான ப.சிதம்பரம் நேற்று (ஆகஸ்ட் 21) இரவு 9.45 மணியளவில் அவரது ஜோர் பாக் வீட்டில் கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து கடந்த இரு நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் குவிந்திருந்த சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களின் கவனம் இப்போது ஒட்டுமொத்தமாக டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் மீது குவிந்திருக்கிறது. ஏனெனில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு இந்த நீதிமன்றத்தில்தான் நடைபெறுகிறது.

டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகஸ்ட் 20 மாலை முதல் ஆகஸ்ட் 21 மாலை வரை கடுமையாகப் போராடிவிட்டனர். கபில் சிபல், அவரது குழுவினர் எவ்வளவோ முயற்சி எடுத்தும் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமையே எடுத்துக்கொள்ள முடியும் என்று அறிவித்துவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதற்கிடையில் நேற்று இரவு சிபிஐ, சிதம்பரத்தைக் கைது செய்துவிட்டதால், உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு எவ்வித மதிப்பும் இன்றி போய்விட்டது. கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காகத்தான் அவசர வழக்காக எடுக்குமாறு சிதம்பரம் கேட்டது. இதை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், கைதும் நடந்துவிட்டது. எனவே, இனிமேல் உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு அர்த்தமில்லை.

இப்போது சிதம்பரத்தின் ஒட்டுமொத்த வழக்கறிஞர் குழுவின் கவனமும் மாவட்ட நீதிமன்ற வளாகமான ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் மீது திரும்பியிருக்கிறது. சட்டப்படியும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியும் கைது செய்யப்பட்ட ஒருவர் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.

அதன்படி நேற்று இரவு கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் இன்று பகல் அல்லது பிற்பகலில் ஐ.என்.எக்ஸ் வழக்கு நடக்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில்தான் ஆஜர்படுத்தப்படுவார். அப்போது சிதம்பரத்துக்கு ஜாமீன் கோருமாறு கேட்டு மனுத் தாக்கல் செய்ய அவரது வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.

கபில் சிபல், சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி என்று மூத்த வழக்கறிஞர்களே சிதம்பரத்துக்காகப் பம்பரமாகச் சுழன்று வருகிறார்கள்.

“ப.சிதம்பரத்துக்குக் கைது வாரண்ட் பிறப்பிக்கும் அளவுக்கு இந்த வழக்கு சட்ட ரீதியான வலிமை பெற்ற வழக்கு கிடையாது. முதல் தகவல் அறிக்கையில்கூட முழு தகவல் இல்லை. ஏற்கெனவே பல முறை சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியும் இன்னும் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை. எனவே சிதம்பரத்தைக் கைது செய்ய முகாந்திரமே இல்லை” என்பதையே ரோஸ் வியூ நீதிமன்றத்தில் வாதமாக முன்வைத்து சிதம்பரத்தை அங்கிருந்தபடியே வெளியே கொண்டுவர தீவிரமாகிறது அவரது வழக்கறிஞர்கள் தரப்பு.

ஆனால், சிபிஐ தரப்போ முழுக்க முழுக்க டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி. இவ்வழக்கில் சிதம்பரம் குற்றம் இழைத்திருப்பதற்கு முகாந்திரம் உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி, சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரத் தயாராகிறது.

இங்கேயும் ஓ.பி.சைனி

டெல்லி தீன தயாள் உபாத்யாயா மார்க் வளாகத்தில் எட்டு மாடி கட்டடமாக எழுப்பப்பட்டிருக்கிறது ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம். கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த நீதிமன்ற வளாகத்தில்தான் இனி எல்லா ஊழல் வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்ற அறிக்கையின்படி, அனைத்து சிறப்பு நீதிமன்றங்கள், சிபிஐ நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு, தொழிலாளர் விவகாரங்களுக்கான நீதிமன்றங்கள் ஆகியவை ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இயங்கத் தொடங்கியிருக்கின்றன.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனிதான், 42 நீதிமன்றங்களைக் கொண்ட ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தின் சிறப்பு நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் ப.சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் வழக்கு இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஒருவேளை இவ்வழக்கு நீதிபதி ஓ.பி.சைனியிடமே வருமா அல்லது வேறு நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

வியாழன் 22 ஆக 2019