ஐ.என்.எக்ஸ் வழக்கில் நேற்று (ஆகஸ்ட் 21) இரவு கைது செய்யப்பட்டிருக்கும் ப.சிதம்பரம், தன்னுடைய பொதுவாழ்வில் இரண்டாவது முறையாகச் சிறைக்குச் செல்கிறார்.
இதற்கு முன் ப.சிதம்பரம் சிறைக்குப் போனது எப்போது தெரியுமா? 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், சென்னையை அடுத்த மறைமலை நகர் ரயில்வே நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.மூப்பனார் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரமும் கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் ரிமாண்ட் செய்ய அன்றைய திமுக அரசு உத்தரவிட்டது. அதன்படி மாலை அனைவரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் அப்போது இருந்த சென்ட்ரல் சிறையில் அடைக்கப்பட்டனர். மறுநாள் காலையே அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதுதான் ப.சிதம்பரத்தின் முதல் கைது.
அதன்பின் பல ஆண்டுகள் காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவு ஆட்சிகளே மத்தியில் இருந்ததால் ப.சிதம்பரம் பெரிய அளவு போராட்டங்களில் கலந்துகொண்டதில்லை. ப.சிதம்பரத்தின் முதல் கைது நடைபெற்றபோது 15 மணி நேரம் சிறையில் இருந்தார். அவர் கைதானது அப்போது பெரிதாகப் பேசப்படவில்லை.
30 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டுள்ளார் சிதம்பரம். இப்போது அவரது கைது தேசமே விவாதிக்கக்கூடிய முக்கிய பிரச்சினையாகியிருக்கிறது. சிதம்பரம் முதல் முறை கைது செய்யப்பட்ட போராட்டம் வெற்றி அடைந்தது. பின், மறைலை நகர் ரயில் நிலையத்தின் பெயர் மறைமலை நகர் காமராஜர் ரயில் நிலையம் என மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!
சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?
‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?
கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?