மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

இப்போது சிதம்பரம், அடுத்து வதேரா?

இப்போது சிதம்பரம், அடுத்து வதேரா?வெற்றிநடை போடும் தமிழகம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சி நடத்திய அரசின் வலிமை வாய்ந்த அதிகார பீடங்களில் முக்கியமானவரான ப.சிதம்பரம் கைது காங்கிரஸ் கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைமை அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடவில்லை எனினும், நேற்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சிதம்பரம் செய்தியாளர்கள் மத்தியில் படித்த அறிக்கையே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கைதான். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சிதம்பரத்தின் பின்னால் உறுதியாகவும் முழுமையாகவும் நிற்கிறது என்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள்.

ப.சிதம்பரத்துக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும்கூட சிதம்பரத்தின் அனுபவம், அறிவுக் கூர்மை ஆகியவற்றை காங்கிரஸ் தலைமை மதித்தே வந்திருக்கிறது. காங்கிரஸ் புதிய தலைவர் யார் என்பதற்காக சில நாட்கள் முன்பு காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியபோது ராகுலுக்குப் பதிலாக முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜுன கார்கே போன்ற பெயர்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடிபட்டன.

ஆனால், அப்போது சோனியாவை தனியாகச் சந்தித்த சிதம்பரம், ‘இந்த நிலைமையில் உங்களைத் தவிர வேறு யார் தலைமை ஏத்துக்கிட்டாலும் சரியா இருக்காது. ராகுல் விரைவில் மனம் மாறி புது பலத்தோட வருவார். அதுவரை நீங்கதான் தலைவரா இருக்கணும். எல்லாருடைய ஒத்துழைப்பும் உங்களுக்கும் இருக்கும்’ என்று அவரை சமரசம் செய்திருக்கிறார். அங்கிருந்தபடியே ராகுல் காந்திக்கும் போன் போட்டுப் பேசி நிலைமையை விளக்கி சோனியாவை தலைவராக்கி இருக்கிறார் சிதம்பரம்.

இந்த பின்னணியில் சிதம்பரம் கைதைத் தவிர்க்க தனது முழு சட்ட வல்லுநர்களின் பலத்தை பயன்படுத்தியது காங்கிரஸ். ஆனால், நேற்று சிதம்பரம் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் கட்சியின் அடுத்தகட்ட நிலையை இன்று சோனியா காந்தி அறிவிக்கிறார்.

ராஜீவ் காந்தி 75 தொடர் நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சி இன்று டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரத்தின் கைது பற்றிய அடுத்தகட்ட விவரங்களை சோனியா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்னொரு தகவலும் காங்கிரஸ் வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.

“ஏற்கனவே மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடியின் மீது ஊழல் புகார்கள் வந்தபோது அதை காங்கிரஸ் தலைமை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்காகச் சில சலுகைகளை செய்யப் போய்தான் கல்மாடி சர்ச்சையில் சிக்கினார். அப்படியும் அவரை காங்கிரஸ் தலைமை கண்டுகொள்ளவில்லை.

ஆனால், இப்போது சிதம்பரத்துக்கு காங்கிரஸ் முழு வீச்சில் ஆதரவுக்கரம் நீட்டுவதற்குப் பின்னணி இருக்கிறது. சிதம்பரத்தை அடுத்து காங்கிரஸில் அமித் ஷா குறிவைத்திருப்பது பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீதான நில மோசடி வழக்குகள் பற்றிதான். எனவே சிதம்பரத்துக்கு இப்போது குரல் கொடுத்தால்தான், வதேரா மீது நடவடிக்கை எடுக்கப்படும்போதும் கட்சி ரீதியாக அதை எதிர்க்க முடியும். இந்தக் காரணத்தால்தான் சிதம்பரத்தை முழுதாக தாங்குகிறது காங்கிரஸ் கட்சி” என்கிறார்கள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon