ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதையடுத்து கார்த்தி சிதம்பரம் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்து முடித்ததும் தனது வீட்டுக்கு காரில் சென்ற ப.சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். சிதம்பரம் வீட்டினுள் சென்றதும் கேட் பூட்டப்பட்டது. இதனால் சுவரேறிக் குதித்து உள்ளே சென்ற சில அதிகாரிகள், கேட்டை திறந்து மற்ற அதிகாரிகளை வரவழைத்தனர். சுமார் 9.45 மணிக்கு சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் வீட்டிலிருந்து சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு காரில் அழைத்துச் சென்றனர்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டபோதே சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் அதிக அளவில் ஆதரவாளர்கள் வரத் தொடங்கிவிட்டனர். அவர்களிடம் கார்த்தி சிதம்பரம், ‘அதெல்லாம் பிரச்சினையில்லை, உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைத்துவிடும்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமைதான் முன் ஜாமீன் மனுவை விசாரிப்போம் என்று சொல்லிவிட்ட நிலையில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் ப.சிதம்பரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், சென்னையிலிருந்து தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கை உருவாக்கி நடந்த கைது நடவடிக்கை இது. 2008ஆம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லும் சம்பவங்களுக்கு ஒன்பது வருடங்கள் கழித்து 2017ஆம் ஆண்டுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதுதொடர்பாக எங்களது வீட்டில் நான்கு முறை ரெய்டு நடந்துள்ளது. இந்தியாவிலேயே யார் வீட்டிலும் நான்கு முறை ரெய்டு நடந்ததில்லை. இந்த வழக்கில் எனக்கு இதுவரை 20 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஆஜராகி 10 மணி நேரம் வரை விளக்கம் அளித்துள்ளேன். 11 நாட்கள் வரை சிபிஐ விருந்தாளியாக (சிறையில்) இருந்துள்ளேன். இருந்தும் இதுவரை குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யவில்லை” என்று தெரிவித்தவர்,
யாரையோ திருப்திப்படுத்துவதற்காகவும் ஊடகங்களில் சில காட்சிகள் வர வேண்டும் என்பதற்காகவுமே இது நடத்தப்படுகிறது. இது உண்மையான விசாரணை போன்றோ, சிபிஐயின் உண்மையான நடவடிக்கை போன்றோ தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
சிதம்பரம் கைதின் பின்னணியில் பாஜக தலையீடு இருக்கிறது என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “பாஜக பின்னணியில் இல்லாமல் வேறு யார் இருப்பர். டொனால்டு ட்ரம்பா இருப்பார். அனைத்தையும் நாங்கள் சட்டப்படியே சந்திப்போம். சட்டப்படி சந்தித்துதானே நான் தற்போது எம்.பி.யாகியுள்ளேன்” என்று பதிலளித்தார்.
உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதும் சிதம்பரம் மனைவியும் பிரபல வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் உடனடியாக டெல்லி சென்றுவிட்டார். இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 22) காலை 6.45 மணி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார் கார்த்தி சிதம்பரம்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!
சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?
‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?
கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?