மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

சிதம்பரம் கைது: தலைவர்கள் கருத்து!

சிதம்பரம் கைது: தலைவர்கள் கருத்து!வெற்றிநடை போடும் தமிழகம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று பரபரப்பான முறையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம் அந்தத் தடையை நீட்டித்து வந்த நிலையில், ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிரடியாக முன்ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்தது. இதனால் சிதம்பரத்தைக் கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தீவிரம் காட்டத் தொடங்கியது. அதன்பின், ப.சிதம்பரம் தலைமறைவாக உள்ளார் எனச் செய்திகள் வெளிவந்த நிலையில், நேற்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். அதைத் தொடர்ந்து, சிதம்பரம் தனது டெல்லி இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் வீட்டுச் சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்தனர்.

சிதம்பரத்தின் கைதை கண்டித்தும் ஆதரவு தெரிவித்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மகன் கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் வழக்கில் எதையும் சட்டப்படி சந்திப்போம். எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு ஜோடிக்கப்பட்டு எனது தந்தையைக் கைது செய்துள்ளனர். மேலும், யாரோ சிலரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக புலனாய்வு ஏஜென்சிகள் செய்யும் உணர்ச்சிகரமான நாடகம்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

சிதம்பரம் விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்வோடு, இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக தான் அறிகிறேன். சிதம்பரம், ஒரு சட்ட வல்லுனர். எனவே அவர், சட்ட ரீதியாக, நிச்சயமாக, இதை சந்திப்பார்.

முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

என்னுடைய சிபிஐ சர்வீஸில் எத்தனையோ வழக்குகளைப் பார்த்துள்ளேன் முன்ஜாமீன் வழக்கில் மூன்று நாட்கள் அவகாசம் என்ற நிலையில் இவ்வாறு கைது செய்ய மாட்டார்கள்.

சம்மன் கொடுத்து அவர் ஆஜராகி வந்தார். இரண்டு ஆண்டுகள் ஆஜரானவர் இரண்டு மணி நேரத்தில் ஓடிவிட மாட்டார். இதுபோன்ற நடவடிக்கையை சிபிஐ எந்த காலத்திலும் செய்ததில்லை. இந்திரா காந்தியைக் கைது செய்தபோதுகூட இப்படி நடந்ததில்லை.

அவரை கைது செய்யும்போது அவருக்கு பெயில் வழங்க சிபிஐ முன்வந்தது. ஆனால், சஞ்சய் காந்தி நீங்கள் வந்தது கைது செய்யத்தானே கைது செய்யுங்கள் என வற்புறுத்தியதால் கைது செய்தோம்.

ஆனாலும் சிபிஐ நீதிமன்றத்தில் அவரது பெயிலுக்கு ஆட்சேபனை இன்றி அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் மூன்று நாட்கள் அவகாசம் இருந்த நிலையில் சிபிஐ இவ்வளவு வேகமாக செயல்பட்டு கைது செய்துள்ளது நான் எதிர்பார்க்காத ஒன்று.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தலைகுனிவு. வீட்டைப் பூட்டிக்கொண்டு திறக்காமல் இருந்ததால்தான் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று அவரை கைது செய்யும் சூழல் ஏற்பட்டது. இதுபோன்று சிதம்பரம் நடந்து கொண்டது வியப்பாக இருக்கிறது. இவ்வாறு நடந்ததற்கு அவரே பொறுப்பு.

வி.சி.க தலைவர் திருமாவளவன்

ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்லர்; நாட்டின் உள் துறை, நிதியமைச்சராக இருந்தவர்.

ப.சிதம்பரத்துக்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்.

எச்.ராஜா, பா.ஜ.க

நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் செய்தவர் எப்போதும் நான் குற்றம் செய்தேன் என்று ஒத்துக்கொள்வதில்லை. எதிர்க்கட்சிகளின் போராட்டங்களையெல்லாம் கண்டு மத்திய அரசு அஞ்சாது.

ஜெயக்குமார், மீன் வளத்துறை அமைச்சர்

'மத்தியில், காங்கிரஸ் ஆட்சி வந்ததும், உடனடியாக, அ.தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்; அனைவரையும், சிறைக்கு அனுப்புவோம்' என, லோக்சபா தேர்தலின் போது, சிதம்பரம் கூறினார். இன்று அவருக்கே, அந்த நிலை ஏற்பட்டிருப்பது, பரிதாபத்துக்குரிய விஷயம். நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு, அவர் குற்றமற்றவர் என்பதை, நிரூபிக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர்

காஷ்மீர் விவகாரத்தை மூடிமறைக்கவே சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon