முன்னாள் மத்திய அமைச்சரும் ஒன்பது முறை பட்ஜெட் தாக்கல் செய்தவருமான ப.சிதம்பரம் நேற்றிரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த 2007ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், மொரிஷியஸ் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவில் முதலீடுகளைப் பெறுவதற்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி கொடுத்தது. ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துடன் ஐ.என்.எக்ஸ் மீடியா சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடத்தி அதற்கு பிரதிபலனாகவே, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு இந்திய முதலீட்டுக்கான அனுமதியை கார்த்தி சிதம்பரம் பெற்றுத் தந்தார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில்தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தேசியத்தை தாண்டி சர்வதேச அளவிலும் எதிரொலிக்கக் கூடும்.
ஏனெனில் ப.சிதம்பரம் வெறும் தேசிய புள்ளி மட்டுமல்லர். உள் துறை மற்றும் நிதியமைச்சராக இருந்தபோது பல நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டதன் மூலம் அந்நாட்டு முக்கிய அரசியல் தலைவர்களோடு தொடர்பில் இருப்பவர். துபாய் நாட்டுக்கான பட்ஜெட் தயாரிப்பதில் உதவக்கோரி அவர்கள் அழைக்கும் அளவுக்குத் தொடர்புகள் உள்ளவர். எனவே சிதம்பரத்தை ஒரு சர்வதேச பிரமுகர் என்ற அளவுகோலில்தான் பார்க்கிறார்கள்.
அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் முதலீடுகளைப் பெறுவதில் ஏதாவது ஒரு வகையில் குறைகளைக் கண்டுபிடித்து குற்றம்சாட்டிவிடலாம் என்ற நிலைதான் உள்ளது. தற்போது சிதம்பரத்தின் கைதைப் பார்க்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், அந்நிய முதலீட்டு வாரியத்தின் மூலமாக இந்தியாவில் முதலீடுகள் செய்தால் அது தமக்கும் இதுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கருதலாம்.
மேலும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல் துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியையடுத்து, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது பணி நாட்களைக் குறைத்துள்ளது. அதேபோல நுகர்வு மந்தநிலை தொடர்ந்தால் 10,000 ஊழியர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகும் என பார்லே-ஜி பிஸ்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் இந்திய நிறுவனங்களே சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் முதலீடு செய்தால் தனக்கும் அதே நிலை ஏற்படலாம் என்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கருதக்கூடும்.
ஆகவே, இந்த இரு காரணங்களுக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளின் அளவுகள் குறையலாம் என்று கூறுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!
80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!
சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?
‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?
கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?