மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

மாணவர்கள் தொடர் தற்கொலை: எஸ்.ஆர்.எம்மில் ரெய்டு!

மாணவர்கள் தொடர் தற்கொலை: எஸ்.ஆர்.எம்மில் ரெய்டு!

சென்னைக்கு அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று ஏழு மணி நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மாணவர்களின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயோ மெடிக்கல் பயின்று வந்த, பொன்னேரியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகள் அனுப்பிரியா மே 26ஆம் தேதி பல்கலையில் உள்ள விடுதியின் பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற அடுத்த 24 மணி நேரத்தில், ஜார்கண்டைச் சேர்ந்த அனுஷ் செளத்ரி என்ற பொறியியல் (ஈ.சி.ஈ) துறை மாணவர் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஜூலை 15ஆம் தேதி கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ், பி.டெக் இறுதியாண்டு மாணவர் பல்கலையில் உள்ள டெக்பார்க் கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த மூன்று மாணவர்களின் மரணம் குறித்த விசாரணையை ஜூலை 17ஆம் தேதி மத்தியக் குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு மாற்றி காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார்.

நேற்று (ஆகஸ்ட் 20) காவல் துறை இணை ஆணையர் மல்லிகா தலைமையில் 31 பேர் கொண்ட காவலர்கள் டீம் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்தியது. அப்போது பதிவாளர், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிசிடிவி கேமராக்களின் இரண்டு டிவிஆர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவாளர் என்.சேதுராமன், பல்கலைக்கழகத்தில் முழுநேர மனநல மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மாணவர்களின் சேர்க்கையின்போது பெற்றோர்களுடன் நடைபெற்ற விவாதங்களின் ஆவணங்களும் காவல் துறைக்குக் காட்டப்பட்டதாகவும், மாணவர்கள் ஊக்கப்படுத்தும் விதமான உரைகளைக் கேட்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon