மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஆக 2019

டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!

டிஜிட்டல் திண்ணை: திண்டாடும் சிதம்பரம்-கொண்டாடும் திமுக!

மொபைல் டேட்டா ஆன்லைனில் இருந்தது. லொக்கேஷன் சென்னை காட்டியது.

வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை முதல் தலைமறைவாகிவிட்டார். நேற்று இரவு முழுதும் டெல்லி மற்றும் பிறபகுதிகளில் சிபிஐ தேடுதல் வேட்டை நடத்தியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்று காலை உச்ச நீதிமன்றம் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டது. கபில் சிபல், சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி ஆகிய உச்ச நீதிமன்றத்தில் பிரத்யேக திறமை பெற்ற வழக்கறிஞர்களே போராடியும் மனுவை விசாரணைக்கு ஏற்கவில்லை தலைமை நீதிபதி. ஆகஸ்டு 23 ஆம் தேதிதான் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. எனவே இன்றிரவோ நாளையோ சிதம்பரம் கைதாகிவிடுவார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்றபோதும் சிதம்பரத்தின் இப்போதைய நிலைமையை தமிழகத்தில் பாஜகவினரை விட அதிகமாக ரசித்துக் கொண்டாடுபவர்கள் திமுகவினர்தான். குறிப்பாக சமூக தளங்களில் திமுகவினர் வெளிப்படையாகவே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

‘2011ல் திமுகவுக்கும், இனமான ராசாவுக்கும் என்ன செய்தார்களோ, அதுவே இன்று காங்கிரசுக்கும், ப.சிதம்பரத்துக்கும் நிகழ்கிறது. இடுக்கண் வருங்கால் என்று அன்றே சொன்னான் வள்ளுவன்’ என்றும், ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்றெல்லாம் சமூக தளங்களில் சிதம்பரத்துக்கு எதிரான கருத்துகளே திமுகவினரால் பரப்பப்பட்டு வருகின்றன.

திமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இந்த மனநிலை என்றால் கலைஞரின் குடும்பத்தினர், ஸ்டாலின் குடும்பத்தினரும் கூட டெல்லியில் நடக்கும் விஷயங்களை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் திமுக மீது சுமத்தப்பட்ட 2ஜி ஊழல் புகாருக்கு பெரும் பின்னணியாக இருந்தவரே சிதம்பரம்தான். 2ஜி விவகாரத்துல அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லி பிரணாப் முகர்ஜி மூலமா கலைஞருக்கே நெருக்கடி கொடுத்தது சிதம்பரம்தான். ‘ராஜினாமா செய்யச் சொல்லிடுங்க. பிரச்சினை பெரிசாகாம பாத்துக்கலாம்’ என்று கலைஞரிடம் பிரணாப்பை விட்டு பேச வைத்து அதன் பின்னர் ஆ.ராசாவை கைது செய்தது மட்டுமில்லாமல், கனிமொழியையும் இந்த வழக்கில் பிணைத்தவர் சிதம்பரம்தான். இந்த ஊழல் புகார்களால் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் வரைக்கும் வாங்கிக் கொண்டதற்குக் காரணமும் சிதம்பரம்தான். அறிவாலயத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே,மாடியில் இருக்கும் கலைஞர் டிவியில் ரெய்டு நடத்தி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தியது சிபிஐ.

இதுபற்றியெல்லாம் அப்போது திமுக முக்கியப் புள்ளி ஒருவர் உள்துறை அமைச்சராக சிபிஐயை கையில் வைத்திருந்த சிதம்பரத்துக்கு போன் போட்டு, ‘ஏன் இப்படி பண்றீங்க? தலைவர் ரொம்ப வேதனையில இருக்காரு’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ப.சிதம்பரம், ‘இது கட்சி, அது ஆட்சி’ என்று கூட்டணிப் பேச்சையும், சிபிஐ ரெய்டையும் ஒப்பிட்டுப் பதில் கொடுத்திருக்கிறார். சிதம்பரத்தின் வார்த்தைகள் அப்படியே கலைஞருக்கு கொண்டு செல்லப்பட்டபோது கொதித்துவிட்டார் அவர்.

2ஜி ஊழல் மூலம் திமுகவை தமிழக அரசியலில் இருந்தே ஓரங்கட்டிவிட்டு காங்கிரசை பலப்படுத்தி தான் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்ற திட்டமும் சிதம்பரத்துக்கு இருந்தது. ஆனால் சிதம்பரத்தின் திட்டப்படி திமுக வீழ்ந்ததே தவிர, காங்கிரஸ் வளரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தின் தாயார் மறைந்துவிட்டார். தனது நீண்ட நெடிய பொதுவாழ்வில் அரசியல் மாச்சரியங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு எதிர்முகாமைச் சேர்ந்தவர்களின் இறப்புக்கு கூட அஞ்சலி செலுத்துவதும் இரங்கல் வெளியிடுவதும் கலைஞரின் வழக்கம். ஆனால் ப.சிதம்பரத்தின் தாயார் மறைவுக்கு கலைஞர் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. வீட்டில் சிலர், ‘நாங்க போய் பார்த்துட்டு வந்துடட்டுமா’ என்று கலைஞரிடம் கேட்டுப் பார்த்ததற்கு, ‘வெட்கம் , சூடு , சொரணை இல்லாதவன் தான் அங்க போவான்’ என்று பதில் சொன்னார் கலைஞர். மறப்போம், மன்னிப்போம்னு எப்போதும் சொல்கிற கலைஞரே அந்த அளவுக்கு பதில் சொன்னார் என்றால்... கடைசி காலத்தில் அரசியல் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் கலைஞர் அனுபவித்த வேதனைகளுக்கு சிதம்பரம் எவ்வளவு தூரம் காரணமா இருந்திருப்பார்னு பார்த்துக்கங்க. கலைஞரே மன்னிக்க முடியாத சிதம்பரத்தை நாங்க எப்படி மன்னிப்போம்’ என்கிறார்கள் கலைஞரின் குடும்ப வட்டாரத்தில். இந்த சூழலில்தான் சிதம்பரம் விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘அவர் சட்ட வல்லுநர். தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படினு அவருக்குத் தெரியும்’ என்று பூடகமாக ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார். ஆக சிதம்பரம் கைதானால் திமுகவினர் வெடிவெடிக்காத குறையாய் கொண்டாடுவதுதான் தமிழக அரசியல் நிலவரம்’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

இதை காப்பி செய்துகொண்ட ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டசை டைப் செய்யத் தொடங்கியது

“2019 தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் மோடி- அமித் ஷாவின் கவனம் தன் மீதுதான் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தார் ப.சிதம்பரம். அதனால்தான் 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக சீட் வாங்க கெடுபிடி காட்டிய சிதம்பரம் 2019 மக்களவைத் தேர்தலில் திமுக எத்தனை சீட் கொடுத்தாலும் நாம வாங்கிக்கணும், நம்ம நோக்கம் மோடி வந்துவிடக் கூடாதுதான் என்று தன் அணுகுமுறையை மாற்றினார் என்கிறார்கள்.

இதற்கிடையில் திமுகவுக்கு இணையாக சிதம்பரத்தின் நிலை பற்றி தமாகாவினரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கொண்டாட்டத்துக்கு என்ன காரணம் என்றால், கடந்த எம்பி. தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஏழு, தமாகாவுக்கு 3 என பத்து தொகுதிகள் தயாராக வைத்திருந்தது திமுக. இதுபற்றி ஸ்டாலின் சார்பில் சுனில் தமாகாவின் தலைவர் ஜி.கே.வாசனிடம் பேசி ஒ.கே. செய்துள்ளார். தமாகாவும் காத்திருந்த வேளையில் சிதம்பரம்தான் ராகுலிடம் சொல்லி, ‘தமாகா நம்ம அணிக்கு வரவே கூடாது’ என்று அழுத்தம் கொடுக்க, ‘காங்கிரஸுக்கு என வைத்திருக்கும் பத்து சீட்டுகளையும் எங்களுக்கே கொடுத்துடுங்க’ என்று அனைத்தையும் வாங்கிக் கொண்டது காங்கிரஸ் . இதனால் சிதம்பரம் மீது கடுமையான அதிருப்தியில் இருந்த தமாகாவினர் இப்போது அதை வெளிக்காட்டுகிறார்கள்” என்ற ஸ்டேட்டசை போஸ்ட் செய்துவிட்டு ஆஃப் லைன் போனது.


மேலும் படிக்க


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

புதன் 21 ஆக 2019