மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

பார்லே பிஸ்கட்: 10,000 ஊழியர்கள் வேலையிழப்பு!

பார்லே பிஸ்கட்: 10,000 ஊழியர்கள் வேலையிழப்பு!

நாட்டின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே செவ்வாய் அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்போதுள்ள நுகர்வு மந்தநிலை தொடர்ந்தால் 8000 முதல் 10000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளது.

1929ஆம் ஆண்டு மும்பையில் சௌகான் குடும்பத்தாரால் தொடங்கப்பட்டது பார்லே நிறுவனம். 1939ஆம் ஆண்டிலிருந்து பிஸ்கட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பார்லே நிறுவனம் இந்தியா சுதந்திரமடைந்த பின் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு மாற்றாக குளுக்கோஸ் பிஸ்கட்டுகளை பிரபலப்படுத்தியது.

தற்போது 1000 கோடி ரூபாய் விற்பனையுடன் பார்லே நிறுவனம் பார்லே -ஜி, மொனாகோ, மேரி பிராண்ட் பிஸ்கட்ஸ் தயாரிப்புகளை வைத்துள்ளது. ஒரு லட்சம் ஊழியர்களுடன் சொந்தமாக 10 தொழிற்கூடங்களைக் கொண்டுள்ளது, மேலும் 125 மூன்றாம் தரப்பு தயாரிப்பு வசதிகளையும் பெற்றுள்ளது. பாதிக்கும் அதிகமான பார்லே நிறுவன தயாரிப்புகள் கிராமப்புற சந்தைகளில் விற்பனையாகிறது.

“ஒரு கிலோ 100 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான பேக்குகளின் ஜிஎஸ்டியை குறைக்கச் சொல்லி கேட்டுள்ளோம், அவை 5ரூ அல்லது அதற்கும் குறைவாக விற்கப்படும் பிஸ்கட்டுகள் ஆகும். அரசு அதை செய்ய மறுக்கின்றது, ஏற்கெனவே விற்பனை குறைவு எங்களைக் கடுமையாக பாதிக்கின்ற நிலையில் 8000 முதல் 10,000 உழியர்களை பணிநீக்கம் செய்வதை விடுத்து வேறு வழி இல்லை”என்று பார்லே தயாரிப்புகளின் தலைவர் மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.

ரூ 100 மற்றும் அதற்கு குறைவான ஒரு கிலோ பிஸ்கட் பேக்குகளுக்கு இதற்கு முன்பாக 12 % வரி விதிக்கப்பட்டிருந்தது. பிஸ்கட் நிறுவனங்கள் அதிக விலையுள்ள பிஸ்கட்டுகளுக்கு 12% ஜிஎஸ்டியும், குறைந்த விலையுள்ள பிஸ்கட்டுகளுக்கு 5% ஜிஎஸ்டியும் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தன, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு அனைத்து பிஸ்கட்டுகளுக்கும் 18% ஜிஎஸ்டியை நிர்ணயித்தது. இதனால் நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது அதன் விளைவாக விற்பனை குறைந்துள்ளது. பார்லே நிறுவனமும் 5% விலையை உயர்த்த அது விற்பனைக் குறைவுக்கு காரணமாக அமைந்ததாக ஷா தெரிவித்துள்ளார்.

மக்கள் 5ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுகளைக்கூட வாங்க தயக்கம் காட்டுகின்ற நிலையில் மற்றொரு முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியாவின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி இது குறித்து பேசியுள்ளார். “இது பொருளாதாரத்தில் மிக மோசமான பிரச்சினை” என்று எக்னாமிக்ஸ் டைம்ஸ் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு காலாண்டுகளில் நுகர்வோர்களின் தரம் மிகவும் குறைந்துள்ளதாகவும், சில்லறை வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பார்லே நிறுவன தலைவர் ஷா கூறியுள்ளார். “ஜிஎஸ்டி உயர்வாலும் அரசின் போதுமான ஒத்துழைப்பு இல்லாததாலுமே நுகர்வோர்களின் தேவையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எங்களது பல்வேறு பிஸ்கட் பிராண்டுகளை நடுத்தர மற்றும் ஏழை மக்களே வாங்குகிறார்கள். இந்த பிரச்சினையை அரசு சரிசெய்ய முயலுமானால் ஜிஎஸ்டியை திரும்பப்பெறும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சந்தை ஆய்வாளர் நீல்சன் கடந்த மாதம் விரைவாக விற்பனையாகும் சரக்குகள் துறையின் வளர்ச்சியைக் கணக்கிட்டுள்ளார். இந்தத் துறையில் 2019ஆம் ஆண்டு 9-10% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது 11 -12 %ஆக இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புற விற்பனை மிகவும் குறைந்துள்ளது. மேலும் இந்த விற்பனைக் குறைவு, உணவு மற்றும் உணவு சாராத பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது உப்பு சேர்க்கப்பட்ட திண்பண்டங்கள், பிஸ்கட்டுகள், கார உணவுகள், சோப்புகள், டீ பாக்கெட்டுகள் ஆகியவற்றின் விற்பனையும் குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

கார்கள், பைக்குகள் என விலை அதிகமான மோட்டார் வாகனங்களின் விற்பனை மட்டுமல்ல 5 ரூபாய் பிஸ்கட் விற்பனையும் குறைந்துள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவிக்கும்போது அனைத்து தரப்பிலும் பொருளாதார மந்தநிலை எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணரமுடிகிறது.


மேலும் படிக்க


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?


வியாழன், 22 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon