மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

கபில் சிபல் அலுவலகத்தில் சிதம்பரம்?- காத்திருக்கும் சிபிஐ

கபில் சிபல்  அலுவலகத்தில் சிதம்பரம்?- காத்திருக்கும் சிபிஐ

இந்திய அரசியல் வட்டாரத்தையே நேற்று முதல் உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி, சிதம்பரம் எங்கே என்பதுதான்.

நேற்று (ஆகஸ்டு 20) மாலை சென்னை உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, சில மணித்துளிகளில் உச்ச நீதிமன்றமும் அவரது மேல்முறையீட்டை அவசர மனுவாக ஏற்க மறுத்துவிட்ட நிலையில் சிதம்பரம் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை.

டெல்லியில் ஜோர் பாக் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு நேற்று மாலை சிபிஐ, அமலாக்கத்துறை குழுவினர் சென்றனர். ஒருமணி நேரம் காத்திருந்த அவர்கள் நோட்டீசை ஒட்டிவிட்டுத் திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா டென்ஷனாகி, ‘சிதம்பரம் எங்கே?’ என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகளை எல்லாம் கேள்விக் கணைகளால் துளைத்திருக்கிறார். இரவு பத்து மணிக்கு மேல், ‘சிதம்பரம் ஏதேனும் வெளிநாட்டு தூதரக வளாகத்தில் நட்பு ரீதியாக இருக்கலாம்’ என்று ஒரு தகவல் சிபிஐக்கு கிடைத்தது. ஆனால் அது உறுதியாகவில்லை.

இந்த நிலையில் இன்று பகலில் சிபிஐக்கு கிடைத்த தகவல்படி சிதம்பரம் தனது வழக்கறிஞரான கபில் சிபலின் அலுவலகத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கபில் சிபல் மூத்த வழக்கறிஞர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை மரியாதை மிக்கவர். அவர் மாதம் 12 லட்சம் ரூபாய் வாடகையில் மிகப்பெரிய அலுவலகத்தை டெல்லியில் வைத்திருக்கிறார். அங்கேதான் சிதம்பரம் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு தகவல் சிபிஐக்குக் கிடைத்திருக்கிறது.

“பொதுவாகவே வழக்கறிஞர்களின் அலுவலகத்துக்குள் போலீஸார், சிபிஐ அதிகாரிகள் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய வேண்டிய நிலைமை கட்டாயமோ, ஆஜர்படுத்த வேண்டிய கட்டாயமோ ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரே நீதிமன்றத்தில் தனது கட்சிக்காரரை கொண்டு வந்து நிறுத்திவிடுவார். எனவே வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் எப்போதும் போலீஸார் நுழைவதில்லை.

இந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரத்தின் மனுவுக்கு முடிவு கிடைக்கும் வரை, அது அவருக்கு சாதகமாக இருக்கிறதோ, பாதகமாக இருக்கிறதோ முடிவு கிடைக்கும் வரை கபில் சிபலின் அலுவலகத்தில் சிதம்பரம் இருக்க தடையில்லை. எனவே அங்கேதான் சிதம்பரம் தற்போது இருக்கிறார் என்று கருதுகிறது சிபிஐ. இதையடுத்து கபில் சிபலின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியை முழு கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளது. அவரது அலுவலகத்துக்குள் நுழைந்து சிதம்பரம் இருக்கிறாரா என்று தேடுதல் வேட்டை நடத்தலாமா என்று உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள் சிபிஐ அதிகாரிகள்” என்கிறார்கள் டெல்லி வழக்கறிஞர் வட்டாரங்களில்.

புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon