மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

வீட்டுக்கு நான்கு கார்: அமைச்சர் எம்.சி.சம்பத்

வீட்டுக்கு நான்கு கார்: அமைச்சர் எம்.சி.சம்பத்

மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் வியாபார மந்த நிலையால் தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

வியாபார மந்தநிலை காரணமாக முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வேலைநாள்களைக் குறைத்துவருகின்றன. இதனால் வாகனங்களுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் பல நிறுவனங்களும் வேலைநாள்களை குறைத்துவருகின்றன.

இதனால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துவருகின்றனர். கோவை சிட்கோ தொழிற்பேட்டை மிகவும் களையிழந்து காணப்படுகிறது. அங்குள்ள நிறுவனங்கள் மூன்று ஷிப்டுகளிலி்ருந்து ஒரு ஷிப்டாக குறைத்துள்ளனர். இந்த நிறுவனங்களில் பணியாற்றிவந்த பெரும்பாலான வட இந்திய ஊழியர்கள் வேலை பறிபோனதால் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

நாட்டையே உலுக்கியுள்ள இந்தப் பிரச்சினையில் தமிழக தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நியூஸ்18 ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“நாடு முழுவதுமே மக்களுக்கு வாங்கும் சக்தி குறைந்ததனால் மோட்டார் வாகன விற்பனை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி விதிக்கப்பட்டபின் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, செஸ் போன்ற வரிகளை குறைக்க எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இரண்டு நாள்களில் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பிரதமர், நிதியமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வோம்” என்று எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலிருந்து தொழிலாளர்களைக் காக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது குறித்து பேசிய அமைச்சர், “மூன்று நாள்களுக்கு முன்னதாக அனைத்து மோட்டார் வாகன நிறுவனங்களைச் சார்ந்தவர்களுடன் தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தினோம். இந்த அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த சில முடிவுகளை எடுத்துள்ளோம். தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் அதில் கலந்துகொண்டார். அந்தத்துறையில் திறன் மேம்பாட்டு பிரிவில் 250 கோடி ரூபாய் உள்ளது.

வேலை பறிபோய்விடுமோ என்ற மன அழுத்தத்தி்ல் உள்ள நம் மாநிலத்தவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாகவும், தொடர்ந்து அவர்களை வேலையில் இருக்கச் செய்வதற்காகவும் அந்தத் தொகையை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி திட்டமிட்டுவருகிறோம்.

நாளை மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்தாலும் இவர்கள்தான் அங்கு பணியாற்ற வேண்டும். இந்த இடைப்பட்ட காலங்களில் அவர்களை மன நிம்மதியோடு எப்படி வைத்துக்கொள்வது, அவர்களது பொருளாதாரம் குறைந்துவிடாமல் என்ன செய்வது என்பது பற்றி முடிவுகள் எடுக்கப்படும். அவர்களைத் தக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

இந்த மந்தநிலைக்கான காரணங்களை பட்டியலிட்ட அமைச்சர், “இங்கு உற்பத்தி அதிகமாகிவருகிறது. 16 லட்சம் கார் உற்பத்தியாகிறது. வீட்டுக்கு 4 கார்கள் உள்ளன. ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள்கூட 25,000 ரூபாயை ஈஎம்ஐ கட்டி கார் வாங்குகிறார்கள். மின்சார வாகனம் வரவுள்ளது என்ற பார்வையும் தற்போதுள்ள மந்தநிலைக்கு ஒரு காரணம். வங்கிகள் கடன் கொடுப்பது குறைந்து போனது என இந்த வியாபார மந்த நிலைக்கு பல காரணங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


சிதம்பரத்துக்கு வெளிநாட்டு தூதரகம் அடைக்கலம்?


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


மாணவர்கள் தொடர் தற்கொலை: எஸ்.ஆர்.எம்மில் ரெய்டு!


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon