மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

கிச்சன் கீர்த்தனா: மணத்தக்காளிக்கீரை சூப்

கிச்சன் கீர்த்தனா: மணத்தக்காளிக்கீரை சூப்

மழைக்காலங்களில் காபி, டீக்குப் பதிலாக காய்கறி சூப் அருந்தலாம். முற்றிய வெண்டைக்காயில் சூப் செய்து அருந்தினாலும் தக்காளியில் சூப் செய்து அருந்தினாலும் இருமல், ஜலதோஷம் விலகும். மழையில் நனைவதாலோ அல்லது குளிர்ந்த சூழலாலோ மூக்கை அடைத்துக்கொண்டு சளி பிடிப்பதுபோல இருக்கும். அது போன்ற சூழலில் மணத்தக்காளிக்கீரையை சூப் செய்து அருந்தினால் உடனடியாக ஜலதோஷம் விலகும். மணத்தக்காளி குளிர்ச்சியூட்டக்கூடியது என்றாலும், அதை சூப் வடிவில் செய்து சூடாக அருந்தினால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்றவை குணமாகும்.

என்ன தேவை?

மணத்தக்காளிக்கீரை - ஒரு கட்டு

வெங்காயம் - 1

தக்காளி - 1

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2

மிளகுத் தூள் - சிறிது

தண்ணீர் - 2 டம்ளர்

எலுமிச்சை - அரை மூடி

நல்லெண்ணெய் - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - தேவையான அளவு

உளுந்து - தாளிக்க

எப்படிச் செய்வது?

மணத்தக்காளிக்கீரையைச் சுத்தம் செய்து இலையை மட்டும் நறுக்கி வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். அடுத்து அதில் மணத்தக்காளிக்கீரையைச் சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். 2 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து அதை அரைத்த கீரை கலவையில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலக்கி இறக்கவும். இறக்கியவுடன் எலுமிச்சைச்சாறு ஐந்து சொட்டு விட்டு கலக்கி பரிமாறவும்.

சிறப்பு

இந்த மணத்தக்காளி சூப் வயிற்று புண், வயிற்றுக்கோளாறுகளையும் சரிசெய்யும்.

நேற்றைய ரெசிப்பி: முட்டைகோஸ் மிளகு பொரியல்

புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது