மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

கைது விளிம்பில் சிதம்பரம்: உச்ச நீதிமன்றத்தின் கையில் முடிவு!

கைது விளிம்பில் சிதம்பரம்: உச்ச நீதிமன்றத்தின் கையில் முடிவு!

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் தன் வாழ்நாளில் நேற்றைய இரவைப் போல வேறு ஓர் இரவைப் பதற்றத்துடன் கழித்திருக்க மாட்டார். வீட்டு வாசலில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் நிற்க, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது. வீட்டிலும் அவர் இல்லை. சிதம்பரம் தொடர்புகொள்ள முடியாத நிலைக்குப் போய்விட்டார் என்று பிரபல ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. சிதம்பரம் தலைமறைவாகிவிட்டார் என்பதைத்தான் அந்த ஏடுகள் வேறு மாதிரி வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தன.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு நேற்று (ஆகஸ்ட் 20) மாலை டெல்லி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கவுர் தன் தீர்ப்பில் தெரிவித்த விஷயங்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன. “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடுத்தார்கள் என்பதைவிட, இந்த வழக்கு தெளிவான பண மோசடி வழக்கு. இதில் ப.சிதம்பரம் எம்.பி.யாக இருக்கிறார் என்பதே அவரை கைது செய்யாமல் இருக்க காரணமாகிவிடாது. எனவே ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்ததும் உடனடியாக சிதம்பரம் தரப்பு அடுத்த சட்ட மூளையைப் பயன்படுத்தியது.

“முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட தீர்ப்பை ஒரு வாரம் நிறுத்தி வையுங்கள். அதற்குள் மனுதாரர் உச்ச நீதிமன்றம் செல்ல வசதியாக இருக்கும்” என்று சிதம்பரம் தரப்பு வாதாடியது. ஆனால், ஒரு மணி நேரத்துக்குப் பின் நீதிபதி கவுர், “முன்ஜாமீன் மறுப்பு என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றமே நிறுத்திவைக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தை அணுகுங்கள்” என்று மறுத்துவிடவும்தான், சிதம்பரத்துக்கும் சிறைக்குமான தூரம் வெகுவாகக் குறைந்தது.

உடனடியாக ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், அப்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முக்கிய வழக்கான அயோத்தி வழக்கின் விசாரணையில் ஈடுபட்டிருந்தது. ஆனபோதும் கபில் சிபலின் செல்வாக்கால், உச்ச நீதிமன்ற இணைப் பதிவாளரிடம், ‘இந்த மனு அவசரமாக விசாரிக்கப்பட வேண்டும்’ என்று அழுத்தம் தரப்பட்டது. இதையடுத்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ப.சிதம்பரத்துக்காக செய்த அவசர மனு பற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் சேம்பர்ஸுக்கே சென்று அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றனர் உச்ச நீதிமன்ற அலுவலர்கள். அப்போது தலைமை நீதிபதி, ‘இம்மனுவை நாளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நீதிபதி விசாரிப்பார்’ என்று சொல்லிவிட்டார்.

இந்த நிலையில்தான் கடந்த ஒரு வருடமாக டெல்லி உயர் நீதிமன்றத்தால், கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றப்பட்டு வந்த ப.சிதம்பரம் இன்று தன் அரசியல் வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் நிற்கிறார்.

நீதிபதியின் மீது காங்கிரஸ் புகார்!

இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கவுர் மீதும் காங்கிரஸ் கட்சி புகார்களை கூறியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுஜிவாலா நேற்று (ஆகஸ்ட் 20) இரவு 11.42 மணிக்கு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மோடியின் போலீஸ் அரசாங்கத்தின் பழிவாங்கும் தன்மையின் மிக மோசமான வெளிப்பாடுதான் இது. இந்த வழக்கின் தீர்ப்பை ஏழு மாதங்களுக்கு முன் ஒத்திவைத்த நீதிபதி, தான் ஓய்வு பெறுவதற்கு 72 மணி நேரம் முன்பு தீர்ப்பு வழங்குகிறார். அதன்பின் உடனே சிபிஐ, அமலாக்கத் துறை ப.சிதம்பரம் வீட்டுக்குச் செல்கிறது. என்ன ஜனநாயகம் இது?”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ். வழக்கு, அது கடந்து வந்த பாதை

2017 மே 15:

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த 2007ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் முதலீடுகளைப் பெறுவதற்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி கொடுத்தது. அப்போது நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துடன் ஐ.என்.எக்ஸ் மீடியா சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடத்தி அதற்கு பிரதிபலனாகவே, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு இந்திய முதலீட்டுக்கான அனுமதியை கார்த்தி சிதம்பரம் பெற்றுத் தந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்தது

ஜூன் 16: மத்திய உள்துறையைச் சேர்ந்த வெளிநாட்டவர் பிராந்திய பதிவு மற்றும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை சுட்டிக்காட்டி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு எங்கும் செல்லக் கூடாது என்ற லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிடுகின்றனர்.

ஆகஸ்ட் 10: சென்னை உயர் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் சுற்றறிக்கையை நிறுத்தி வைக்கிறது.

ஆகஸ்ட் 14: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் சுற்றறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

ஆகஸ்ட் 18: கார்த்தி சிதம்பரம் அமலாக்கத் துறை முன் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்தைக் கேட்டுக் கொள்கிறது.

செப்டம்பர் 11: கார்த்தி சிதம்பரத்தின் 25 வெளிநாட்டு சொத்துகள் பற்றிய விவரங்களையும் மற்றும் சில வெளிநாட்டுப் பரிவர்த்தனைக்கான சாத்தியங்கள் அடங்கிய தகவல்களையும் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்திடம் கொடுத்தது சிபிஐ.

செப்டம்பர் 22: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவர் வெளிநாடு சென்றால் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளையும் மற்றும் பல ஆதாரங்களையும் சிதைக்கும் வேலையில் ஈடுபடலாம் என்பதால் வெளிநாட்டுப் பயணம் செய்ய தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது.

அக்டோபர் 9: உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் செய்த மனுவில், ‘என் மகளை லண்டனில் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டும். அங்கே வேறு எந்த வங்கிக்கும் செல்ல மாட்டேன்’ என்று கோருகிறார். அதே நாளில் ப.சிதம்பரம், ‘என்னையும் என் மகனையும் அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு இந்த வழக்கை நடத்துகிறது’ என்று குற்றம்சாட்டினார்.

நவம்பர் 20: கார்த்தி தன் மகளின் கல்வி தொடர்பாக இங்கிலாந்து செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.

2018

பிப்ரவரி 16: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் முறைகேடான சொத்துகளை வாங்க நிர்வகிக்க கார்த்தி சிதம்பரத்துக்கு உதவியதாக கைது செய்யப்படுகிறார்.

பிப்ரவரி 28: கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில், கைது செய்யப்பட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். சிபிஐ கோர்ட் அவரை ஒரு நாள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கிறது.

மார்ச் 23: 23 நாட்களை டெல்லி திகார் ஜெயிலில் கழித்தபிறகு கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் வெளியே வருகிறார்.

ஜூலை 25: மகன் கைதை அடுத்து தானும் கைது செய்யப்படுவோம் என்று ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்கிறார். இந்த மனுவில் ப.சிதம்பரத்துக்கு கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்.

அக்டோபர் 11: அமலாக்கத் துறை இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன விவகாரம் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வழக்கோடு இணைத்தது.

2019

ஜூலை 4: ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தான் அப்ரூவர் ஆவதற்கு அனுமதி கேட்டு இந்திராணி முகர்ஜி சிபிஐ நீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதினார். இதை விசாரித்த நீதிபதி அருண் பரத்வாஜ் அப்ரூவராக மாறுவதற்கு ஜூலை 4 அனுமதியளித்தார்

ஆகஸ்ட் 1: டெல்லியிலுள்ள ஜோர் பக் பகுதியில் இருக்கும் வீடு ஏற்கனவே வழக்கோடு இணைக்கப்பட்டிருப்பதால் அந்த வீட்டை கார்த்தி சிதம்பரம் காலி செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 20: சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. ஒரு வாரம் நிறுத்தி வைக்க வேண்டும் என சிதம்பரம் வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 20: மேல்முறையீட்டை அவசரமாக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு, இன்று (ஆகஸ்ட் 21) விசாரணை நடக்குமென தகவல்

ஆகஸ்ட் 20 இரவு: சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் சிதம்பரத்தின் ஜோர் பக் வீட்டுக்குச் சென்றனர். அங்கே சிதம்பரம் இல்லை. இரண்டு மணி நேரத்தில் சிபிஐ முன் ஆஜராகும்படி அவருக்கு வழங்கப்பட்ட நோட்டீஸை சிதம்பரம் வீட்டு வாசலில் ஒட்டிவிட்டுப் புறப்பட்டனர்.

இன்று உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்தே சிதம்பரம் வெளியே இருக்கிறாரா, சிறைக்குச் செல்கிறாரா என்று தெரியவரும்!


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


புதன், 21 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon