மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஆக 2019

கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?

கர்நாடகாவைத் தொடர்ந்து புதுவை: ஆட்சி மாற்றம்?

தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும்தான். தற்போது அங்கும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மஜக தலைமையில் ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வியைச் சந்தித்தது. பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அதேபோல புதுச்சேரியிலும் ஆட்சி மாற்றத்துக்கான காய் நகர்த்தல்கள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கும் இடையே நடைபெறும் பனிப்போர்தான் அதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ரங்கசாமி பிரிந்துசென்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது, அவருக்கு எதிராக தீவிரமாக அரசியல் செய்தவர் நமச்சிவாயம். ரங்கசாமியின் உறவினராக இருந்தும்கூட கட்சியின் வளர்ச்சிக்காக தீவிரமாகப் பணியாற்றினார். அதன் விளைவாக புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. முதல்வராக நமச்சிவாயம் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் நாராயணசாமியை முதல்வராக்கியது. இதனால் அப்போதிருந்தே நமச்சிவாயம் அதிருப்தியில் இருந்துள்ளார்.

நாராயணசாமிக்கும் நமச்சிவாயத்துக்குமான பனிப்போர் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமியிடம் வலியுறுத்திவந்த நிலையிலும் அவர் கேட்டுக்கொண்டபடி நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் கடந்த மூன்று மாதங்களாக சட்டமன்றத்துக்கு வருவதையே நமச்சிவாயம் நிறுத்திக்கொண்டார்.

நேற்று புதுச்சேரி வந்த தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும், அகில இந்திய பொதுச்செயலாளருமான முகுல் வாஸ்னிக் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால், இதுவரை நமச்சிவாயத்தின் மனத்தை மாற்ற முடியவில்லை. நமச்சிவாயம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடலாம் என்று புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நேற்று (ஆகஸ்ட் 20) புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி, பேரவைச் செயலர் வின்சென்ட் ராயரிடம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடிதம் அளித்தனர்.

சட்டப் பேரவைத் தலைவராக இருந்த வெ.வைத்திலிங்கம் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பேரவைத் தலைவராக சிவக்கொழுந்து போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர அதற்கான கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் ஆகியோர் தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், சட்டப் பேரவைச் செயலர் வின்சென்ட் ராயரிடம் வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, “காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் சட்டப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து தொடர்ந்து பங்கேற்று வருகிறார். எனவே, அவர் சட்டப் பேரவையை நடுநிலையாக நடத்த மாட்டார் என்ற காரணத்தால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 33 உறுப்பினர்களில் (நியமன எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரையும் சேர்த்து) ஆளும் காங்கிரஸ் - திமுக கூட்டணியின் பலம் 18ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 14ஆகவும் உள்ளது. பேரவை முன்னாள் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. ஆனதால், காமராஜர் நகர் தொகுதி காலியாக உள்ளது.


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

புதன் 21 ஆக 2019