மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஆக 2019

கவனம் புதிது! - ஸ்ரீராம் சர்மா

கவனம் புதிது! - ஸ்ரீராம் சர்மா

பாஞ்சாலி கேட்ட அந்தக் கேள்வி மிகப் பெரிது!

என்னை முன்னே கூறி இழந்தாரா?

தம்மையே

முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?

மகாகவியின் வைர வரிகளை ஆழ்ந்து கவனித்தால்...

‘என்னை’ என்ற சொல் பாஞ்சாலி எனப்படும் திரௌபதையை மட்டுமே குறிக்கும். திரௌபதை, தருமனின் தனியுடைமை. எனில், சரி போகட்டும்.

‘தம்மை’ என்ற சொல் தருமனை மட்டுமே குறிப்பதல்லவே. அதில், அஸ்தினாபுரமும் உள்ளடங்கி நிற்கின்றதே. அஸ்தினாபுரம் என்பது பொதுவுடைமை அல்லவா?

“என்னைத் தோற்றுத் தம்மைத் தோற்றாரா? தம்மைத் தோற்று என்னைத் தோற்றாரா..?” எனப் பாஞ்சாலியாள் அறைந்து கேட்ட அந்தக் கேள்வி பெரும் பொருளடக்கிய வேள்வி அல்லவா?

ஆம். ‘தம்மை’ என்னும் பொதுவுடைமையைத் தூர எறிந்தவனுக்கு ‘என்னை’ என்னும் தனியுடைமையைக் கொண்டு வாழ உரிமை இருக்கவே முடியாது என்கிறார் மகாகவி சுப்ரமண்ய பாரதி!

கவனிப்போம்.

உலகப் பந்து மலரும் போது

ஒரு மனிதனாகப்பட்டவன் தன் ஈகோவை பின் தள்ளித் தன் சுற்றமே பிரதானம் என்று எண்ணிவிடும் தருணத்தில் அங்கே ஒரு நட்பு தழைக்கிறது.

ஒரு குடும்பத்தலைவனாகப்பட்டவன் தன் ஈகோவைப் பின் தள்ளி, தன் உறவுகளின் நிம்மதியே பிரதானம் என்று எண்ணி விடும்போது ஆங்கே ஒரு குடும்பம் தழைக்கிறது.

போலவே, ஒரு கட்சித் தலைவனாகப்பட்டவன் தன் சுயநல பிரதிநிதித்துவத்தை உதறித் தள்ளித் தன்னை நம்பிய இந்தச் சமூகத்தின் நலனே பிரதானம் என்று எண்ணிவிடும் அந்தத் தருணத்தில் அந்த மாநிலமே பிழைத்து விடுகிறது.

சுயநலம் தவிர்த்து பொதுநலம் காணும் அந்தப்போது உலகப்பந்து மலர்ந்து விடுகிறது.

கம்ப ராமாயணமும் காஷ்மீரும்!

கம்ப ராமாயணத்தில் அதைக் காண முடிகிறது.

விடிந்தால் மணிமுடி. விடியவிடாமல் வந்து நின்றாள் சிற்றன்னை. ‘ராமா போ. சென்று வா கானகம்’ என்றாள் கைகேயி.

சிங்கக் குருளைக்கு இடுதீம் ஊணை நாயின் சிறு குட்டிக்கு ஊட்ட முயல்கிறாளே இவள் என இலக்குவன் வெகுண்டு நின்றாலும் அவனைத் தடுத்த ராமன் சிற்றன்னை தாள் பணிந்தான். தன்னலம் விடுத்த ராமன் தன் அயோத்தி சமூகத்தின் நிம்மதியை பிரதானமாக்கினான்.

பேரெழில் கொஞ்சும் அயோத்தி அரசாங்கத்தின் அடுத்த பட்டம் ராமன்தான் என்று உலகமே எதிர்பார்த்திருந்த அந்த தருணத்தில்...

தன் மக்களுக்கும், நாட்டுக்கும் கேடு ஒன்று நேரிட்டுவிடக் கூடாது என்று தன்முனைப்பை நீங்கி நாட்டின் நலத்தை முன்வைத்த ராமனது அன்றைய வாழ்க்கை இன்றைய அரசியலாளர்களுக்குப் பெரும் பாடம்!

காஷ்மீரம்!

அது ஆயிரம் காலத்து பந்தம். சொல்லப் போனால் அதற்கடுத்த பாகிஸ்தானியமும் நமது சொந்தமே. எல்லோரும் ஒன்றெனப்பட்டு வாழ்ந்த முந்தையர் பூமிதானே இது!?

எங்கிருந்தோ வந்த பிரித்தானியர்களின் வியாபார நோக்கம் மெல்ல மெல்ல வளர்ந்தோங்கி பேராசையாகி ஓர் அரசாங்கமாகவே விரிந்த கொடுமையால் நிகழ்ந்த பிரிவினைதானே அது?

அஃதல்லவெனில் நாமெல்லோரும் சகோதரர்கள்தானே?

உள்ளார்ந்து கவனிப்போம்!

பூகோளமும் பாரதமும்

அன்றைய பூகோளம் என்னவாக இருந்தது?

ஆதியில் வசுதேவ குடும்பமாக இருந்த இந்த உலகத்தைக் காலப்போக்கில் ஆசியா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா, ஐரோப்பா என ஏழு கண்டங்களாகப் பிரித்து வைத்தார்கள்.

இந்தியத் துணைக் கண்டம் எனத் தனியே பிரித்து அழைக்க ஆரம்பித்தது 19ஆம் நூற்றாண்டுக்குப் பிறகான பிரித்தானியர்களின் வசதிக்காகவே என்பது வரலாறு சொல்லும் பேருண்மை.

அதன்முன், உன்னத கலாச்சாரங்களை தன்னகம்கொண்ட இந்த மண் அநாதி காலமாக பாரதம் என்றும் இந்துஸ்தானம் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஒட்டு மொத்த இந்துஸ்தானத்துக்கும் ஏக தலைமை ஒன்று இருந்துள்ளதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அன்று, தனித்தனியாக சேர சோழ பாண்டிய பல்லவர்கள் போன்ற அரசுகளின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்தந்த அரசுகளின் கீழ் சமஸ்தானங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம்.

அந்த சமஸ்தானங்களுக்குக் கீழ் தனித்தனிப் பாளையங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம். பாளையங்களுக்குக் கீழ் தனித்தனிக் கிராமங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம். அதுதான் சாத்தியமான படி நிலை.

அசோகரும் அக்பரும் நீண்ட நெடிய இந்த இந்தியப் பெருமண்ணை சக்ரவர்த்திகளாக நின்று பேரரசாங்கம் செய்தார்கள் என்று பாடப் புத்தகங்களில் நீட்டிச் சொல்லப் படித்திருக்கிறோம்.

அவை அனைத்தும் புகழளவுக்குத் தானே அன்றி வேரூன்றிய அதன் ஆட்சி முறை பாற்பட்டல்ல. காரணம் உண்டு. அன்றைய பாரதப் பெருமண்ணுக்குரியது ஏறத்தாழ அறுபது லட்சம் கிலோமீட்டர் பரப்பளவு.

அந்த மொத்தப் பரப்பளவையும் நுணுகி அரசாளும் அளவுக்கு அன்றைய ஆட்சியாளர்களுக்குப் போதிய வசதி வாய்ப்புகள் இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. சாத்தியமற்ற ஒன்றை வரலாறாக்கிப் பயனில்லை .

புரிந்து கொள்வோம்!

பிரித்தானியர்களின் வணிகப் படை

ஆதி மனிதர்கள் நிலம் பிடித்தாள நடந்தோடினார்கள். பின்பு, குதிரை கழுதை ஒட்டகம் போன்ற விலங்கு வழி பயணங்கள் கொண்டு நிலமளந்தார்கள்.

மனிதர்களின் ஆசையும் அவசரமும் மேலும் உந்தித் தள்ள மேற்குலக அறிவியல் வளர்ச்சியின் அசாதாரண உதவியோடு இயந்திரவழிப் பயணங்கள் தோன்றிக் கைகொடுக்க வந்தேறிகளின் படை பரவலானது. அதன் பின்தான் ஆக்ரமிக்கப்பட்ட நாட்டின் நிலம் உள் ஊன்றிக் கவனிக்கப்பட்டது.

முதலில், கவனித்தவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியினர்.

மோட்டார் வாகனம், ரயில் உள்ளிட்ட அறிவியல் வளர்ச்சிகளைக் கைக்கொண்டு விரைந்தோடிப் பணம் பார்க்கும் வழிமுறையினைக் கண்டார்கள்.

இங்கே குறித்துக்கொள்ள வேண்டியது ஒன்றுண்டு.

முகலாயர்களுக்கு இருந்ததைப் போல கண்ட நாட்டை சூறையாடும் கொடூர ஆசை பிரித்தானியர்களுக்கு இருந்ததாக சொல்லிவிட முடியாது. மாறாக, நாடெங்கிலும் வியாபாரம் செய்தாக வேண்டும் என்னும் உத்வேகம் இருந்தது எனலாம்.

குளிர் வீசும் அவர்களது சொந்த தேச சீதோஷ்ண நிலைக்கு மிளகு மிகவும் அவசியப்பட்ட காரணத்தினால் சிண்டிகேட் அமைத்து கப்பல் கட்டி வந்தேறியவர்கள்தானே பிரித்தானிய வியாபாரிகள். அதில் அவர்கள் மிகத் தெளிவாக இருந்தார்கள்.

பிரிட்டனின் படையெடுப்பு இங்கே நிகழ்ந்ததாக இன்னமும் பலர் தவறுதலாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விக்டோரியாவின் நேரடி ஆட்சி என்பது 1858-க்குப் பின்புதான்.

அதுகாறும் இங்கே கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வியாபார முஸ்தீபுகள் மட்டுமே நடந்தேறிக் கொண்டிருந்தன.

இந்திய மண்ணைக் கண்டடைந்த மரபார்ந்த வியாபாரிகளான பிரித்தானியர்கள் ‘இது விளைச்சல் பூமி மட்டுமல்ல; புதையல் பூமி...’ எனப் புரிந்து கொண்டார்கள். கூடவே, இந்தியர்களின் மரபார்ந்த அறிவியல் வானவியல் கணிதவியல் கட்டுமானவியலனைத்தையும் கண்டு பிரமித்தார்கள். கொண்ட பிரமிப்பை இயல்பாகப் புறந்தள்ளியது அவர்களது வியாபார மூளை.

கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உலகளாவிய அகண்ட வியாபாரம் இருந்தது. அந்தப் போக்குவரத்துக்குத் தேவைப்பட்ட வேலையாட்கள் அதிகமதிகம். ஆனால், பிரித்தானிய வியாபாரிகளுக்குப் போதுமான வேலையாட்கள் இந்திய மண்ணில் கிடைத்தபாடில்லை.

எங்கிருந்தோ வந்தவனுக்கு ஏவல் செய்ய நாமென்ன இளைத்தவர்களா என அன்றைய மேல்தட்டு மக்கள் மறுதலித்து ஒதுக்கினார்கள். உலகையே சுற்றிவரும் வல்லமை படைத்த கம்பெனியார்களுக்கு இந்தியர்கள் காட்டிய மேல்தட்டுப் பெருமை கசந்தது.

விக்டோரியா மகாராணியிடம் ‘செல்லுமிடத்தில் சண்டை கூடாது; துணைக்கனுப்பும் என் படைகளுக்கு உயிர் சேதம் கூடவே கூடாது...’ என்னும் நிபந்தனையோடுகூடிய வியாபார லைசன்ஸ் வாங்கி வந்த கிழக்கிந்திய கம்பெனியினருக்கோ இந்தியர்களிடம் ஓரளவுக்கு மேல் மிஞ்ச முடியவில்லை. தயங்கினார்கள்.

பிரித்தானியர்கள், கடலெங்கும் மிதக்கும் வானளாவிய தங்களது கப்பல்களைக் காட்டி தங்கள் உலக வியாபார செல்வாக்கின் மிடுக்கினை சொல்லிக் காட்டும்போதெல்லாம்... அதற்கு ஈடாக...

தங்களது பாரம்பரியத்தின் மிடுக்கையும், மரபார்ந்த அறிவியல் கலை இலக்கிய கலாச்சார செறிவையும் சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள் அன்றைய இந்தியர்கள் .

சலித்துப் போனார்கள் கம்பெனியினர். சரக்கை கையாண்டு வியாபாரத்தைப் பெருக்கியாக வேண்டிய அவசியம் அவர்களை நெருக்கியது.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகளாவிய தங்கள் வியாபார அறிஞர்களை பெரும் பொருள் கொடுத்து நாடினார்கள் கிழக்கிந்தியக் கம்பெனியினர்.

பலதரப்பட்ட அறிஞர்கள் ஆவலோடு வந்து இறங்கினார்கள். அவர்கள் மெல்ல மெல்ல இந்திய சமூகத்தை ஊடுருவினார்கள்.

ஊடுருவியவர்களின் கூர்ந்தக் கண்களில் அன்றைய இந்திய சமூகத்தில் நிலவிய ‘ச்சீசீ...’ எனும் தீண்டாமைக் கொடுமை ‘அடடா...’ வெனப்பட்டு நின்றது.

“டோண்ட் வொர்ரி; பி ஹாப்பி..” என்னும் நான்கு வார்த்தை தந்தியை கம்பெனிக்கு அனுப்பிவிட்டுக் களமிறங்கினார்கள்.

(தொடரும்...)

(கட்டுரையாளர்: ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக்கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன் ஸ்ரீராம் சர்மா.)


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘தினகரன் உத்தரவை மீறினாரா பழனியப்பன்?


தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

புதன் 21 ஆக 2019