மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி: ஏற்றுக்கொண்ட சம்மேளனம்!

மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி: ஏற்றுக்கொண்ட  சம்மேளனம்!

இந்திய மல்யுத்த அணியின் தேசிய பயிற்சி முகாமில் இருந்து அனுமதியின்றி வெளியேறிய சாக்‌ஷி மாலிக் உள்பட 3 வீராங்கனைகளும் மன்னிப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் மீண்டும் முகாமுக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய மல்யுத்த பெண்கள் அணியினருக்கு தேசிய அளவிலான பயிற்சி முகாம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 45 வீராங்கனைகளில் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் (62 கிலோ) மற்றும் சீமா பிஸ்லா (50 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகிய மூன்று பேர் உட்பட 25 பேர் உரிய அனுமதி பெறாமல் வீடு திரும்பி விட்டனர். ரக்‌ஷா பந்தனை கொண்டாடுவதற்காக சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய மல்யுத்த சம்மேளனம் முடிவு செய்தது.

சாக்‌ஷி மாலிக் , சீமா பிஸ்லா, கிரண் ஆகிய மூவரும் அடுத்த மாதம் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 வீராங்கனைகளும் நாளைக்குள் (ஆகஸ்ட் 21) விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் ஐஏஎன்எஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “ சாக்‌ஷி மாலிக், சீமா, கிரண் ஆகியோர் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனால் அவர்கள் மூவரும் மீண்டும் முகாமுக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இதனால் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சாக்‌ஷி மாலிக், சீமா, கிரண் ஆகியோர் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. இந்த போட்டி தொடர் கஜகஸ்தானில் செப்டம்பர் 14 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?


தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon