மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

டிஜிட்டல் திண்ணை: சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள்: திமுகவில் திடீர் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை:  சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள்: திமுகவில் திடீர் திட்டம்!

“எதையுமே திட்டம் போட்டு செய்யக் கூடிய கட்சி திமுக என்பது அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்தே திமுகவுக்கு இருக்கும் பெயர். ஆனால் இப்போதைய திமுகவிலும் திட்டம் போடுகிறார்கள். ஆனால் திட்டம் போடுகிறவர்கள் யார், எதற்காகத் திட்டம் போடுகிறார்கள் என்பதுதான் திமுக சீனியர்கள் வட்டாரத்தில் இப்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பதவியேற்பதற்கு முன்பிருந்தே உதயநிதியின் நெருங்கிய நண்பர்களான அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா மற்றும் சபரீசன், ஓஎம் ஜி சுனில் உள்ளிட்டோர் திடீரென தலையெடுத்து முக்கிய விஷயங்களில் மூக்கை நுழைக்கிறார்கள் என்ற பேச்சு இருந்தது. உதயநிதி முறைப்படி இளைஞரணிச் செயலாளர் ஆனதும் அது முன்பை விட வேகமாகிவிட்டது. உதயநிதி கூட்டிய முதல் கூட்டத்திலேயே மாவட்டச் செயலாளர்கள் நம்மை மதிப்பதில்லை என்று அவரிடம் முறையீடுகள் வைக்கப்பட, நான் பேசுவதை விட செய்வதையே விரும்புகிறேன் என்று பதிலும் அளித்திருந்தார் உதயநிதி.

இந்நிலையில் உதயநிதியின் பரிபூரண வாழ்த்துகளைப் பெற்ற இந்த சபரீசன், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, சுனில் அடங்கிய குழுவினர் இப்போது அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் தேர்வு பற்றிய திட்டமிடுதலில் இறங்கிவிட்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே சீனியர்களைக் கொஞ்சம் தள்ளி வைத்து, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இந்த டீம் தலைவர் ஸ்டாலினிடம் முறையிட்டது. ஆனாலும் சீனியர்களை ஒரேயடியாக புறக்கணிக்காமல் அவர்களது வாரிசுகளுக்கு சீட் வழங்குவது என்று முடிவு செய்தார் ஸ்டாலின். இதன்படிதான் துரைருகன், பொன்முடி ஆகியோரின் வாரிசுகளுக்கு சீட் வழங்கப்பட்டது. அப்போதே, ‘வாரிசுகளுக்கு எம்பி சீட் வழங்கப்பட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அந்த வாரிசுகளின் பெற்றோருக்கு சீட் இல்லை என்று ஸ்டாலின் வீட்டில் நிபந்தனை விதித்தாகவும்’ கட்சிக்குள் ஒரு பேச்சு இருந்தது.

அந்த சூழலின் தொடர்ச்சியாக இப்போது இந்த இளைஞர் குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் முதல் நிபந்தனையே, ‘வேட்பாளருக்கு 35 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது’ என்பதுதான்.

‘அடுத்த தேர்தலில் திமுகதான் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும், தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆவார். அப்போது அவருக்கு சீனியர்கள் தரப்பில் இருந்து எந்த ஸ்பீடு பிரேக்கும் இருக்கக் கூடாது. அதனால்தான் முற்றிலும் இளைஞர்கள் மட்டுமே அதிக தொகுதிகளில் நிறுத்தப்பட வேண்டும். வேறு வழியில்லாமல் சில சீனியர்களுக்கு வாய்ப்பு அளிப்பது என்பது பற்றி தலைவர் முடிவு செய்வார். ஆனால் பெரும்பாலான வேட்பாளர்கள் ஸ்டாலின் பேச்சைத் தட்டாத இளைஞர்களாக இருக்க வேண்டும்’ என்பதே இந்த டீம் மாவட்ட இளைஞரணிப் பிரமுகர்களிடம் சொல்லியிருக்கும் விஷயம்.

வேட்பாளர் தேர்வு என்றால் அவர் கட்சியில் எப்போது சேர்ந்தார், என்ன போராட்டங்களில் கலந்துகொண்டார், சிறை சென்றாரா என்ற கேள்விகள்தான் வழக்கமாக கட்சிகள் நடத்தும் தேடுதலில் இடம்பெறும். ஆனால் இந்த இளைஞர் டீம் நடத்தும் வேட்பாளர் தேர்வில், வேட்பாளராக முயற்சி செய்பவர்களின் ஜாதகமும் கேட்கப்படுகிறது. கட்சி ரீதியான விவரங்களோடு அவர்களின் ஜாதகத்துக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

அரசல் புரசலாக இந்த வேட்பாளர் தேடுதல் வேட்டை பற்றி அறிந்த சீனியர்கள் இதுபற்றி தங்கள் நண்பர்களிடம் மனம் திறந்திருக்கிறார்கள். ‘இப்படித்தான் மக்களவை, 24 தொகுதி இடைத்தேர்தல் நடக்குறது முன்னாடி இதே டீம், அடுத்து நம்ம ஆட்சிதான்னு சொல்லி யார் யார் அமைச்சர்கள்னு ஒரு லிஸ்டு தயார் பண்ணினாங்க. அந்த லிஸ்டுல இடம்பிடிக்கணும்னு நம்ம கட்சியில பல எம்.எல்.ஏ.க்கள் எல்லா வகையிலும் முயற்சி பண்ணாங்க. மத்தியிலயும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் அமைக்கும். சோனியா காந்திக்கிட்ட பேசிட்டோம்னு சொல்லி ஒரு லிஸ்ட் ரெடி பண்ணினாங்க. இந்த பட்டியல்ல இடம்பிடிக்கவும் திமுகவுல பலரும் கடுமையாக முயற்சி செஞ்சாங்க. இந்த தீவிரத்தை தேர்தல் வேலையில காட்டியிருந்தா திமுக சட்டமன்றத் இடைத்தேர்தல்ல இன்னும் நாலஞ்சு சீட் அதிகமா ஜெயிச்சு ஆட்சியை பிடிச்சிருக்கலாம். அப்புறம் தேர்தல் முடிஞ்சு ரிசல்ட் வர்றதுக்குள்ள, ‘பதவியேற்பு விழாவை எங்க வச்சிக்கலாம்னும் இதே டீம் தான் ஆலோசனை பண்ணாங்க. திட்டம் போடுறது தப்பில்ல. கடமையை சரியா செஞ்சாலே திட்டத்துல முக்கால்வாசி வெற்றியடைஞ்ச மாதிரிதான். ஆனா இந்த சின்னபிள்ளைக போடுற திட்டமெல்லாம் அப்படி தெரியலை. இதெல்லாம் தலைவர் ஸ்டாலினுக்குத் தெரிஞ்சு நடக்குதா தெரியாம நடக்குதான்னே தெரியலையே’ என்று அலுத்துக் கொள்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘சென்னை யூனியன் பிரதேசமாகலாம்: சீமான்


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon