மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

கைது?: ப.சிதம்பரம் மேல்முறையீடு!

கைது?: ப.சிதம்பரம் மேல்முறையீடு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு மொரிஷியஸ் போன்ற நாடுகளிலிருந்து முதலீடுகளைப் பெறுவதற்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் இருந்து சட்ட விரோதமாக அனுமதி பெற்றுத் தந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இந்த வழக்கைத் திசை திருப்ப அவர் முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இவ்வழக்கில் கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் வைத்து அமலாக்கத் துறை கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்தது. 23 நாள் கஸ்டடியில் இருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ப.சிதம்பரம் தன் மீதான வழக்கில் அவ்வப்போது டெல்லியில் உள்ள சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையில் ஆஜராகி வருகிறார். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை, ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இதனால் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்திருந்த நீதிமன்றம் அந்த தடையை நீட்டித்தும் வந்தது. 2019, ஜனவரி 25ஆம் தேதி இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இம்மனு மீண்டும் இன்று (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வந்த போது சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ”இது ஒரு பொருளாதாரக் குற்றம் மற்றும் இரும்புக் கரங்களால் கையாளப்பட வேண்டும். இவ்வளவு பெரிய பொருளாதாரக் குற்றத்தில் விசாரணை நிறுவனங்களின் கைகளைக் கட்டுப்படுத்த முடியாது” என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வழக்கில் மேல் முறையீடு செய்ய மூன்று நாட்கள் கால அவகாசம் ப.சிதம்பரத்துக்கு வழங்கியது.

தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் டெல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சில மணி நேரத்திலேயே ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த விஷயத்தை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கின் அரசியலமைப்பு அமர்வில் இடம் பெற்றுள்ளதால், இம்மனுவை நாளை காலை 10.30 மணியளவில் அரசியலமைப்பு அமர்வில் இல்லாத மூத்த நீதிபதி முன்பு குறிப்பிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் டெல்லி நீதிமன்ற உத்தரவு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘சென்னை யூனியன் பிரதேசமாகலாம்: சீமான்


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon