புதுச்சேரியைப் போல சென்னையையும் மத்திய அரசு யூனியன் பிரதேசமாக மாற்றலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கியது. அதோடு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என்றும், லடாக் யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றும் நீங்கள் வருங்காலத்தில் தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தச் சூழலில் சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழகத்தில் மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்கிறார்கள். அது நிர்வாக வசதிகளுக்காகப் பிரிக்கப்படுகிறது. ஆனால், காஷ்மீரைப் போல தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் பாஜக, சாதிக் கட்சிகளை அதிகமாக நம்பும். அவர்களுக்காக தமிழகத்தை வடதமிழகம், தென்தமிழகம் என்று பிரித்து சென்னையைப் புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்று எச்சரிக்கை விடுத்தார்.
அது அவசியமற்றது என்றும் தெரிவித்த சீமான், “மத்திய அரசு மாநிலங்களைப் பிரிக்க வேண்டுமென்றால் 403 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைத்தான் இரண்டாகப் பிரிக்க வேண்டும். இருப்பினும் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க நாம் விடப்போவதும் இல்லை” என்றும் கூறினார்.
மேலும் படிக்க
டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!
முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?
முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்
பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!