மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

காஷ்மீர்: ட்ரம்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு!

காஷ்மீர்: ட்ரம்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு!

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் சுமார் 30 நிமிடங்கள் வரை உரையாடினார்.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப் பிரிவு நீக்கம் மற்றும் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் ஐநா மன்றத்தின் மூடிய அறைக்குள் விவாதிக்கப்பட்டது. அங்கு சீனாவைத் தவிர பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு எதுவும் இல்லாத நிலையில் காஷ்மீர் விவகாரத்தை இரு தரப்பு பிரச்சினையாகவே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நாடுகள் தெரிவித்துவிட்டன.

இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 19) அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த உரையாடலில், இரு தரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர்.

அப்போது ட்ரம்பிடம் மோடி, “சில தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் தீவிரமான சொற்களைப் பயன்படுத்தி பேசி வருகின்றனர். இது பிராந்தியத்தின் அமைதிக்கு உகந்ததல்ல” என்று தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்துவரும் சூழலில், பாகிஸ்தானுக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களையும் குறிப்பிட்டுதான் மோடி இவ்வாறு பேசியதாகத் தெரிகிறது.

மேலும், பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும், எந்தவித விதிவிலக்கும் இல்லாமல் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தடுப்பது குறித்தும் ட்ரம்பிடம் மோடி எடுத்துரைத்துள்ளார்.

உரையாடல் குறித்து பிரதமரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இரு தலைவர்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் நல்லுறவு குறித்தும் உரையாடலில் பேசப்பட்டது. வறுமை, கல்வியறிவின்மை மற்றும் நோய்களை எதிர்த்து ஒரே பாதையில் பயணிக்க இந்தியாவின் உறுதியாக இருக்கும் என்று தெரிவித்த பிரதமர், தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என ட்ரம்பிடம் வலியுறுத்தினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இம்ரான் கான் சில நாட்களுக்கு முன்பு ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசியிருந்த நிலையில், தற்போது மோடி - ட்ரம்ப் இடையிலான உரையாடல் நடந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இது தொடர்பாக தன்னிடம் கோரிக்கை வைத்ததாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், இதுபோன்ற எந்தக் கோரிக்கையையும் பிரதமர் மோடி, ட்ரம்பிடம் முன்வைக்கவில்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதற்கிடையே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


‘கோமாளி’ வெளியானதன் பின் கதை!


செவ்வாய், 20 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon