மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஆக 2019

80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!

80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மறைவுக்கு முன்னர் பாமகவில் பெரும்பாலான இளைஞர்கள் வன்னியர் சங்கத்திலும், வன்னியர் இளைஞர் படை என்றும் தீவிரமாகச் செயல்பட்டுவந்தனர். அவர்கள் குருவின் தம்பிகள் என்றே தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர். குரு உயிருடன் இருந்தபோதே பல வழிகளில் அன்புமணியை பாமகவில் முன்னிலைப்படுத்தி வந்தனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அன்புமணியின் பிரச்சாரமும் மற்ற கட்சிகளைவிட வித்தியாசமான முறையிலேயே அமைந்தது. ஆனாலும் பாமகவால் ஓர் இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஏறத்தாழ இன்னும் இரண்டு வருடங்களுக்குக் குறைவாகவே உள்ள நிலையில் தற்போதே அதற்காகத் தயாராக ஆரம்பித்துவிட்டது பாமக.

அதாவது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பாமகவின் வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் வகையில் அன்புமணியிடமிருந்து தற்போது பாமகவினருக்கு புதிய உத்தரவு சென்றிருக்கிறது. அதற்கு அன்புமணியின் முப்படைகள் செயல்திட்டம் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் வடமாவட்டங்களில் 80 சட்டமன்றத் தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு ராமதாஸ் சொல்லும் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், வரும் சட்டமன்றத் தேர்தலில் 60 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றிபெற வேண்டும் என்பதுதான். இதுதொடர்பாக நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை நமது பார்வைக்கும் கிடைத்தது.

அதில், “அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என்ற மூன்று பிரிவுகளை உருவாக்க வேண்டும். ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2,000 பேர் கொண்ட அன்புமணி தம்பிகளின் படையையும், 1,000 பேர் கொண்ட அன்புமணி தங்கைகளின் படையையும் உருவாக்க வேண்டும். இவர்கள் மூலம் 1 லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படையை உருவாக்க வேண்டும்.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏறத்தாழ 200 கிராமங்கள் இருக்கும். ஒரு கிராமத்தில் 10 அன்புமணி தம்பிகளையும் 5 அன்புமணி தங்கைகளையும் தேர்வு செய்ய வேண்டும். அப்படித் தேர்வு செய்தால் ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2,000 அன்புமணி தம்பிகளும், 10,00 அன்புமணி தங்கைகளும் கிடைப்பார்கள். இதில் ஒவ்வொரு அன்புமணி தம்பியும் தங்களது தெருவில் 50 வாக்காளர்களை அன்புமணி மக்கள் படையில் சேர்க்க வேண்டும். 2,000 பேரும் தலா 50 பேரைச் சேர்ந்தால் நமக்கு 1 லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படை கிடைக்கும். அவர்கள் நமது வாக்கு வங்கியாக விளங்குவார்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு வயது 17-35க்குள் இருக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் 10ஆவது படித்திருக்க வேண்டும் எனவும், அன்புமணி தம்பியாக முக்கிய தகுதியாகக் கட்சியின் வெறிகொண்ட செயல் வீரராக இருக்க வேண்டும் என்றும், 50 வாக்காளர்களைக் கட்சியில் சேர்க்கும் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

இதேபோல பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு மறைமுகமாக சில உத்தரவுகள் சென்றிருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பாமக நிர்வாகி ஒருவர், “கட்சியில் உள்ள நிர்வாகிகள் தங்கள் பகுதியில் நடைபெறும் வன்னியர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். மாற்றுக் கட்சிகளில் உள்ள வன்னியர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது. அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவக் கூடாது.

அரசுப் பணிகளில் இருக்கும் வன்னியர்கள், சமூக முன்னேற்றச் சங்கத்தில் (SIS) உறுப்பினர்களாக இருந்தால் மட்டும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அலுவலகப் பிரச்சினையாக இருந்தாலும், சொந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சங்கத்தில் இல்லாதவர்களுக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இது வன்னியர்களை பாமகவில் இணைவதற்கான ஒரு நிர்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. இதைச் செயல்படுத்தும் பணிகளில் பாமக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் முதுநகரில் உள்ள ஒரு தனியார் திருமண்டபத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 18) பாமக துணைப் பொதுச் செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “கடலூர் மாவட்டம் முழுவதுமுள்ள கிராமங்களில் அன்புமணி தம்பிகள் படையை உருவாக்க வேண்டும். படைகளில் இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். அரசுப் பணியில் இருக்கும் வன்னியர்களைச் சமூக முன்னேற்றச் சங்கத்தில் சேர்க்க வேண்டும். பாமகவிலுள்ள வன்னியர்கள் கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மாற்றுக்கட்சியில் உள்ள வன்னியர்களின் குடும்ப விழாக்களில் கலந்துகொள்ளக் கூடாது. நாம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும். அது நம்முடைய செயல்பாடுகளில்தான் உள்ளது” என்று உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளனர்.

அரசுப் பணியில் உள்ள அதிமுக வன்னியர்கள், பாமகவின் கீழ் இயங்கும் சமூக முன்னேற்றச் சங்கத்தில் இணைந்தால் இடமாற்றம், பணிமாற்றம், பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்குமோ என்று அஞ்சினாலும், சொந்த சமூகம் தன்னை புறக்கணித்துவிடக் கூடாது என்பதால் வேறுவழியில்லாமல் சமூக முன்னேற்றச் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து சந்தாவும் செலுத்தியிருக்கிறார்கள். அரசுப் பணியில் உள்ள திமுக வன்னியர்கள் பலர் சமூக முன்னேற்றச் சங்கத்துக்கு மறைமுகமாக நன்கொடையும் மாதச் சாந்தாவும் செலுத்தி வருகிறார்கள் என்று கூறுகிறார்கள் பாமகவினர்.

வரும் சட்டமன்றத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ளும் வகையில் தற்போதே படைகளைத் திரட்ட ஆரம்பித்துவிட்டது பாமக.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!


முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?


தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

செவ்வாய் 20 ஆக 2019