மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

கோமாளி’ பஞ்சாயத்து: நிஜ கோமாளியானதா தயாரிப்பாளர்கள் சங்கம்!

கோமாளி’ பஞ்சாயத்து: நிஜ கோமாளியானதா தயாரிப்பாளர்கள் சங்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அண்ணா திமுக முன்னணி நிலவரம் என்று தெரியவந்தவுடன் ஸ்வீட் எடு கொண்டாடு என்று அண்ணா திமுகவினர் ‘வெற்றி வெற்றி’ என்று கொண்டாடினார்கள். ஆனால் முடிவு, திமுக வெற்றி என அறிவிக்கப்பட்டது. இது போன்ற நிகழ்வு தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படம், திருச்சி ஏரியாவில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இது சம்பந்தமாக ஏற்கனவே மின்னம்பலத்தில் விரிவாக எழுதியிருக்கிறோம்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி 12 மணிக்கு மேல் திருச்சி ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் கோமாளி படத்தை திரையிடுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் குழு சார்பில் ஆடியோ பதிவு ஒன்றும், அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது

எந்தவித சமரசமும் இல்லாமல் கோமாளி படம் திரையிடப்பட்டது. தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று அறிவிக்கப்பட்டது.

உடனடியாக இது பொய்யான தகவல் திரையரங்கு உரிமையாளர்கள் விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட அளவு முன்பணம்கொடுத்த பின்னரே கோமாளி படம் திரையிடப்பட்டது என செய்திகள் பின்னர் வெளியானது.

இப்பிரச்சனையில் ஆலோசனை குழு தோல்வியடைந்து விட்டதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். உண்மையில் என்ன நடந்தது?...

திரையரங்கு உரிமையாளர்கள் விதித்த நிபந்தனையின்படி மிஸ்டர் லோக்கல் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் திருப்பிக் கொடுக்கப்பட்டதா? இல்லை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் எடுத்த முயற்சியின் பலனாக படம் திரையிடப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ள திருச்சி ஏரியாவில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் ஆகியோரிடம் பேசிய பொழுது, ‘கிட்டத்தட்ட திரையரங்கு உரிமையாளர் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக’ கூறப்படுகிறது .

இது சம்பந்தமாக திருச்சி ஏரியா வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கேசவன் தரப்பில் பேசிய போது, “மிஸ்டர் லோக்கல் படத்தின் திருச்சி ஏரியா உரிமை 3 கோடியே 40லட்ச ரூபாய்க்கு தியாகராஜன் (GT) என்பவர் வாங்கினார். படத்தை திரையரங்குகளில் திரையிட அவர் வாங்கிய அட்வான்ஸ் தொகை 3 கோடியே 90 லட்ச ரூபாய். படம் வெளியாவதற்கு முன்பே லட்ச ரூபாய் கூடுதலாகவே தியாகராஜன் பெற்றிருந்தும் படத்தின் தமிழக விநியோகஸ்தருக்கு 13 லட்ச ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார்.”

“படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்ததாக கூறி வியாபார தர்மத்திற்கும் ஒப்பந்த நெறிமுறைகளையும் மீறி நஷ்டத் தொகையை தயாரிப்பாளர் தரப்பில் திருப்பித் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.”

“படத்தை தயாரித்தவர் ஞானவேல்ராஜா. அவரிடமிருந்து தமிழக உரிமையை மட்டும் வாங்கிய தன்ராஜ்-காக வியாபாரம் செய்துகொடுத்தவர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன். தொடர்ச்சியாக புதிய படங்களை வெளியிடும் தொழில் செய்து வரும் சக்தி வேலனுக்கு நெருக்கடி கொடுத்தால் பணத்தை வாங்கி விடலாம் என்ற நோக்கத்தில் அவர் வாங்கியுள்ள கோமாளி திரைப்படத்தை திரையிடுவதற்கு தியேட்டர் வழங்குவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் மறைமுகமாக முடிவெடுத்தனர்.”

“நஷ்ட தொகையில் பெரும் பகுதியான 70 லட்ச ரூபாய், அதிக திரையரங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரான்சிஸ் அவர்களுக்கு வரவேண்டியது. அதனால் இந்த முடிவு பலம் அடைந்தது. இந்த பிரச்சனை தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கவனத்திற்கு திருச்சி விநியோகஸ்தர்கள் சங்கத்தால்கொண்டு செல்லப்பட்டது. இது வியாபார தர்மத்திற்கும் நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று கூறி நிராகரிக்கப்பட்டது.”

இதனால் திருச்சி விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக இனிவரும் காலங்களில் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூட்டங்களில் பங்கேற்பது இல்லை என்று சங்கத்தின் செயலாளர் ரவி மூலம் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவில் சங்கத்தின் தலைவர் கேசவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. மிஸ்டர் லோக்கல் பட பிரச்சினை காரணமாக சங்கம் பிளவுபட்டு இருக்கிறது.

இதனால் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஏற்கனவே சக்திபிலிம் பேக்டரி திருச்சி ஏரியாவில் விஸ்வாசம், எல்கேஜி போன்ற திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிட்டவகையில் வரவேண்டிய பங்கு தொகை 60 லட்ச ரூபாய் மற்றும் பரதன் பிலிம்ஸ் கொடுத்த 20 லட்ச ரூபாய் மொத்தத்தில் 80 லட்ச ரூபாயை முதல் தவணையாக திரையரங்குகளுக்கு பிரித்துக் கொடுப்பது, எஞ்சிய தொகையை ஞானவேல்ராஜா தயாரிக்கும் மகாமுனி பட வெளியீட்டின்போது பெற்றுக் கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது .

இதன் மூலம் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழு எடுத்த முன்முயற்சி முறியடிக்கப்பட்டு திரையரங்கு உரிமையாளர்களின் ஆதிக்கம் தொடர்வதாக கூறப்படுகிறது.

கோமாளி திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதன் பின்ணணி, விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து என்ன? 7 மணி பதிப்பில்.....

இராமானுஜம்


மேலும் படிக்க


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பிக் பாஸ் 3: மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன?


ஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி!


கோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க?


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


திங்கள், 19 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon