மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?

தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாகவும், நெல்லையிலிருந்து தென்காசி தனி மாவட்டமாகவும் பிரித்து அறிவித்தார் முதல்வர். கடைசியாக வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்கும் அறிவிப்பையும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்திலிருந்து எடப்பாடியைப் பிரித்து தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வர் கலந்துகொண்ட விழாவிலே அவர் முன்னிலையிலேயே எழுப்பப்பட்டிருக்கிறது.

முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா எல்.தஹில் ரமணி நேற்று (ஆகஸ்ட் 18) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஜி.கே.இளந்திரையன், மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எடப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எடப்பாடி, பூலாம்பட்டி மற்றும் கொங்கணாபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் எல்லைகளைக் கொண்டதாக இருக்கும். சங்ககிரி முன்சீப் நீதிமன்றத்தில் இருந்து 531 வழக்குகளும், சங்ககிரி குற்றவியல் நீதிமன்றங்கள் இரண்டிலிருந்தும் 377 வழக்குகளும் மொத்தம் 908 வழக்குகள் எடப்பாடி நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளன. இதன்மூலம் இந்தப் பகுதியில் வழக்கு தொடுத்தோருக்குக் குறித்த காலத்தில் நீதி கிடைக்கும்.

நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டுதல், பராமரித்தல், நீதிபதிகளுக்காகக் குடியிருப்புகள் கட்டுதல் போன்ற நீதித் துறைக்கான மேம்பாட்டு பணிகளுக்காகக் கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 1,000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 2011-12 முதல் 2018-19ஆம் ஆண்டுகள் வரை 456 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018-19ஆம் ஆண்டில் மாண்புமிகு அம்மாவின் அரசு அமைத்துள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கு 2018-19ஆம் ஆண்டில், 101 கோடியே 89 லட்சம் ரூபாய் அம்மாவின் அரசால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 2019-2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிர்வாகத்துக்காக ஆயிரத்து 265 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட முதல்வர்,

“அரசின் இடையறா முயற்சியின் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீதித் துறையில் மின்னணு ஆளுமை முறைகளைப் புகுத்துவதன் அவசியத்தையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் கருத்தில்கொண்டும், இந்தத் துறையில் முழுமையாக மின்னணு ஆளுமை முறைகளைக் கொண்டுவர ஏதுவாக நீதிமன்றங்களில் நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறையினை புகுத்திட வேண்டுமென்ற மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அரசால் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி பகுதி ஒரு பின்தங்கிய பகுதி. வழக்குகள் எல்லாம் சங்ககிரிக்குச் சென்றுகொண்டிருந்த நிலையை மாற்றி, நம்முடைய பகுதியிலேயே அந்த ஏழைகளுக்குக் குறுகிய காலத்திலேயே நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நீதிமன்றம் திறக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய தலைமை நீதிபதியும், உயர் நீதிமன்ற நீதியரசர்களும், மற்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நம்முடைய தொகுதிக்கு வந்து நேரடியாக இந்த நீதிமன்றத்தைத் திறந்து வைத்ததற்கு மக்களின் சார்பில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசும்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மண்ணின் மைந்தராக நன்றி சொன்னார்.

முன்னதாக இந்த விழாவில் எடப்பாடி பார் அசோசியேஷன் தலைவர் ஆனந்தன் பேசும்போது, “தமிழக முதல்வர் இப்போது பல மாவட்டங்களைப் பிரித்து வருகிறார். அந்த வகையில் சேலத்திலிருந்து தனி மாவட்டமாகப் பிரிக்க எல்லா தகுதிகளும் எடப்பாடிக்கு இருக்கின்றன. அந்த அறிவிப்பை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார். இந்தக் கோரிக்கையைக் கேட்டு முதல்வர் வாய் நிறைய சிரிப்போடு தன் ரியாக்‌ஷனை வெளிக்காட்டினார்.

ஏற்கெனவே ஆத்தூரைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் முதல்வர் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கும் எடப்பாடி மாவட்டம் என்ற கோரிக்கை, திட்டமிட்டு முதல்வர் விழாவில் முன் வைக்கப்பட்டது என்கிறார்கள் சிலர்.

நாம் இதுபற்றி ஆத்தூர் முன்னாள் நகர்மன்ற திமுக உறுப்பினர் ஸ்டாலினிடம் பேசினோம்.

“நான் இதில் திமுக, அதிமுக என்ற கட்சி அரசியல் பேச விரும்பவில்லை. சேலத்திலிருந்து தனி மாவட்டமாக அத்தனை தகுதிகளும் ஆத்தூருக்குத்தான் இருக்கின்றன. ஆனால், இப்போதைய முதல்வர், அமைச்சராக இருந்த காலந்தொட்டே ஆத்தூரைப் புறக்கணித்தே வந்திருக்கிறார்.

ஆத்தூர் ஒரு கல்வி மாவட்டம், சங்ககிரி கல்வி மாவட்டம், சேலம் கல்வி மாவட்டம். சமீபத்தில்தான் ஆத்தூரைச் சுகாதார மாவட்டமாகவும் அறிவித்தார்கள். அதேபோல வருவாய்த் துறை அடிப்படையில் ஆத்தூரைத் தனி மாவட்டமாக்க முதல்வர் முன் வர வேண்டும். ஆத்தூரும், எடப்பாடியும் ஒரே நேரத்தில்தான் நகராட்சி ஆகின.

கடந்த 2011-2016 ஆட்சியில்தான் ஆத்தூர், எடப்பாடி நகராட்சி ஆகியவை பொன் விழா கொண்டாடின. அப்போது எடப்பாடி நகராட்சிக்கு 50 லட்சம் ரூபாய் சிறப்பு நிதியை அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கினார். ஆனால், ஆத்தூர் நகராட்சிக்கு அந்தச் சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை. ஆத்தூரே ஒதுக்கப்பட்டுவிட்டது. காரணம், இன்றைய முதல்வர் அவர்கள்தான். இதைக் கண்டித்து ஆத்தூர் நகராட்சியில் நான் போராடினேன்.

ஆத்தூரின் பரப்பளவு, அதைச் சுற்றியுள்ள நகரப் பரப்பளவை ஒப்பிடும்போது எடப்பாடியின் பரப்பளவு குறைவுதான். ஆனால், எல்லா வகையிலும் முன்னால் உள்ள ஆத்தூரை விட்டுவிட்டு எடப்பாடிக்குத் தனி கவனம் செலுத்துகிறார் முதல்வர். அது முதல்வரின் ஊராக இருக்கட்டும். ஆனால், நியாயப்படி நடக்க வேண்டாமா? எனவே எடப்பாடியை மாவட்டமாக அறிவிக்க நீதிமன்றத் திறப்பு விழாவின் மூலம் விதை போட்டிருக்கிறார் முதல்வர். அதை ஆத்தூர் சார்பில் எதிர்ப்போம்” என்றார் ஸ்டாலின்.

மேலும், இந்த நீதிமன்றத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சிலர், “இது எல்லாமே எடப்பாடியைத் தனி மாவட்டமாக்கச் செய்யப்படும் முன்னேற்பாடுகள்தாம். அப்படி எடப்பாடி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டால் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை எடப்பாடி மாவட்டத்தில் சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.

- ஆரா


மேலும் படிக்க


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பிக் பாஸ் 3: மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன?


ஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி!


கோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க?


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


திங்கள், 19 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon