மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

கோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க?

கோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க?

கோமாளியின் சில அர்த்தங்கள்

கோமாவில் இருந்ததால் 16 ஆண்டுகளை இழந்த ஒரு கேரக்டர் நவீன காலத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது கோமாளி திரைப்படம். 16 ஆண்டுகள் பின் தங்கிவிட்டவருக்கு, புதிய உலகத்தைச் சொல்லிக்கொடுக்க முனையும் சிலர், இறுதியில் அந்தக் கோமாளியிடமிருந்து என்னவெல்லாம் கற்றுக்கொள்கிறார்கள் எனக் கதை முடிகிறது.

90’ஸ் கிட்ஸ் Vs 20’ஸ் கிட்ஸ் என ஒவ்வொரு மாதமும் ஒரு பஞ்சாயத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் இணையச் சச்சரவுகளிலிருந்து உதிர்ந்த முத்துகள் பலவற்றைக் கோத்து உருவாக்கப்பட்ட கதையாக இருந்தாலும், அவற்றை வரிசைப்படுத்திய விதமும், ஒன்றையொன்று சந்திக்கும் இடங்களும் கச்சிதமாகப் பொருந்தியதால் கோமாளி நல்ல திரைப்படமாக மாறியிருக்கிறது. அப்படி கோமாளி திரைப்படத்தின் மூலம் சொல்லப்பட்ட சில முக்கிய விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

கேட்ஜெட்ஸ்

மனிதர்களுக்குப் பயன்பட உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கேட்ஜெட்களுக்கு, மனிதர்கள் பயன்பட்டுக்கொண்டிருப்பதை விளக்கிய இடம் சிறப்பான ஒன்று. வாய் திறந்து பேசாத கேட்ஜெட்களை அதிகமாகப் பயன்படுத்துவதால், எப்படிப் பேச வேண்டும் என்றே தெரியாமல் வளர்ந்த குழந்தையாகக் காட்டப்படும் கேரக்டர் நியாயமான ஒன்று. விளையாட்டு என்பதே இருவருக்கிடையில் நடைபெறும் உணர்வு மற்றும் கருத்துப் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்போது வெளியாகும் ஆண்ட்ராய்டு கேம்களில் பெரிதாக இந்த உணர்வுப் பரிமாற்றமும் கிடையாது. கேம்களுக்கிடையில் ஒளிபரப்பப்படும் விளம்பர வீடியோக்களை மக்கள் பார்க்க வேண்டும் என்பதே இப்போதைய ஆண்ட்ராய்டு கேம்களின் அடிப்படை. அப்படி விளம்பரங்கள் இடம்பெறக் கூடாது என்றால், அதற்குப் பணம் கொடுத்து விளையாட வேண்டும். ஒரு குழந்தை தனது பொழுதைப் போக்கவே பணம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதை யாருமே அறியவில்லை. அதிலும், கூகுள் - அமேசான் - ஃப்ளிப்கார்ட்டில் பெற்றோர்கள் எதை அதிகம் தேடினார்களோ, அந்தப் பொருட்களின் விளம்பரமே கேம்களில் அதிகம் இடம்பெறும். ஒருவரது ஸ்மார்ட்போனில், அவரது குழந்தை கேம் விளையாடியபோது ஒளிபரப்பான காண்டம் விளம்பரத்தைப் பார்த்துவிட்டது. அதைப்பற்றி அறிய விக்கிபீடியாவில் தேடி “அப்பா, இதனால்தான் எனக்கு தம்பி பாப்பா கிடைக்கலையா?” என அந்தக் குழந்தைக் கேட்டபோது அலறிவிட்டார் மனிதன். 20’ஸ் கிட்ஸ் ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ‘இந்த ஸ்மார்ட்போன்கள், அவர்களை ஸ்மார்ட்டாக மாற்றுகின்றனவா?’ என்றால், இல்லை.

இணையதளம் எனும் இரக்கமில்லாத இடம்

“ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது” என்பது நீதிமன்றங்களில் கடைப்பிடிக்கப்படும் நெறிமுறை. ஆனால், இன்ஸ்டண்ட் நீதிமன்றங்களாக மாறிப்போயிருக்கும் சமூக வலைதளங்கள், தங்களது தளத்துக்கு வருபவை எல்லாவற்றுக்கும் அலசி ஆராயாமல் தீர்ப்பளித்துவிட்டு, நீதிபதி பேனா முனையை உடைப்பதுபோல, என்டர் பட்டனை அசால்ட்டாக தட்டிவிட்டுச் செல்கின்றனர். அதுபோல, ஒருவர் முத்தம் கொடுத்துவிட்டார் என்ற காரணத்துக்காக அந்த வீடியோவை ஆயிரக்கணக்கில் ஷேர் செய்து, அவர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்டவரின் குடும்பத்திலேயே தெருவில் இழுத்துவிடும் செயலை சமூக வலைதளங்களும் டிஆர்பி பின்னால் ஓடும் மீடியாக்களும் சிறப்பாகச் செய்கின்றன. படத்தில் இடம்பெறும் கேரக்டருக்கு வயது முப்பதுக்கு மேல் என்றாலும், மனது 17 வயது எனும்போது அவரை மனநோய் பாதிக்கப்பட்டவராகவே கருத வேண்டும் எனும்போது, இன்ஸ்டன்டாக கொடுக்கப்பட்ட அந்த தண்டனைக்குப் பொறுப்பேற்றுக்கொள்வது யார் என்ற கேள்வியெழுகிறது. தனியாக செய்தால் சம்பவம்; கூட்டமாகச் செய்தால் சரித்திரம் என்ற மாடலில் இயங்கும் சமூக வலைதளவாசிகள் பொறுப்புடன் செயலாற்றும் வரை இதுபோல பாதிக்கப்படுபவர்களைக் காப்பாற்றவே முடியாது.

வீர பரம்பரைகள்

இன்றைய வீர பரம்பரைகள் எல்லாமே ஒரு காலத்தில் வெள்ளைக்காரனிடம் அடிமைபட்டுக் கிடந்தார்கள் என்பதை நினைவுகூரும்போது ஆயிரம் வருடத்துக்கு முந்தைய வரலாற்றை ஒவ்வொரு சாதி சங்கங்களின் கூட்டத்தின்போதும் கேட்பது ஒரு நகைச்சுவையான விஷயம். அப்படிப்பட்ட வெள்ளையர்களிடமிருந்து போராடி சுதந்திரம் வாங்கியது, இன்னாரெல்லாம் ஆள வேண்டும் என்பதற்காகவோ, இன்னாரெல்லாம் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல என்பதை எந்த அரசியல்வாதியும் உணர்வதில்லை. மாறாக, ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு சாதியக் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு தங்களது ஆள் பலத்தைக் காட்டி, அதிகாரத்தையே மிரட்டிப் பெறுவதை தமிழக அரசியல் அரை நூற்றாண்டாகக் கண்டுவருகிறது. சரி, அந்த சாதி மக்களாவது முன்னேறுகிறதா என்றால் அதுவும் இல்லை. பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் பிள்ளையின் கையில் நோட்டுப் புத்தகத்தைக் கொடுப்பதற்கு முன்பாக சாதி கயிற்றைக் கட்டுகிறது. இவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டியது எத்தனை அவசியம் என்பதைப் படம் சொல்லத் தவறிவிட்டது. க்ளைமேக்ஸ் நெருங்கியதால், அடுத்தடுத்த மேட்டருக்குத் தாவிவிட்டது.

யார் மனிதன்?

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் ராமலிங்க அடிகள். அவர் போல பயிரைக் கண்டு வாடாத சமுதாயமாக மாறிவிட்டாலும், நெருங்கி நிற்கும் மனிதனின் துன்பம் கண்டுகூட அசையாத மனிதர்களை கோமாளி ரிப்போர்ட் செய்கிறான். ரயிலில் ஏறியதும் ஸ்மார்ட்போனைத் திறந்து படம் பார்க்கத் தொடங்கிய மனிதர் ஒருவர், அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததுகூடத் தெரியாமல் கடைசி ஸ்டேஷனில் சென்று இறங்கியதைக் கண்ட ஒருவர், அவரை அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்ற சங்கதியை அறிந்தபோதே உள்ளூர ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. சென்னை பெருவெள்ளத்தின்போது கேட்காமலேயே அள்ளி அள்ளி கொடுத்த நிவாரணப் பொருட்களைப் பார்த்தபோதெல்லாம் வாழ்வதற்கான ஓர் ஒளி தெரிந்தது. இவ்வளவு ஏன், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயலும் மனிதர்களை, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இன்னொரு மனிதன் வந்து காப்பாற்றும்போது ஒரு மனநிம்மதி ஏற்படுகிறதே... அதை என்ன சொல்வது. இப்படி ஆங்காங்கே மனிதம் எனும் சொல் நினைவுக்கு வந்தாலும், சில நாட்களுக்கு முன் திருத்தணியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நான்கு பேர் சேர்ந்து ஒருவரை வெட்டும்போது இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சிதறி ஓடினார்களே அப்போது என்ன செய்வது என மனிதம் இருக்கிறதா, இல்லையா என்ற விவாதத்தை இழுத்துக்கொண்டே போகலாம். ஆனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மை அதிகரித்து, சுயநலமாக வாழும் சதவிகிதம் குறையும்போது மனிதம் எனும் சொல் மேலும் புனிதமடையும்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறையைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் வரும் ‘என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க?’ என்ற கேள்வியே தோன்றும். அதைக் கடந்து, இந்த கேள்வி ஏன் தோன்றியது என்று பார்க்காத வரை அவர்கள் 90’ஸ் கிட்ஸாக இருந்தாலும் சரி, 2K கிட்ஸாக இருந்தாலும் சரி, கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கும். ஆனாலும், கோமாளி கொஞ்சம் கலகலப்பாகவே செல்வதால், இந்தப் படம் எல்லா தலைமுறையையும் ரசிக்க வைக்கும்.

- கோமாளியின் நண்பன்


மேலும் படிக்க


மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!


உடலுறவு இல்லாமல் "உறவு" சாத்தியமில்லையா?


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களை மிஞ்சும் கலெக்டர்கள்!


அத்திவரதரை தினமும் தரிசித்த ஒரே ஒருவர்!


திமுக சரவணனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்: பாஜக


ஞாயிறு, 18 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon