மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்

முப்படைகளுக்கும் ஒரே தலைவர்:  அன்றே எச்சரித்த காமராஜர்

ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி முப்படைகளுக்கும் ஒரே தலைவர் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் பங்கு என்ன என்பது பற்றிய தகவல்கள் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகின்றன. ராணுவத் தலைவரை நியமிப்பதில் காமராஜருக்கு என்ன பங்கு என்று கேட்கிறீர்களா?

காமராஜர் பற்றி, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்ற தலைப்பில் வீரபாண்டியன் எழுதிய புத்தகத்தில் இருந்து சில பகுதிகளைதான் இதற்கு பதிலாக பகிர்ந்து வருகிறார்கள். பொள்ளாச்சி விஜயராகவன் என்பவர் பகிந்த வாட்ஸ் பதிவு இதோ...

தமிழ் நாட்டின் முதலமைச்சராயிருந்த காமராஜர் ஒருமுறை டெல்லியில் பிரதமர் நேருவைச் சந்திக்கப் போகிறார். நேருவோ வழக்கமான உற்சாகத்தோடு காணப்படவில்லை ; மனத்தில் ஏதோ சிந்தனை அலை பாயக் கவலையோடு இருந்தாராம்.

பிரதமரைப் பார்த்துப் பல்வேறு செய்தி களைப் பேசுவதற்காக ஆர்வத்தோடு போன காமராஜர், என்னடா இவர் இப்படி உட்கார்ந்திருக்கிறாரே.. இவரிடம் எப்படி தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளைத் கேட்டுப் பெறுவது...? என்னும் தயக்கத்தோடு அவரே பிரதமரிடம் ஆரம்பித்திருக்கிறார் .

எப்பவுமே கல கலப்பா இருப்பீங்க... இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு..?

நேரு விரக்தியோடு, ’நம்ம ராணுவத் தளபதி திம்மையாவுக்கும், இராணுவ மந்திரி கிருஷ்ண மேனனுக்கும் எந்த நாளும் ஒரே தகராறா இருக்கு காமராஜ். திம்மையா கோப்புகளை மந்திரிக்கு அனுப்ப முடியாதுங்கிறார். கிருஷ்ண மேனனோ , திம்மையா தளபதியாய் இருக்கிறவரை...தான் மந்திரியாக வேலை பார்க்க முடியாதுங்கிறார். ராணுவ விஷயமா இருக்கிறதாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்தச் சிக்கல எப்படி தீர்க்கிறதுன்னே எனக்குப் புரியலே..." என்றாராம்.

இந்த ரெண்டு பேர்ல யார வைச்சுக்கனும்... யாரக் கழட்டி விடனும்னு நெனைக்கிறீங்க...? என்று கேட்டார் தலைவர்.

கிருஷ்ணமேனன் மூத்த அரசியல்வாதி; எனக்கு வாத்தியாராகவே இருந்தவர். அவரை நாம விட முடியாது. திம்மையாவைத்தான் ஏதாவது பண்ணியாகனும். என்றார் நேரு.

கொஞ்சம் கூடத் தயங்காமல், உடனே காமராஜர் சொன்னார். நீங்க உடனே கேபினட் மீட்டிங்க போட்டு, திம்மையாவிற்கும் கேபினட் அந்தஸ்து கொடுங்க... அவர் கூட கெட்டிக்கார அதிகாரிகள'டெபியூட்' பண்ணி, பணத்தையும் கொடுத்து, ஆறு மாசத்துக்கு வெளிநாடுகள்ல சுத்திட்டு வரச் சொல்லுங்க. உலகம் பூரா புதுசா வந்திருக்கிற இராணுவ தள வாடங்கள் பத்தி அவங்க ' ஸ்டடி'பண்ண போறாங்கன்னு கேபினட்ல தீர்மானம் போட்டு விட்டுடுங்க. அவங்க போய் ' ரவுண்ட்' அடிச்சுட்டு வரட்டும். அதுக்குள்ளே நீங்க இங்கே பண்ண வேண்டிய மாத்தறதையெல்லாம் பண்ணிப்புடலாம்..."

வியப்போடு கேட்டுக் கொண்டிருந்த நேரு திம்மையா திரும்பி வந்ததும் அவரை எங்கே 'அக்காமடேட்' பண்றது.? என்று கேட்டார்.

பளிச்சென்று அடித்தார் பெருந்தலைவர். "இப்ப திம்மையா இந்தியாவின் மொத்த ராணுவத்துக்கும் தளபதியா இருக்கார். இதுவே ரொம்ப டேஞ்ஜர். அவர் நினைச்சா ஒரே ராத்திரியிலே பிரைம் மினிஸ்டரையே ஹவுஸ் கஸ்டடியில வச்சுப்புடலாம். அவரு திரும்பி வர்ரதுக்குள்ளே மூணு படைகளுக்கும் மூணு தனித்தனி தளபதிய நியமிச்சுடுங்க. அவரு பல்லையும் புடுங்கிடலாம்; வந்து பார்த்துட்டு அவரால ஒண்ணும் முட்ட முடியாது. ஏகத்துக்கு தளபதியா இருந்து நாட்டாமை பண்ணின ஒருத்தர் ஒரே ஒரு படைக்குத் தளபதியா இருக்க சம்மதிக்கவும் மாட்டார். வெளியேறத்தான் நினைப்பாரு. அமைதியாய் ஓய்வு கொடுத்து வீட்லே ஒக்கார வச்சுப்பிடலாம் ! " என்று தலைவர் பேசப் பேச நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து, மகிழ்ச்சி தாள முடியாமல் காமராஜரைக் கட்டித் தழுவிக்கொண்டு...

" Kamaraj... Fantastic Kamaraj...! What a burte common sense ! "

தலைவர் காமராஜர் சொன்னபடியே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த திம்மையா தானே ஓய்வு பெற்று வெளியேறினார். அரசியல் சதுரங்கத்தில் தனது அனுபவ அறிவை வைத்தே காய்களை நகர்த்திக் களம் கண்டவர் காமராஜர்” என்று போகிறது அந்த சம்பவம்.

”ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் ஒரே தலைவரைக் கொண்டு வந்தால் நாட்டில் ராணுவ ஆட்சியை நிலை நிறுத்தி ஒரே இரவில் பிரதமரையே வீட்டுக் காவலில் வைத்துவிடலாம் . இது ரொம்ப ஆபத்து” என்று காமராஜர் எச்சரித்த காரியத்தைத்தான் இன்று பிரதமர் மோடி செய்திருக்கிறார்.


மேலும் படிக்க


பிக் பாஸ் 3: மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன?


ஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி!


கோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க?


மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!


உடலுறவு இல்லாமல் "உறவு" சாத்தியமில்லையா?


ஞாயிறு, 18 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon