மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

ரத்த அழுத்தம்: அப்பல்லோவில் வைகோ

ரத்த அழுத்தம்: அப்பல்லோவில் வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவப் பரிசோதனைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றிவரும் தலைவர்களில் ஒருவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. 75 வயதிலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து தானே வாதாடுவது என தொடர்ச்சியாக களப் பணியாற்றி வருகிறார். மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசிவருவதால் வைகோ மீது தேசிய அளவிலும் கவனம் குவியத் துவங்கியுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு ஓய்வில்லாமல் நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டதால் வைகோவுக்கு சிறிது சோர்வு ஏற்பட்டது. இதனை கடந்த 15ஆம் தேதி நடந்த வடசென்னை மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திலேயே வெளிப்படுத்தியிருந்த வைகோ, “இடைவிடாத உழைப்பு மற்றும் ஓய்வில்லாத அலைச்சலால் நான் சற்று பாதிக்கப்பட்டிருக்கிறேன். இன்று ஒருநாள் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், மாநாட்டு வேலைகள் நிறைய இருப்பதால் கூட்டத்திற்கு வந்துவிட்டேன்” என்று பேசினார்.

இந்தச் சூழலில் சென்னையிலிருந்து விமானம் மூலமாக இன்று (ஆகஸ்ட் 18) மதுரை சென்ற வைகோ, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி வைகோவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ மேற்கொள்ள இருந்த பிரச்சாரப் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால் 20,21,22 ஆகிய நாள்களில் வைகோ தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட தமிழக எம்.பி.க்கள், வைகோ சமீபமாக அதிகம் கோபப்படுவதுதான் அவருடைய உடல்நலக் குறைவுக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

காஷ்மீர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் உரையாற்றி முடித்துவிட்டு சென்ட்ரல் ஹாலுக்கு வைகோ சென்றிருக்கிறார். அப்போது, அங்கு இருந்த திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், ‘அண்ணே உங்க உரை சிறப்பா இருந்தது. ஆனா, நீங்க பேசும்போது அதிகமாக கோபப்படுறீங்க. கோபத்தை மட்டும் கொறச்சுக்கலாமே’ என்று அன்பாக அட்வைஸ் செய்திருக்கிறார்.

இதைக் கேட்டு கொந்தளித்த வைகோ, ‘நான் அதிகம் கோபப்படுகிறேனா, என் கோபத்த கொறச்சுக்கச் சொல்றதுக்கு நீ யார்’ என்று கூறி ஏகத்துக்கும் டென்ஷனாகிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் இருக்கும் சென்ட்ரல் ஹாலில் வைகோ இவ்வாறு பேசியதைக் கேட்ட வடமாநில எம்.பி.க்கள் இவர் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். இதுபோல ஒவ்வொரு விஷயத்துக்கும் கோபப்படுவதால் வைகோவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி உடல்நலக் குறைவுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் எம்.பி.க்கள்.


மேலும் படிக்க


பிக் பாஸ் 3: மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன?


ஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி!


கோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க?


மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!


உடலுறவு இல்லாமல் "உறவு" சாத்தியமில்லையா?


ஞாயிறு, 18 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon