மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!

பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!

வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்த எடுப்பிலேயே ரெய்டு செல்ல வேண்டாமென்றும் அதற்கு முன் பற்பல நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று வருமான வரித்துறை ஆணையர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வருமான வரித்துறை என்றாலே கடந்த 2014-19 பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சியினரை மிரட்டவும், அரசியல் காரணங்களுக்காக கூட்டணிக் கட்சியினரையே கூட மிரட்டவும்தான் பயன்பட்டதாக பல புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவும் எதிர்க்கட்சிகள் மட்டுமே வருமான வரித்துறையால் குறிவைக்கப்பட்டன என்ற புகார் தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும் எழுந்தன.

வருமான வரித்துறையை அரசியல் ரீதியான பழிவாங்கலுக்குப் பயன்படுத்துவது காங்கிரஸ் ஆட்சியிலேயே நடைபெற்றதுதான் என்றாலும் பாஜக ஆட்சியில்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் முரட்டுத் தனமாக நடந்துகொள்ள ஆரம்பித்தனர்.

தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரது வீட்டுக்கு ரெய்டு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், வீட்டில் இருந்த அவரது உறவினர் மகனை கையைப் பிடித்து முறுக்கிக் கடுமையாகத் தாக்கினர். ‘நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேட்க, அப்போதும் முரட்டுத் தனமாகவே பதிலளித்துள்ளனர். தி. நகரில் இருக்கும் பிரபல ஜவுளி நிறுவனத்தில் ரெய்டுக்குச் சென்றபோது அதன் உரிமையாளர் முன்பாகவே, அந்நிறுவனத்தின் கணக்குப் பிரிவு ஊழியர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இதுபோன்ற முரட்டுத் தனமான நடவடிக்கைகளை எல்லாம், வட மாநிலங்களை விட தென் மாநிலங்களிலேயே அதிகம் அரங்கேற்றி வருகிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். ஆனாலும், வருமான வரி உட்பட அரசின் எந்த உத்தரவாக இருந்தாலும் அதை முறையாகக் கடைபிடிப்பது தென்னிந்திய மக்கள்தான்.

இந்த நிலையில்தான் இப்போது வருமான வரித்துறை ஆணையர்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் ரெய்டு என்பதை மட்டும் நோக்கியே வருமான வரித்துறையின் நகர்வுகள் இருக்கக் கூடாது என்று சுட்டிக் காட்டியிருக்கிறது.

வருமான வரி தாக்கல் செய்வோர் தங்களது ஆவணங்களில் கணிசமான வருமானத்தை மறைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் உடனே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கிடக் கூடாது. மிரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. தொடர்புடையவர்களுக்கு எஸ் எம் எஸ் மூலமாக தகவல் தெரிவித்து நினைவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வருமான வரியில் இருந்து மறைக்கப்பட்டது பெரும் அளவிலான தொகை என்றால்தான் ரெய்டு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அப்போதும் உரிய அணுகுமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வருமான வரி ஆணையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அண்மையில் காஃபி டே அதிபர் சித்தார்த்தா வருமான வரித்துறையினரின் மிரட்டல் ஏற்படுத்திய மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத் தக்கது. சுதந்திர தின உரையில் கூட செல்வந்தர்களை மதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதை முதலில் உங்கள் வருமான வரித்துறையினருக்கு சொல்லுங்கள் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதற்கு பதில் அளித்திருந்தார் என்பதும் நினைவுபடுத்தப்பட வேண்டிய செய்தி.


மேலும் படிக்க


பிக் பாஸ் 3: மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன?


ஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி!


கோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க?


மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!


உடலுறவு இல்லாமல் "உறவு" சாத்தியமில்லையா?


ஞாயிறு, 18 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon