மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

ஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி!

ஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி!

தமிழக முதல்வராக 2017 பிப்ரவரி மாதம் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியின் அரசு இதோ கவிழும், அதோ கவிழும் என்று எதிர்க்கட்சியான திமுகவும், அதிமுகவின் உட்கட்சி எதிரிகளும் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் 2017 கடந்து 2018 கடந்து 2019ஆம் ஆண்டிலும் எட்டு மாதங்களைக் கடந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி.

தமிழக முதல்வர் நாற்காலி தனக்கு எந்த வகையில் கிடைத்தாலும், அதைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தனது சாமர்த்தியங்கள் அத்தனையையும் பயன்படுத்தி வருகிறார் எடப்பாடி. ஆனாலும் அதிகாரத்துக்கும் அவருக்கும் இடையேயான போராட்டம் இதோ அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது.

சமீபத்தில் கிருஷ்ணா நதிநீர் பற்றி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்திப்பதற்காகத் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும், நிதியமைச்சர் ஜெயக்குமாரும் கடந்த ஆகஸ்டு 9ஆம் தேதி ஆந்திரா சென்று வந்தனர். இந்தப் பயணத்துக்குப் பிறகுதான், ‘ஆந்திர அமைச்சரவை போல தமிழகத்திலும் ஏன் ஐந்து துணை முதல்வர்கள் பதவி ஏற்படுத்தப்படக் கூடாது?’ என்ற கேள்வி அமைச்சர்களுக்கிடையே அதிகமாக எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஆந்திராவில் மக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலில் ஜெயித்தார் ஜெகன் மோகன். வாக்குகள் எல்லாம் ஜெகன் மோகனுக்காக விழுந்தது. ஆனாலும் அம்மாநிலத்தில் உள்ள சமுதாயங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவையை அமைத்தார். ஐந்து துணை முதல்வர்கள் பதவிகளை ஏற்படுத்தினார். அப்படி இருக்க, பல்வேறு சிக்கல்கள், நெருக்கடிகளுக்கு இடையே நகர்ந்துகொண்டிருக்கும் எடப்பாடி அரசு ஏன் ஒன்றுக்கும் மேற்பட்ட துணை முதல்வர்களைக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் கேள்வி.

மேலும், இந்த அடிப்படையில் வன்னியர் சமுதாயத்தின் சார்பில் சி.வி.சண்முகம், கவுண்டர் சமுதாயத்தின் சார்பில் வேலுமணி, மீனவச் சமுதாயத்தின் சார்பில் ஜெயக்குமார் ஆகிய மூவரைத் துணை முதல்வர்கள் ஆக்கலாம் என்று முதல்வர் எடப்பாடியிடம் வேலுமணி தரப்பிலிருந்து சொல்லியிருக்கிறார்கள். இதன்மூலம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இப்போது இருக்கும் கொஞ்சநஞ்ச செல்வாக்கையும் குறைத்துவிடலாம் என்பது எடப்பாடிக்குச் சொல்லப்பட்டிருக்கும் யோசனை. இதற்கிடையே துணை முதல்வர்களில் தலித் சமுதாயத்தின் பிரதிநிதியாக இருக்க சபாநாயகர் தனபால் விரும்புவதாகக் கேள்வி. இந்த ஆட்சியைக் கட்டிக்காப்பாற்றிக் கொண்டுவந்ததில் அவருக்குப் பெரும் பங்குண்டு. எனவே மீதமிருக்கும் காலமாவது அமைச்சராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் தனபால்.

இப்படியாக ஆந்திராவைப் போல ஐந்து துணை முதல்வர்கள் தமிழ்நாட்டுக்கும் வேண்டும் என்றும், அப்போதுதான் தேர்தலை இன்னும் திடமாக எதிர்கொள்ளலாம் என்றும் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இது நெருக்கடியாக மாறிக்கொண்டிருக்கிறது. துணை முதல்வர் பதவிகளை உருவாக்கி, அதில் முக்கிய சமுதாயத்தினருக்கு முன்னுரிமைக் கொடுத்து அதை வைத்து ஆட்சியைப் போலவே கட்சியிலும் எடப்பாடி தன் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அமைச்சர்களிலேயே சிலர்.

இந்தப் புதிய நெருக்கடியை எடப்பாடி எப்படி சமாளிக்கப் போகிறார்?

- ஆரா


மேலும் படிக்க


மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!


உடலுறவு இல்லாமல் "உறவு" சாத்தியமில்லையா?


டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களை மிஞ்சும் கலெக்டர்கள்!


அத்திவரதரை தினமும் தரிசித்த ஒரே ஒருவர்!


திமுக சரவணனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்: பாஜக


ஞாயிறு, 18 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon