மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

வெள்ளியங்கிரி மலை அடிவாரம்: வீடுகள் கட்ட தடை!

வெள்ளியங்கிரி மலை அடிவாரம்: வீடுகள் கட்ட தடை!

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில் சுமார் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவார கிராமங்களான ஆலந்துறை - காளிமங்கலத்தில் 600 வீடுகளும், தென்கரை கிராமத்தில் 1,500 வீடுகளும், பேரூர் செட்டிப்பாளையம் கிரமத்தில் 2,500 வீடுகளும், பச்சன வயல் கிராமத்தில் 70 வீடுகளும் என 4,500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணிகளை குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வி.லோகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் பெருகி வருவதால், எங்களது குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. வனப்பகுதியில் தொடரும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் நிலச்சரிவு அபாயம், விலங்குகள் நடமாட்டம், இயற்கை வள பாதிப்பு, மழை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளையும் ஆக்கிரமித்து குடியிருப்புகள் சட்ட விரோதமாக கட்டப்படுவதால் இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த திட்டத்துக்காக தமிழக வனத்துறை வழங்கியுள்ள தடையில்லாச் சான்றிதழ் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தடையில்லாச் சான்றில் சில வித்தியாசமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆலந்துறை, செட்டிப்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 29 ஆயிரம் சதுர மீட்டருக்கு கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இந்தப் பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இங்கு வீடுகள் கட்டினால் மனிதர்கள் விலங்குகள் மோதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தடையில்லாச் சான்று வழங்கப்படுகிறது.

யானைகளுக்குப் பிடித்தமான பயிர்களை இந்தப் பகுதிகளில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் குடியிருப்பைச் சுற்றி அகழி அமைக்க வேண்டும்.

வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் கேமரா உள்ளிட்ட முன்னெச்சரிக்கை உபகரணங்களை இந்தப் பகுதிகளில் பொருத்த வேண்டும். குடியிருப்புகளைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். யானைகள் வந்தால் பொதுமக்கள் அவற்றை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வனவிலங்குளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையிலான தடைகளை ஏற்படுத்தவோ, இயற்கையான நீரோடைகளைத் தடுக்கவோ கூடாது. யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் கட்டடங்கள் சேதம் அடைந்தாலோ, மனித உயிர்களுக்கு பலி ஏற்பட்டாலோ அதற்கு வனத்துறை பொறுப்பேற்காது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வனத்துறையிடம் இழப்பீடு எதுவும் கேட்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதிகளில் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க முடியாது என்ற நிபந்தனையுடன் வீடுகள் கட்டுவதற்கு தடை இல்லா சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நகரமைப்பு துறை, மலை பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறாமல் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், மலைப்பகுதியில் விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மூடப்பட்ட 'இண்டஸ்' கல்லூரியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இந்த வீடுகள் கட்டப்படுவதாக மனுதாரர் புகார் தெரிவித்தார்.

அரசு தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், வீடுகள் கட்டப்படவுள்ள நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றுவதற்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை மட்டுமே வழங்கியுள்ளதால், மேற்கொண்டு கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனையேற்ற தமிழக அரசும், முறையான அனுமதிகள் பெறும் வரை வீடுகளை கட்டப்போவதில்லை என உறுதியளித்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon