மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

சச்சின்: உலகமே திரும்பிப் பார்த்த நாள்!

சச்சின்: உலகமே திரும்பிப் பார்த்த நாள்!

1990ஆம் ஆண்டின் இதே நாளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தை சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்தார். இன்று சச்சின் டெண்டுல்கர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நாள் என்று, சர்வதேச கிரிக்கெட் வாரியமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் புகழாரம் சூட்டியுள்ளன.

மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பேட்டிங் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தம் 34,357 ரன்களைக் குவித்துள்ள சச்சின், ஒருநாள் போட்டிகளில் 18,000 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 15,000 ரன்களும் கடந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், 100 சர்வதேச சதங்கள் என சச்சின் டெண்டுல்கர் படைத்த பேட்டிங் சாதனைகள் பல இன்னமும் முறியடிக்கப்படாமல் உள்ளன.

ஓய்வுபெற்ற பின்னரும் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் புகழும் ஓங்கியே இருக்கிறது. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் இன்றைய தினத்தில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்ததை சர்வதேச கிரிக்கெட் வாரியமும் இந்திய கிரிக்கெட் வாரியமும் நினைவுகூர்ந்துள்ளன. இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் இதே நாள் (1990 ஆகஸ்ட் 14) சச்சின் தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்தார். இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 408 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில் இந்திய அணி, முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, 17 வயதான சச்சின் டெண்டுல்கர் களத்தில் இறங்கி இந்திய அணியைத் தோல்வியிலிருந்து மீட்டார். சிறிய வயதில் சச்சின் அடித்த 119 ரன்கள் உலகையே அன்று திரும்பிப் பார்க்க வைத்தது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் சதமடித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “இந்த நாளில் 1990ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார். ஆட்டத்தின் கடைசி நாளில் ஆட்டமிழக்காமல் அவர் அடித்த 119 ரன்கள் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியிலிருந்து மீட்டது. இளம் வயதில் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனை சச்சினுக்குக் கிடைத்தது” என்று பதிவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், “1990ஆம் ஆண்டின் இதே நாள் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தபோது உலகமே திரும்பிப் பார்த்தது. ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தனது 17ஆவது வயதில் லிட்டில் மாஸ்டர் சச்சின் சதம் அடித்தார். என்ன ஒரு தருணம்!” என்று புகழாரம் சூட்டியுள்ளது.

1989ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் அறிமுகமானார். அந்தத் தொடரில் அவர் சதம் அடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்தத் தொடரில்தான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்தார். சச்சினுக்கு மறக்கமுடியாத நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதியை இந்தியக் கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் வாரியமும் புகழாரம் சூட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளன.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon