மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

காஷ்மீர்: காங்கிரஸில் பல குரல் ஏன்? - பிரியங்கா பதில்!

காஷ்மீர்: காங்கிரஸில் பல குரல் ஏன்? - பிரியங்கா பதில்!

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு நடந்துகொண்ட விதம் ஜனநாயகத்தின் அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்திலுள்ள உம்பா கிராமத்தில் நிலத்தைக் கொடுக்க மறுத்த பழங்குடியினரை அந்தக் கிராமத்தின் முன்னாள் தலைவர் சரமாரியாகச் சுட்டுக்கொன்றார். உத்தரப் பிரதேச மாநிலத்தையே கடந்த மாதம் உலுக்கிய இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தக் கிராமத்துக்குச் சென்று பழங்குடியின மக்களைச் சந்திக்க முயன்றார் பிரியங்கா. ஆனால், அம்மாவட்ட போலீஸார் பிரியங்காவை அங்கே செல்ல முடியாமல் கைது செய்தனர்.

அப்போது தன்னை தேடிவந்து சந்தித்த அந்தக் கிராமத்தினரிடம், ‘விரைவில் உங்கள் கிராமத்துக்கு நான் வருவேன்’ என்று வாக்குறுதி அளித்திருந்தார் பிரியங்கா. அதன்படியே நேற்று (ஆகஸ்ட் 13) உம்பா கிராமத்துக்குச் சென்றார் பிரியங்கா. அங்கே வயல்வெளிகளில் வரப்புகளைக் கடந்து கிராமத்துக்குள் சென்றார். கிராமத்துப் பெண்கள் பிரியங்காவின் கையைப் பிடித்து வரப்புகளில் அவர் நடந்து செல்ல உதவினர். அங்குள்ள மக்களிடம், ‘எப்போதும் நான் உங்களுக்காக இருக்கிறேன். உங்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன்’ என்று ஆறுதல் அளித்துவிட்டுப் புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்காவிடம் காஷ்மீர் விவகாரம் பற்றி கேட்டனர்.

“காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு பின்பற்றியிருக்கும் நடைமுறைகள் முழுக்க முழுக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை. மேலும், ஜனநாயகத்தின் அனைத்து நெறிமுறைகளுக்கும் எதிரானவை. இதுபோன்ற முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்போது சட்ட முறைமைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் இவை எதுவும் மத்திய அரசால் பின்பற்றப்படவே இல்லை. காங்கிரஸ் கட்சி எப்போதும் அரசியல் அமைப்பு சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கப் போராடும்” என்று கூறினார் பிரியங்கா.

ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா 370ஆவது பிரிவை ரத்து செய்த பிறகு பிரியங்கா காந்தி முதன்முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸுக்குள்ளேயே ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்ட சிலர் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை ஆதரித்தது பற்றி கேட்டபோது,

“பாஜக ஒரே ஒரு குரலைத்தான் கேட்கும். ஆனால், காங்கிரஸ் தனக்குள் இருக்கும் பல்வேறுபட்ட குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கும். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸின் கருத்து என்பது காங்கிரஸ் காரிய கமிட்டியின் கருத்துதான். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் அறிக்கையில் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டிருக்கிறார்களே?” என்று திருப்பிக் கேட்டார்.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon